துரோணரின் சீடன்
மகாபாரதத்திலுள்ள கதாபாத்திரங்கள் ஆயிரக்கணக்கில் விரிவடைவதால், அடிப்படைக் குவிமையத்திலுளள பாத்திரங்களைத் தவிர்த்து, மற்ற *எல்லாப்* பாத்திரங்களைக் குறித்தும் முழுமையான அல்லது விரிவான விவரங்கள் கிடைப்பதில்லை. 'எல்லாப் பாத்திரங்களை'க் குறித்தும் என்பதை மறுயடியும் வலியுறுத்திச் சொல்கிறேன்.

ஏகலவ்யனைப் போன்ற சிறு பாத்திரங்களைப் பற்றிய விவரம் மிகமிக அரிதாக, எதிர்பாராத இடங்களில் மட்டுமே தட்டுப்படுகிறது. இந்த இடங்களைத் தவற விட்டுவிட்டால், இப்படிப்பட்ட பாத்திரங்களைப் பற்றியும்-அவ்வளவு ஏன், கதையின் மூல முடிச்சைப் பற்றியும்-புரிந்துகொள்வது கடினம். ஏகலவ்யனைப் பற்றிய ஏராளமான விவரங்கள், விக்கிபீடியா உள்ளிட்ட பல்வேறு தளங்களில், இணையத்தில் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சார்பு நிலையைக் கொண்டு சில விவரங்களைச் சொல்லி வாதமோ, விளக்கமோ தருகின்றன என்றாலும், இவற்றுக்கு அடிப்படையாக எந்த நூல் விளங்குகிறது என்ற விவரத்தை மட்டும் தெரிவிக்காமலேயே நின்றுவிடுகின்றன.

அப்படியானால், வியாச மூலத்தில், ஏகலவ்யனைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதற்கும், இன்று பெரும்பான்மையாக நிலவிவரும் அபிப்பிராயங்களுக்கும் எவ்வளவு தூரம் நெருக்கம் அல்லது விலகல் இருக்கிறது என்பதை மட்டுமே எடுத்துக்கொண்டு, இந்தப் பாத்திரத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள மட்டுமே முடியும். இந்த அடிப்படையை வைத்துக்கொண்டு அணுகுவோம்.

வியாச பாரதம், ஏகலவ்யனைப் பற்றிய நேரடிக் குறிப்புகளைத் தருவது மூன்று இடங்களில். ஒன்று, அவன் துரோணரை அணுகிய சமயம். இங்கேதான் அவர் அவனைச் சீடனாக ஏற்றுக்கொள்ள மறுத்ததும், அவன், அவரைப்போன்ற ஒரு பிரதிமையைச் செய்துகொண்டு அதை முன்னிறுத்தித் தானே வில்வித்தை பழகிக் கொள்வதும்; வேட்டைக்குப் போன இடத்தில் ஒரு நாயின் வாயில் ஏழு அம்புகள் தைத்திருப்பதைப் பார்த்த அர்ஜுனன், "இவ்வளவு திறமை வாய்ந்த வில்லாளி எப்படி உருவானான்?" என்ற கேள்வியை எழுப்ப, துரோணர் அவனுடைய வலதுகைக் கட்டை விரலை குரு தட்சிணையாகக் கேட்பதுமான செய்திகள் கிடைக்கின்றன. இது ஆதி பர்வத்தில்.

பிறகு, தர்மபுத்திரன் நடத்திய ராஜசூய யாகத்தில் ஒருமுறையும், துரோண பர்வத்தில் ஒருமுறையும் ஏகலவ்யன் பெயர் தென்படுகிறது. இந்த மூன்று சிறுசிறு குறிப்புகளின் அடிப்படையில்தான், நாம் நம்முடைய அடிப்படை அணுகுமுறைக்கான விளக்கத்தைப் பெற முடிகிறது.

