கண்புரை (Cataract)
வயதாக ஆகப் பார்வை மங்குவது நாம் அறிந்ததே. நாற்பதைத் தொட்டவுடன் சிறிய எழுத்துக்களைப் படிப்பது கடினமாகும். அறுபதைத் தாண்டிய பிறகு கண்புரை ஏற்பட்டுப் பார்வை மங்கத் துவங்கும். எழுபதுகளில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும். பெரும்பாலும் மூட்டு வலி, முதுகு வலி, தலை நரை மற்றும் வழுக்கை, கண்ணில் அறுவை சிகிச்சை என்பது வயதானோருக்கு நேரும் சடங்குகள். இதை அறிந்து முதுமையை எதிர்கொள்வது நன்று.

நமது கண்ணுக்குள் இருக்கும் வில்லையில் (Lens) ஒரு திரை அல்லது படலம் உருவாகிவிடுவதே கண்புரை (Cataract) என்று அழைக்கப்படுகிறது. இது முதலில் பார்வையை மங்கலாக்கும். வெளிச்சம் குறைந்திருக்கும் இரவு நேரத்தில் பார்வை சரியாகத் தெரியாது. போகப்போக, அன்றாட வேலைகள் தடைப்படும். அந்தக் காலகட்டத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும். நீரிழிவு நோய் இருப்பவர்களுக்குக் கண்புரை சற்று முன்கூட்டியே வரலாம்.

அறிகுறிகள்
- பார்வை மங்குதல்
- இரவு நேரத்தில் வண்டி ஓட்ட முடியாமல் போதல்
- வெளிச்சம் பட்டால் கண் கூசுதல்
- பொருட்களைச் சுற்றி ஒளிவட்டம் தெரிதல்
- பொருட்கள் மஞ்சள் நிறமாகத் தெரிதல்
- பொருட்கள் இரண்டு இரண்டாகத் தெரிதல்

இந்த அறிகுறிகள் வலுத்துத் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படும்போது, அறுவை சிகிச்சை செய்துகொள்வது நல்லது.

சிலருக்குக் குறுகிய காலம் பார்வை சரியாகி, கண்ணாடியின் தேவை குறையலாம். குறிப்பாக, படிப்பதற்கான கண்ணாடியின் தேவை குறையலாம். இதுவும் கண்புரை நோயின் ஓர் அங்கமே. நாளடைவில் பார்வை மங்கத் தொடங்கும்.

யாருக்கு வரும்?
- வயதானவர்கள்
- நீரிழிவு நோய் உள்ளவர்கள்
- கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள்
- கண்களில் அடிபட்டவர்கள்.
- மாத்திரை உண்பவர்கள்
- புற்று நோய்க்கான மருந்துகள் உண்டவர்கள்
- உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்
- புகை பிடிப்பவர்கள்
- அதிகம் மது அருந்துபவர்கள்
- உடல் எடை அதிகம் இருப்பவர்கள்

இதைத்தவிர பிறந்ததிலிருந்தே சிலருக்குக் கண்புரை இருக்கலாம். இவர்களுக்குச் சின்ன வயதிலேயே அறுவை சிகிச்சை தேவைப்படும்.

அறுவை சிகிச்சைக்கு முன்னால்
இந்த அறுவை சிகிச்சை மிக எளிதானது. இதற்கு முன்னர் உங்களின் முதன்மை மருத்துவரைக் காண நேரிடலாம். உங்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இருதய நிலைமை எல்லாவற்றையும் பரிசோதிக்க வேண்டும். இவை நல்ல நிலையில் இருக்கிறதா என்றறியச் செய்யப்படும் இந்தப் பரிசோதனைகளுக்கு Pre Operative Exam என்று பெயர். சிலசமயம் இந்தப் பரிசோதனையின்போது புதிய நோய்கள் கண்டுபிடிக்கப் படலாம். அறுவை சிகிச்சையின் ரணம் ஆறுவதற்கும், பின்விளைவுகள் ஏற்படாதிருக்கவும் இவை தேவைப்படுகின்றன. ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் மருந்துகளும், ரத்தப் பெருக்கை ஏற்படுத்தும் மருந்துகளும் நிறுத்தப்பட வேண்டி வரலாம். இவற்றைப் பற்றிய அறிவுரை வழங்கவும் இந்தப் பரிசோதனை அவசியம்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னால்
இந்த அறுவை சிகிச்சைக்கு மருத்துவ மனையில் சில மணி நேரமே தங்க நேரிடும். ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் முடிந்துவிடும். கண்ணின் முனையில் ஊசி மூலம் மரத்துப் போகும் மருந்து அளிக்கப்படும். ஒரு சிறு கீறல் மூலம் மீயொலி அலை (Ultrasound wave) மூலம் பழைய வில்லை அகற்றப்பட்டு புதிய செயற்கை வில்லை பொருத்தப்படும். சிலருக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு கண்ணாடி அளிக்கப்படும். நுண்ணுயிர்க் கிருமிகள் தாக்காத வண்ணம் மருந்துகள் அளிக்கப்படும். ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்குள் பார்வை நல்ல நிலைக்குத் திரும்பிவிடும். முதலில் கண்ணுக்குத் துணித்திரை வழங்கப்படலாம். ஒரு மாதத்திற்குள் ரணம் ஆறிப் பார்வை நன்றாகிவிடும். இரண்டு கண்களுக்கும் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் ஒருமாத கால இடைவெளியில் செய்வதுண்டு.

பின்விளைவுகள்
பின்விளைவுகள் மிகவும் குறைவு. ஆனால் Posterior Capsule Opacification என்று சொல்லப்படும் திரை உருவாகிப் பார்வை மீண்டும் மங்கலாம். இதற்கு லேசர் (Laser) சிகிச்சை அளிக்கப்படும்.

மேலும் விவரம் அறிய: www.mayoclinic.com

மரு. வரலட்சுமி நிரஞ்சன்,
கனெக்டிகட்

© TamilOnline.com