அவர் ஒரு இளம்கலைஞர். இசையுலகின் ஆரம்பத்தில் இருந்தார். ஒருநாள் மயிலாடுதுறையில் அவரது கச்சேரி. பிரபல வித்வான்கள் பலரும் முன்வரிசையில் அமர்ந்து கச்சேரி கேட்கக் காத்திருந்தனர்.
நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று.
அந்த இசைக் கலைஞரும் சிறப்பாகவே பாடினார். ஆனாலும் நேரம் செல்லச் செல்ல குரல் தடுமாறி விட்டது. இருந்தாலும் சமாளித்துக் கச்சேரியை முடித்தார்.
நிகழ்ச்சியைக் காண பிரபல வீணை வித்வான் வைத்தியநாதய்யர் வந்திருந்தார். அவர் மற்றொருவரிடம், "அவனும் சிரமப்பட்டு நம்மையும் சிரமப்படுத்துவானேன். இவன் பேசாம சங்கீதத்தை விட்டுட்டு வேறெதாவது தொழிலைப் பார்க்கலாம்!" என்றார் சற்று உரக்க.
அது அந்த இளம்வித்வானின் காதிலும் விழுந்தது. மிகவும் மனம் வருந்தினார். ஆனால் கலங்கவில்லை. அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டார். அதுமுதல் தீவிர சாதகம் செய்ய ஆரம்பித்தார். மாமுண்டியா பிள்ளையை அணுகித் தாளநுட்பங்களைக் கற்றுக் கொண்டார். மற்றும் பல கலைஞர்களை அணுகிச் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டார். நேரம் காலம் பார்க்காமல் சாதகம் செய்தார்.
அடுத்த ஆண்டில் அதே மயிலாடுதுறையில் கச்சேரி. அந்த இளைஞர் பாட, பிரபல வித்வான்கள் தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை கஞ்சிரா, மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை வயலின், அழகநம்பி மிருதங்கம் எனப் பக்கம் வாசிக்க, கச்சேரி அமர்க்களமாக நடந்தது.
கச்சேரிக்கு வந்திருந்த வீணை வித்வான் வைத்தியநாதய்யர் பிரமித்துப் போனார். "அடடா... இத்தனை குறுகிய காலத்தில் இவ்வளவு முன்னேற்றமா, சபாஷ், சபாஷ்" என்று பாராட்டி, அவரை அழைத்து ஆசிர்வதித்தார்.
"அண்ணா! எல்லாம் உங்களால்தான். நீங்கள் முன்பொரு கச்சேரியில் 'பாடாந்திரம் சரியில்லை' என்று என்னை விமர்சித்ததால்தான் நான் இன்று வித்வான் ஆக முடிந்தது" என்றார் அந்த இளைஞர் பணிவுடன்.
இப்படித் தன்மீதான விமர்சனத்தையும் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன் திறமையை வளர்த்து இசையுலகிற்கு நிரூபித்துக் காட்டியவர், அக்காலத்தின் புகழ்பெற்ற கோனேரிராஜபுரம் வைத்யநாதய்யர் தான்.
ஆதாரம்: எல்லார்வி எழுதிய 'எங்கே அண்ணா எங்கே' |