இசையுதிர்காலம்: இளகவைத்த இசைமணி
அது ஒரு இசைவிழா. அதற்கு ஜாம்பவான்கள் பலரும் வந்திருந்தனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கச்சேரி.

விழாக் குழுவினரில் ஒருவருக்கு அப்போது பெயர்பெற்று வந்த இளம்வித்வான் ஒருவரை அழைக்க எண்ணம். தனது எண்ணத்தைப் பிற உறுப்பினர்களிடம் தெரிவித்தார். உடனே அவர்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. "அவர் குருகுல பாரம்பரியமாக இசை பயின்றவரில்லையே" என்றார் ஒருவர். "அவர் சினிமாவில் எல்லாம் நடித்தவர் ஆயிற்றே, அவரைப் போய் அழைக்கலாமா?" என்றார் மற்றொருவர். "அவர் வந்து பாடினால் மூத்த வித்வான்கள் எல்லாம் கச்சேரியைப் புறக்கணித்துப் போய்விடுவார்கள். அவர் வேண்டவே வேண்டாம்" என்றார் மற்றொருவர்.

இப்படிப் பலரின் எதிர்ப்பையும் மீறி எப்படியோ அந்த இளம்வித்வானை வரவழைப்பதில் வெற்றிபெற்றார் அந்த உறுப்பினர்.

கச்சேரி நாள். சபைக்கு வந்தார் இசைக்கலைஞர். ஜரிகை வேஷ்டி. நீண்ட வெண் பட்டு அங்கவஸ்திரம். முகத்தில் அழகான சந்தன, ஜவ்வாதுப் பொட்டு. சபையை உற்று நோக்கியவர், பின் வணங்கிவிட்டுப் பாடத் துவங்கினார். ஆனால் அவரை விரும்பாத பாரம்பரிய இசைக் கலைஞர்கள் சிலர் கச்சேரியைக் கேட்க விருப்பமில்லாமல் வெளியில் சென்று நின்றுகொண்டு, வெற்றிலை போட்டவாறே கதை பேசிக்கொண்டிருந்தனர். அதையும் கவனித்தார் அந்த இளம்பாடகர். எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் பாட ஆரம்பித்தார்.

சற்றுநேரம் சென்றது. அவையோ அவரது குரலில் மயங்கிக் கிடந்தது. அடுத்து பைரவி ராக கீர்த்தனையை தனது கந்தர்வகானக் குரலால் பாட ஆரம்பித்தார் அந்த வித்வான்.

அவ்வளவுதான். அத்தனை நேரம் வெளியே நின்று கொண்டிருந்தவர்களால் மேலும் அங்கேயே நிற்க இயலவில்லை. உள்ளே வந்து அமர்ந்தவர்கள், பாடலைக் கேட்டு மனம் இளகிப்போய் தங்களை மறந்து "ஆஹா", "ஓஹோ", "பேஷ் பேஷ்", "சபாஷ்" என்றெல்லாம் குரலெழுப்பி, கரகோஷம் செய்து தங்கள் ரசிகத்தன்மையை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி முடிந்ததும் அந்த இசைக் கலைஞரை அழைத்து மனமாரப் பாராட்டினர்.

இப்படித் தம்மை விரும்பாதவர்களையும் ரசிக்க வைத்து, இசையால் மனம் இளக வைத்த அந்த இளம்கலைஞர் ஜி.என். பாலசுப்பிரமணியம்.

ஆதாரம்: எல்லார்வி எழுதிய 'எங்கே அண்ணா எங்கே'

© TamilOnline.com