தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர் கதாகாலட்சேபத்தில் தேர்ந்தவர். பாமர ஜனங்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாகக் கதைகள் சொல்லுவார். கதைகளினூடே நல்ல நீதிகளும் இருக்கும். அவருக்கு ஜமீந்தார் முதல் சாதாரண மனிதர்வரை பல ரசிகர்கள்.
ஒருமுறை கதாகாலட்சேபம் முடிந்து மாட்டு வண்டியில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் பாகவதர். கூடவே மூட்டை முடிச்சுகளுடன் பக்கவாத்தியக் காரர்களும் வந்து கொண்டிருந்தனர்.
திடீரென வண்டி நிறுத்தப்பட்டது. 'ஐயோ, அம்மா' என்று வண்டிக்காரனின் அலறல் கேட்டது.
ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்த கிருஷ்ண பாகவதர் திடுக்கிட்டார். என்ன ஆயிற்று என்று பார்க்க வண்டியைவிட்டு இறங்கினார்.
வெளியே தீவட்டிக் கொள்ளையர்கள்! பாகவதர் பயப்படவில்லை. "உங்களுக்கு என்னப்பா வேண்டும், ஏன் இந்த வண்டியை நிறுத்தியிருக்கிறீர்கள்?" என்று அன்புடன் கேட்டார். கொள்ளையர்கள் இதற்கெல்லாம் அசரவில்லை. "ம்ம்ம். சட்டுபுட்டுனு நகையையெல்லாம் கழட்டு. பணத்தைக் கீழே வை. ஆகட்டும் சீக்கிரம்" என்று மிரட்டினர்.
பாகவதரிடமிருந்தது மட்டுமல்லாமல், பக்க வாத்தியக்காரர்களின் பணம், நகைகள் எல்லாம் கொள்ளையர்கள் கைக்கு மாறின. கொள்ளையர்கள் திரும்பிப் போகத் தயாரானபோது பாகவதர் உரக்கச் சிரித்தார்.
"என்ன சாமி சிரிக்குறீங்க, பணம், நகை போனதுல சித்தம் கலங்கிருச்சா?" என்றான் கொள்ளையர்களில் ஒருவன்.
"அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீ எங்கிட்டேர்ந்து இந்த பணம், நகையைத்தான் கொள்ளை அடிக்க முடியும். ஆனா அதைவிடப் பெரும் சொத்து ஒண்ணு இருக்கு. அதை ஒண்ணால ஒண்ணும் பண்ண முடியாதே, அதை நினைச்சுச் சிரிச்சேன்" என்றார் பாகவதர்.
"அதென்னய்யா சொத்து எங்களுக்குத் தெரியாம" என்றான் கொள்ளையர்களில் ஒருவன் ஆவலுடன்.
"அதுதான் கதாகாலட்சேபம் என்னும் சொத்து" என்றார் பாகவதர்.
"ஓ. கதை சொல்றதச் சொல்றீங்களா. நீங்க கதை சொல்றவரா? சரி, சரி.. எங்க அந்தக் கதையத் தான் கொஞ்சம் சொல்லுங்களேன் கேட்போம்" என்றான் மற்றொரு கொள்ளையன்.
உடனே கிருஷ்ண பாகவதர் தமது பக்கவாத்தியக்காரர்களுடன் அமர்ந்து கதை சொல்லத் தொடங்கினார். ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம், திருடனாக இருந்து திருந்திய வால்மீகி கதை என்று எல்லாவற்றையும் உள்ளத்தை உருக்கும் விதத்தில் சொன்னார்.
கண்களில் நீர்வடிய அவற்றைக் கேட்ட கொள்ளையர்கள் பாகவதரின் காலில் விழுந்து, "சாமி, நாங்க அறியாமத் தப்புப் பண்ணிட்டோம். மன்னிச்சிருங்க" என்று சொல்லி, கொள்ளையடித்த பொருட்களைத் திருப்பித் தந்தனர். பின், "சாமி, இனிமே திருடி வயிறு வளர்க்க மாட்டோம். உழைச்சுப் பிழைப்போம். இது சத்தியம்" என்று கூறிச் சென்றனர்.
திருடர்களின் உள்ளத்தையும் மாற்றியது கிருஷ்ண பாகவதரிடம் இருந்த அருங் கலை.
ஆதாரம்: எல்லார்வி எழுதிய 'எங்கே அண்ணா எங்கே' |