சுதந்திரமும், நடுநிலையும்...
தமிழ்நாட்டில் பல இடங்களில் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக உடைபடாத கொள்ளிடக் கரைகள் பல இடங்களில் உடைபட்டு ப் பெருநாசம் விளைந்திருக்கிறது. இரண்டு பேருந்துகள் நீர்ப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டுப் பலர் உயிரிழந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் பெய்த பெருமழையின் தாக்கமே இன்னமும் சரிவர கவனிக்கப் படாத இந்நிலையில் இந்தத் தொடர்மழை விவசாயிகளையும், ஏழை மக்களையும் மிகவும் பாதித்துள்ளது. அரசு இயந்திரங்கள் இந்த அளவு பிரச்சினைகளைச் சமாளிக்க முடியுமா என்பது தெரியவில்லை. பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்ற புயலின் பாதிப்பு ஆரம்பித்த நாள்முதல் ஒரு வேதனையான நிலை தமிழ்த் தொலைக்காட்சிகளில் நிலவி வருகிறது. ஆளுங்கட்சியைச் சார்ந்தவை அரசின் 'தீவிர நடவடிக்கைகளையும், எவ்வாறு அதனால் மக்கள் நன்மை அடைகிறார்கள்' என்பதையும் வலியுறுத்த, எதிர்க்கட்சியைச் சார்ந்தவை, நிவாரணம் இல்லாமல் எவ்வாறு மக்கள் அல்லற்படுகிறார்கள் என்றும் சொல்லி வருகின்றன. புயல் தற்போது எங்கே நிலை கொண்டுள்ளது, கரையை, எங்கே, எப்போது கடக்கக்கூடும் என்று செயற்கைக்கோள் படங்களுடன் செய்திகள் அரிதாகவே இருந்தன. பிபிசி மற்றும் சில சானல்களினால்தான் இந்தச் செய்திகளை அறிய முடிந்தது.

ஊடகங்கள் ஒரு சாராரின் கையில் குவிந்தால் எப்படிப்பட்ட நிலை வரக்கூடும் என்பதற்கு இது ஓர் அறிகுறி. ஊடகங்களின் சுதந்திரமும் அவற்றின் நடுநிலையும் எவ்வளவு முக்கியம் என்பதும், அந்த சுதந்திரமும், நடுநிலையும் எவ்வளவு மெல்லிய இழையில் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்பதும் அடிக்கோடிட்டுக் காட்டப் பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபரும் அவரது தோழர்களும் எந்த அளவு நடுநிலை ஊடகங்கள் இல்லா நிலையையும் 9/11 பின்னால் ஏற்பட்ட பதட்ட நிலையையும் பயன்படுத்தித் தங்கள் சொந்த லாபத்தைத் தேடிக் கொண்டுள்ளனர் என்பது மேலும், மேலும் தெளிவாகத் தெரிகிறது. 'Eternal vigilance is no longer just the price for liberty - it is the cost of admission into civilized society.'

ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

மீண்டும் சந்திப்போம்,
பி. அசோகன்
டிசம்பர் 2005

© TamilOnline.com