ஏகலவ்யனைப் பற்றிய அபிப்பிராயங்களில் தலையாயதும், தவறானதுமான குறிப்பு, அவன் ஒரு காட்டுவாசி, வேடன் என்பது. இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும். துரோணர், குரு வம்சத்து அரச குமாரர்களுக்குப் பயிற்றுவிப்பதற்காக, பீஷ்மரால் பணியமர்த்தப்பட்டவர். துரியோதியனாதியர்களும் பாண்டவர்களும் அவரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவரிடம் பயில, மற்ற நாட்டு அரசர்களும் அரசகுமாரர்களும் வந்திருக்கிறார்கள்; துரோணர் அவர்களுக்கும் பயிற்றுவித்திருக்கிறார். இங்கே நாம் அனுமானிப்பதற்கான ஒன்று இருக்கிறது. குரு வம்சத்துடன் நட்போடும் இணக்கத்தோடும் இருந்து வந்த அரசர்கள், அரச குமாரர்களுக்கு மட்டும்தான் அவர் பயிற்றுவித்திருக்க முடியும். தான் பணியாற்றும் அரச வம்சத்துக்கு எதிரியாகவோ, எதிரியாக மாறும் வாய்ப்புள்ள அரச, அரசகுமாரர்களுக்கு அவர் பயிற்சியளித்திருக்க முடியாது; பயிற்சியளிக்கவும் கூடாது. எதிரியின் பலத்தை, தெரிந்தே கூட்டுவது என்பது விவேகத்தின் அடையாளமாகாது. இந்த முக்கியமான காரணத்தால்தான், தன்னைக் கொல்வதற்காகவே பிறந்தவன் என்ற உண்மை தெரிந்திருந்தும் கூட, குரு வம்சத்துடன் நெருக்கமாக இருந்த துருபதன் மகனான திருஷ்டத்யும்னனுக்கும் துரோணர் ஆசிரியராக இருந்திருக்கிறார். இத்தனைக்கும் துருபதன், துரோணரின் இளவயது நண்பன்; நடுவயதில் பகை பாராட்டியவன்; பிறகு குருதட்சிணையாகப் பாண்டவர்களால் வெல்லப்பட்டு, அவனுடைய நாடு முழுவதையும் வசப்படுத்தியிருந்தாலும், அவனுக்குப் பாதி அரசைத் தந்து, "இப்போது நீயும் நானும் சமமாகி விட்டோம். சமமானவர்களுக்கிடையில்தான் நட்பு நிலவ முடியும்" என்று நீ சொன்னதன்படியே, இப்போது நாமிருவரும் நண்பர்கள் என்று துரோணர், பகைமையை முற்றிலும் மறந்தபோதிலும், துருபதன் அதன் பிறகுதான் வேள்வி இயற்றி, திருஷ்டத்யும்னனையும், திரௌபதியையும் யாக குண்டத்திலிருந்து பெற்றான்.

எனவே, கற்பிப்பதில் பேதம் பார்த்தவர் துரோணர் என்ற வாதம் அடிபடுகிறதோ இல்லையோ, மெலிவடைகிறது என்பது நிச்சயம்.

இப்போது ஏகலவ்யனுக்குத் திரும்புவோம். ஆதிபர்வத்தில் ஸம்பவபர்வம், நூற்று நாற்பத்திரண்டாவது அத்தியாயத்தில் பின்வரும் செய்தி அகப்படுகிறது: "துரோணருடைய அந்த ஸாமர்த்தியத்தைக் கேள்வியுற்றுத் தனுர்வேதத்தைக் கற்க ஆவலுடன் ராஜாக்களும் ராஜகுமாரர்களும் ஆயிரக்கணக்கில் வந்து சேர்ந்தனர். அயுததாரிகளில் சிறந்தவரான துரோணர், அவர்களெல்லோருக்கும் சிக்ஷை சொல்லி வைத்தார். மஹாராஜரே! அதன்பின், வேடர்களுக்கு அரசனாகிய ஹிரண்யதனுஸ் என்பவனுடைய மகனான ஏகலவ்யன் என்பவன் துரோணரிடம் வந்து சேர்ந்தான். தர்மந் தெரிந்த துரோணர், கௌரவர்களிடமுள்ள தாக்ஷிண்யத்தினால் சிந்தித்து, அவன் வேடன் மகனென்று சொல்லி அவனை வில்வித்தையில் சிஷ்யனாக அங்கீகரிக்காமல் இருந்தார்." (வியாச பாரதம், கும்பகோணம் பதிப்பு, முதல் தொகுதி, பக்கம் 533-534)

