புல்லாங்குழல் இசையில் தேர்ந்தவர் சரப சாஸ்திரிகள். பெயருக்கு ஏற்றாற்போல் அவர் புல்லாங்குழல் வாசித்தால் அங்கே சரபங்கள் (பாம்புகள்) வந்துவிடும். அதுவும் புன்னாகவராளியை வாசித்தால், கேட்கவரும் பாம்புகள், வாசித்து முடித்த பின்புதான் அந்த இடம்விட்டு அகலும்.
ஒருமுறை ஒரு கல்யாணக் கச்சேரி. சரப சாஸ்திரிகள் வாசிப்பதற்காகப் புல்லாங்குழலுடன் உள்ளே நுழைந்தார். மாலையும் கழுத்துமாக அமர்ந்திருந்த மணப்பெண் நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். அவரது உருவமும், கையிலிருந்த குழலும் அவளுக்கு நகைப்பைத் தந்தன. செல்வத்தின் செழுமை செருக்கைத் தந்திருந்தது. "பூ... இவர்தானா அந்த சாஸ்திரிகள்! சும்மா இந்தச் சின்னக் குழல் ஊதறவரையா எல்லாரும் இப்படிக் கொண்டாடுறாங்க. அடடா!" என்று சொல்லிக் கிண்டலாகச் சிரித்தாள்.
சாஸ்திரிகள் காதில் இது விழுந்தது. ஆனால் அவர் அதைக் கவனியாதது போல் கச்சேரியை ஆரம்பித்தார். பல கிருதிகள் வாசித்தார். அவரது குழலிசையில் எல்லாரும் மயங்கிக் கட்டுண்டு கிடந்தனர். இறுதியாகத் தொடங்கியது புன்னாகவராளி.
எங்கிருந்தோ ஒரு நல்லபாம்பு திடீரென அந்தத் திருமணக் கூடத்துக்குள் நுழைந்தது. அவர் வாசிப்பிற்கேற்பப் படமெடுத்து ஆடத் துவங்கியது. வந்திருந்தவர்கள் அச்சத்துடனும் ஆச்சரியத்துடனும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மணப்பெண்ணும்தான்.
சரப சாஸ்திரிகள் கச்சேரியை முடித்ததும், அதுவரை ஆடிக் கொண்டிருந்த பாம்பு அவரை வணங்குவது போல் தலையைத் தழைத்தது. அங்கிருந்து வேகமாக ஊர்ந்து சென்று மறைந்தது. திருமணத்திற்கு வந்திருந்த எல்லோரும் சரப சாஸ்திரிகளின் திறனை நேரடியாகக் கண்ட மகிழ்ச்சியில் அவரைப் பாராட்டினர்.
"சே, இப்படிப்பட்ட பெரியவரைத் தவறாகப் பேசிவிட்டோமே!" என்று வருந்திய மணப்பெண், அவர் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினாள்.
ஆதாரம்: எல்லார்வி எழுதிய 'எங்கே அண்ணா எங்கே' |