சிக்கல் சிங்காரவேலர், ஸ்ரீ நவநீதேஸ்வரர் ஆலயம்
நாகைப்பட்டினத்தில் அமைந்துள்ள தலம் சிக்கல். பேருந்து, ரயில் என அனைத்து வழியிலும் இணைக்கப்பட்டுள்ளது. இறைவன் பெயர் நவநீதேஸ்வரர் (திருவெண்ணெய்நாதர்) இறைவி: சத்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி). கீர்த்திமிகு தெய்வமாக சிங்காரவேலர் எழுந்தருளியுள்ளார். அறுபடை வீடுகளுக்கு இணையாகப் புகழ்பெற்ற முருகன் திருக்கோவில் இது. சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், சிதம்பர முனிவர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம் இது. முத்துஸ்வாமி தீக்ஷிதர், பாபநாசம் சிவன் ஆகியோர் முருகன்மீது பாடல் புனைந்துள்ளனர். தலவிருட்சம் மல்லிகை. தீர்த்தம் க்ஷேத்திர புஷ்கரணி (பாற்குளம்).

முன்னொரு காலத்தில் காமதேனு தான் செய்த தவறுக்காகப் பெற்ற புலிமுகத்தை நீக்க, சிவபெருமானின் கட்டளைப்படி சிக்கலுக்கு வந்து, திருக்குளத்தில் நீராடி, மல்லிகை மலர்களால் பூசித்து ஈசனை வழிபட்டது. அதனால் அதன் சாபம் நிவர்த்தியாகி சுயமுகம் பெற்றது. திருக்குளத்தில் காமதேனு நீராடியபோது மடியில் இருந்து பால் பெருகவே குளம் முழுதும் பால்மயமாகிப் பாற்குளமாயிற்று. சிவன் ஆணைப்படி வசிஷ்ட முனிவர் இத்திருக்குளத்திற்கு வந்து, பால் திரண்டு வெண்ணெயாகப் பரந்திருப்பதைக் கண்டு, வெண்ணெயை ஒன்றுசேர்த்துச் சிவலிங்கமாக்கி வழிபட்டார். பூஜை முடிந்தது அந்த லிங்கத்தை எடுக்க வசிஷ்டர் முனைய, இறைவனோ 'சிக்' என அந்த இடத்திலேயே 'கல்' என அசையாது அமர்ந்து விட்டதனால் இவ்வூர் 'சிக்கல்' ஆனது. அவர்தான் நவநீதேஸ்வரர் என்னும் திருவெண்ணெய்நாதர்.

வள்ளி, தெய்வானையுடன் கோலமயிலுடனும் வேல்தாங்கி அழகு ரூபமாய்க் காட்சி தருகிறார் சிங்காரவேலர். சூரபத்மனுக்கும் முருகனுக்கும் போர் நிகழ்ந்த காலத்து முருகன் எடுத்த வியன்மிகு திருக்கோலமே சிங்காரவேலர் கோலம். முருகன், சூரனைச் சம்ஹரிக்க அன்னையிடம் சக்திவேல் வாங்கிய திருத்தலம் இது. ஐப்பசி மாதம் நடக்கும் கந்தசஷ்டி விழாவில் வேல் வாங்கும் விழா மிகவும் சிறப்பானது. அன்னையிடம் சக்திவேல் பெற்று முருகன் சம்ஹாரத்திற்குக் கிளம்பும்போது, அந்த உக்ரம் தாங்காமல் வேலவர் மேல் குமிழும் வியர்வைத் துளிகளை இன்றும் காணலாம். இது அற்புதமான இறைக்காட்சியாகும்.

சித்திரைத் திங்களில் பிரம்மோற்சவம், தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. சிங்காரவேலருக்கு இத்தலத்தில் செய்யப்பெறும் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை சிறந்த பலனைத் தரும். அம்பாள் தனது சக்தியையே வேலாக வழங்கியதால் திரிசதி அர்ச்சனை இங்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சத்ரு தொல்லைகளிலிருந்து விடுபட பக்தர்கள் இங்கு வந்து அர்ச்சனை செய்து பலன் பெற்றுச் செல்கின்றனர். இத்திருக்கோயிலில் எங்கு தீபம் ஏற்றினாலும் அது சிங்காரவேலனையே சாரும் என்பது நம்பிக்கை. இக்கோயிலுக்கு அயோத்தி மன்னன், கொச்செங்கட் சோழன் ஆகியோர் திருப்பணி செய்துள்ளனர்.

ஸ்ரீ நவநீதேஸ்வரருக்கு அமாவாசை, பௌர்ணமி தினங்களில் உச்சிக்கால பூஜையின்போது வெண்ணெய் சாற்றி வழிபட்டால், வெண்ணெய் உருகுவதுபோல் நம் தீவினைகளும் உருகி மறையும் என்பது பக்தர்களின் அனுபவம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு ஸ்ரீசூக்த ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இத்தலத்தில் நடக்கும் கோடி தீப வழிபாடு, பிரதோஷ வழிபாடு இரண்டுமே சிறப்புப் பொருந்தியது. ஆலயத்தின் வாயு மூலையில் ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். ஆலய வாசலில் அமைந்திருக்கும் கண்கவர் மண்டபம் மிகப் பெரியது.

அலர்தரு புட்பத் துண்டாகும் வாசனை
திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய
அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி யிசையாலே

அழகிய சிக்கற் சிங்கார வேலவ
சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும்
அசுரரை வெட்டிச் சங்கார மாடிய பெருமாளே!

என்று திருப்புகழில் அருணகிரிநாதர் போற்றும் சிக்கல் சிங்கார வேலனை, நவநீதேஸ்வரரை வேண்டி வழிபட்டால் நம் சிக்கல் தீரும் என்பது பக்தர்கண்ட உண்மை.

சீதா துரைராஜ்

© TamilOnline.com