மேற்படிப் பகுதியில் பிரபலமாக நிலவிவரும் அபிப்பிராயம், 'வேடன் மகன் என்று சொல்லி, வில்வித்தையில் சிஷ்யனாக அங்கீகரிக்காமல் இருந்தார்' என்ற வாக்கியத் துணுக்கின் அடிப்படையிலேயே ஓங்கியும் உரத்தும் பேசப்பட்டு வருகிறது. அதே பகுதியிலேயே உள்ள மற்ற விவரங்கள் புறக்கணிக்கப்பட்டு விடுகின்றன. இவற்றில் முக்கியமானது (1) ஏகலவ்யன், வேடர் குலத்தவன் என்ற போதிலும், உண்மையில் அரச குமாரன். நிஷாத ராஜன் என்று சொல்வார்கள். பல்வேறு குலத்தவரில், அந்தந்தக் குலத்தரசர்களும் இருந்திருக்கிறார்கள். மத்ஸ்ய வம்சம் என்பது மீனவர் குலத்தைக் குறிக்கிறது. இதைப் போலவே, வேடர் குலத்தின் அரசனான ஹிரண்யதனுஸ் இருந்திருக்கிறான். அவனுடைய மகன்தான் ஏகலவ்யன். வேடர் குலத்து அரசகுமாரன். வேடன் அல்லன்.

சிற்றரசர்களை வளர்ப்பது, பேரரசன் விழுந்த காலத்தில், அவர்களைக் கலகத்தில் இறங்கச் செய்து, ஆட்சியைப் பிடிக்க வைக்கும். இதைத்தான் கம்பன் பாலகாண்டத்தில், மாலைக்கால வர்ணனையைச் செய்யும்போது போகிற போக்கில் சொல்லி வைக்கிறான்:

விரைசெய் கமலப் பெரும் போது, விரும்பிப் புகுந்த திருவினொடும்
குரைசெய் வண்டின் குழாம் இரிய, கூம்பிச் சாம்பிக் குவிந்துளதால்;
உரைசெய் திகிரிதனை உருட்டி, ஒருகோல் ஓச்சி, உலகாண்ட
அரைசன் ஒதுங்க, தலையெடுத்த குறும்பு போன்ற தரக்காம்பல்.


- கம்பராமாயணம், பால காண்டம், மிதிலைக் காட்சிப் படலம் பாடல் 75

மாலை வருகிறது; தாமரை கூம்புகிறது. 'வாசம் வீசுவதான தாமரை மலர், தன்மீது வீற்றிருக்கும் திருமகளும், ஒலிக்கின்ற வண்டுகளும் விலகுமாறு கூம்பியதும், ஆம்பல் மலர், மலர்ந்தது. எதைப்போல என்றால், மிகப்பெரிய அளவில் ஆக்ஞா சக்கரத்தையும் செங்கோலையும் ஓச்சிய மன்னனுடைய தலை சாய்ந்ததும், உடனேயே குறுநில மன்னர்கள் தலை எடுப்பதைப் போல'.

ஆக, தன்னிடம் வந்து பயின்ற ஆயிரக்கணக்கான அரசர்கள், அரசகுமாரர்களுக்கும், தன்னையே கொல்லப் பிறந்தவன் என்பது தெரிந்திருந்த போதிலும் திருஷ்டத்யும்னனுக்கும் பயிற்றுவிக்கத் தயங்காத துரோணர், இந்தச் சமயத்தில் தயங்கியது ஏன்? மேலே குறிப்பிட்டுள்ள பகுதியில், இந்தப் பகுதியை மீண்டும் படியுங்கள்: "தர்மந் தெரிந்த துரோணர், கௌரவர்களிடமுள்ள தாக்ஷிண்யத்தினால் சிந்தித்து" இதுதான் சிந்தனையைத் தூண்டும் பகுதி. இதை விலக்கிவிட்டால், துரோணர் காட்டிய 'வேடன்மகன்' என்பதன் உட்பொருள் புரியாது.

