புஷ்பா தங்கதுரை
பிரபல எழுத்தாளரான புஷ்பா தங்கதுரை (இயற்பெயர்: ஸ்ரீவேணுகோபாலன்) சென்னையில் காலமானார். ஆரம்பத்தில் மணிக்கொடி போன்ற இதழ்களில் எழுதிக் கொண்டிருந்த புஷ்பா தங்கதுரை, பின்னர் வெகுஜன இதழ்களில் எழுத ஆரம்பித்தார். சமூகக் கதைகளையே ஆரம்பத்தில் எழுதிக் கொண்டிருந்தவர் பின்னர் அதில் கிரைம், செக்ஸ் போன்றவற்றைப் புகுத்தி எளிதில் புகழ்பெற்றார். சாவியால் ஊக்குவிக்கப்பெற்ற இவர் கிரைம், காதல், சமூகம், மர்மம், ஆன்மீகம் என்று நிறைய எழுதியிருக்கிறார். 'இளமை எழுத்தாளர்' என்று புகழ்பெற்ற அவருக்கு, 'பச்சை எழுத்தாளர்' என்ற வசையும் கிடைத்தது. வயதான தன் தாயாரை உடனிருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்தார். 'என் பெயர் கமலா', 'சிவப்பு விளக்கு எரிகிறது', 'ஒரு பெண்ணின் அனாடமி', 'தேவை ஒரு பாவை', 'மேலே வானம்; கீழே வசந்தி', 'வனிதா வா நீ', 'நீ நான் நிலா' என்ற கவர்ச்சியான தலைப்புகளில் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய 'நந்தா என் நிலா', 'ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது', 'லீனா, மீனா, ரீனா' (அந்த ஜூன் 16ம் நாள்) போன்ற கதைகள் திரைப்படங்களாகின. "திருமணமாகாமல் எப்படி சார் இவ்வளவு செக்ஸியாக எழுதுகிறீர்கள்?" என்று ஒருவர் கேட்டதற்கு, "கொலையைப் பற்றி எழுதக் கொலைகாரனாக இருக்க வேண்டுமா என்ன?" என்று பதில் தந்தவர். அவர் உருவாக்கிய சிங் (துரைசிங்கம்), லிங்க் கதாபாத்திரம் மறக்க முடியாத ஒன்று. வெறும் வர்ணனைகள், மற்றும் சிறு சிறு உரையாடல்களைக் கொண்டே கதையை நகர்த்தும் பாணியில் தேர்ந்தவர்.

ஸ்ரீ வேணுகோபாலனாக அவர் எழுதிய 'திருவரங்கன் உலா' ஒரு முக்கியமான நாவல். ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் வரலாறு குறித்து இவர் எழுதிய நூல் பரவலான வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும். 'ஊதாப்பூ' என்ற மாத இதழின் ஆசிரியராகவும் சிலகாலம் இருந்திருக்கிறார். 'லிட்டில் புஷ்பா' என்ற இதழில் சிறுவர்களுக்காகவும் காமிக்ஸ் பாணி சாகசக் கதைகளை எழுதியிருக்கிறார். கணினி அறிவியலில் ஆர்வமாக இருந்த அவர், தாமே முயன்று இணைய தளங்களை உருவாக்குதல், பக்கங்களை வடிவமைத்தல், எழுத்துருவாக்கம் போன்ற பணிகளைச் செய்து கொண்டிருந்தார். 82 வயதிலும்கூட ஓர் இதழில் தொடர்கதை எழுதிக் கொண்டிருந்தார்.

© TamilOnline.com