என்ன தாட்சண்யம்? என்ன சிந்தித்தார்? சிற்றரசனைப் பலப்படுத்தினால், பின்னாளில், இவன் தான் சார்ந்திருக்கும் குரு வம்சத்துக்கு எதிராகக் கிளம்பும் வாய்ப்பு இருக்கிறது என்பதுதானே தாட்சண்யத்தின் காரணமாக இருக்க முடியும்? இதைத்தானே துரோணர் சிந்தித்திருக்க முடியும்? வேடன்மகன் என்று சொல்லி விலக்கினார் என்றால், 'என்னைக் கொல்லப் பிறந்தவனுக்குப் பயிற்றுவிக்க மாட்டேன்' என்று திருஷ்டத்யும்னனுக்குப் பயிற்றுவிக்க மறுத்திருக்கலாமே! அவ்வளவு ஏன், கர்ணனே-பரசுராமரிடம் கற்கச் செல்வதன் முன்னால்-துரோணரிடம் மாணவனாக இருந்தவன்தானே? அப்போது குலத்தைப் பற்றிய கேள்வி எழவில்லையே! (சூத குலம் என்பதற்குத் தற்போது தரப்பட்டு வரும் விளக்கம் பொருந்தாது. இந்தக் குலத்தைப் பற்றிய விளக்கம், கர்ணனுடைய வாய்மொழியாகவே பின்னால் வருகிறது. அதைப் பிறகு பார்ப்போம்.)

ஏற்கவில்லை என்றாலும், ஏகலவ்யன் திரும்பிப் போகும்போது ஒன்றைச் சொன்னார் துரோணர். அதை யாருமே பேசுவதில்லை. இதையும் பாருங்கள்: "அவனைப் பார்த்து, 'ஓ! நிஷாத புத்திரனே! நீ எப்போதும் பாணப் பிரயோகத்தில் மிகுந்த பலமுள்ளவனாவாய். என் சிஷ்யன்தான். உன் வீட்டுக்குத் திரும்பிச் செல்; உனக்கு அனுமதி கொடுத்தேன்". (மேற்படி, பக்கம் 534)

"வில்வித்தையில் மிகச் சிறந்தவனாய் விளங்கப் போகிறாய். (என்னிடத்தில் நீ நேரடியாகப் பயிலாவிட்டாலும்) நீ என் சிஷ்யன்தான்" இந்தப் பகுதி எவ்வளவு முக்கியமானது! இதன் உட்பொருள் எவ்வளவு செறிவானது! அவன், தன்னுடைய சீடன்தான் என்பதை துரோணர் அங்கீகரித்திருக்கிறார் அல்லவா.

சரி. இப்படி துரோணரால் திருப்பியனுப்பப்பட்ட பிறகும், தானே வில்வித்தையில் பயிற்சி எடுத்துத் தேர்ச்சியடைந்த ஏகலவ்யன், துரோணருக்குக் கட்டை விரலைக் காணிக்கையாகக் கொடுத்ததன் பிறகு, மூலத்திலேயே சொல்லியிருப்பதைப் போல, "அதன்பின் அந்த வேடன், பாணத்தை மற்றை விரல்களால் இழுத்துவிட்டான். ராஜரே! முன்னிருந்ததுபோல் விரைவாக இல்லை" (மேற்படி, பக்கம் 536) என்ற குறிப்பு, ஏகலவ்யனுடைய வாழ்க்கை முழுவதும் தொடர்ந்ததா? பலர் சொல்வதைப்போல, பறவை சுடவும் முடியாமல் அவன் வாடிப் போனானா? பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com