தேவை: சமமான பகிர்தல்
அன்புள்ள சிநேகிதியே:

போனமாதம் என்னுடைய நண்பனுக்கு ஓர் அறிவுரை எழுதியிருந்தீர்கள். நன்றாக இருந்தது. 5 வருடங்களுக்கு முன்பு அவன் நிலையில் இருந்தவன் நான். என்னுடையதும் காதல் திருமணம். ஜாதியும் வேறு. மொழியும் வேறு. என் அம்மா பலத்த எதிர்ப்பு. நிறையக் காரணங்கள். சின்ன வயதிலிருந்து நான் அம்மாபிள்ளை. அவர் சொல்லைத் தாண்டமாட்டேன். எல்லா விஷயமும்—கல்லூரி, தொழில், நண்பர்கள்—என்று தெரிவித்து விடுவேன். ஆனால் இந்த விஷயத்தை மட்டும் சொல்லாமல் ரகசியமாக இருந்துவிட்டேன். யார்மூலமோ கேள்விப்பட்டு என்னிடம் அவர்கள் கேட்டபோது, "அதெல்லாம் ஒன்றும் இல்லை" என்று பொய் சொல்லிவிட்டேன். அப்புறம் என் மனைவி (அப்போது காதலி) திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால், வேறு வழியில்லாமல் உண்மையைச் சொன்னேன். அதுவும் எப்போது, நாள் குறித்து, அவர்கள் வீட்டில் மண்டபமும் பார்த்த பிறகு. அம்மாவுக்கு வந்ததே கோபம்! என்னை விளாசித் தள்ளிவிட்டாள். திருமணத்திற்கு வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தாள். என்னை எப்படி என் காதலி ஒரே அடியாக மாற்றிவிட்டாள் என்று அவளைக் குற்றம் சாட்டினாள்.

எனக்கிருந்த காதல் மயக்கத்தில் அம்மா சொன்னதையெல்லாம் அப்படியே இவளிடம் வந்து சொல்லி என் சோகத்தைத் தீர்த்துக்கொண்டேன். எப்படியோ என் அண்ணன்கள், தங்கை எல்லாரும் எங்கள் அம்மாவைச் சமாதானப்படுத்தி திருமணத்திற்கு வரச்செய்தார்கள். அப்புறம், அம்மா அட்ஜஸ்ட் செய்து கொண்டுவிட்டாள். நார்மல் ஆகிவிட்டது போலத்தான் எனக்குத் தெரிந்தது.

மூன்று மாதத்திற்கு முன்பு அலுவலக வேலையாக இந்தியா போயிருந்தேன். என் பையனைப் பற்றி விசாரித்தார்கள். 3 வயது. "கொஞ்சம் வந்து பேரனிடம் தங்கிவிட்டுப் போங்களேன்" என்று வலியுறுத்தினேன். சரியென்று சொல்லவும், பாஸ்போர்ட், விசா எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு வந்தேன். வரும் ஜனவரியில் ஒரு சொந்தக்காரத் திருமணம் என் மனைவிக்கு. அவள் போகும்போது அம்மாவை அழைத்துக் கொண்டுவருவதாகத் திட்டம். என் மனைவிக்கு அதைக் கேட்டதும் ஒரே கடுப்பு. கோடையில் குழந்தையை அழைத்துக்கொண்டு நான் என் பெற்றோர் வீட்டிற்கு 3 மாதம் போகிறேன். அப்போது நீங்கள் உங்கள் அம்மாவைக் கொண்டாடிக் கொள்ளுங்கள். இந்த ஜனவரி பயணத்தில் என்னால் உங்கள் ஊருக்கெல்லாம் போய் அழைத்துக் கொண்டுவர நேரம் இல்லை. அவர்களுடன் அதிகபட்சம் 1 மாதம்தான் அட்ஜஸ்ட் செய்து கொள்வேன். ஆனால் 6 மாதம் வந்து இருப்பதெல்லாம் சரிப்படாது. ஏற்கனவே என்னைக் கண்டால் பிடிக்காது. இப்போது "இப்படி பையனை வளர்க்கிறேன்; வீட்டில் இந்தச் சமையல் செய்கிறேன்" என்று நான் விமர்சனம் கேட்கத் தயாராக இல்லை" என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். ஏன் இந்த அளவுக்கு என் மனைவி காட்டம் வைத்திருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை. இதை அம்மாவுக்கு எப்படிச் சொல்வது? ஒரே குழப்பம். இரண்டு பக்கமும் செமையாக அடிபடுகிறேன். எப்போதோ திட்டினார்கள் என்பதை இன்னமும் நினைத்துப் பொருமிக்கொண்டிருக்கிறாள் என்று என் மனைவிமேல் எனக்குக் கோபம். ஆனால் அதை வெளிக்காட்ட முடியவில்லை. இந்தக் கல்யாண விஷயத்தில் தப்பு செய்துவிட்டேன் என்று தோன்றுகிறது. எப்படி, யாரை நம்பவைத்தால் எனக்கு நிம்மதி கிடைக்கும்? எனக்கு அம்மா வந்து என்னுடன் இருக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. பழைய தோழமை நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்.

தயவு செய்து உதவுங்கள். நண்பர்களிடம் அறிவுரை கேட்டால் பெண்டாட்டியை அடக்கத் தெரியவில்லை என்று கேலி செய்வார்களோ என்று தோன்றுகிறது.

இப்படிக்கு
...................


அன்புள்ள நண்பரே:

கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் பிரச்சனை பெரிதாகப் போக வாய்ப்பில்லை. ஐந்து வருடம் வராமல் இருந்த அம்மாவின் வரவை ஐந்து மாதம் தள்ளிப்போடச் சொல்வது அவ்வளவு சிரமமாக இருக்காது என்றே நினைக்கிறேன். உங்கள் மனைவி ஊருக்குப் போவதற்கு ஒருமாதம் முன்பு அம்மாவை வரவழைத்துக் கொள்ளுங்கள். அந்த ஒருமாதம் உங்கள் மனைவியை அழகாக அட்ஜஸ்ட் செய்துகொள்ளச் சொல்லுங்கள். உங்கள் மனைவி ஊருக்குச் சென்றபிறகு உங்கள் அம்மாவின் சமையல், தோழமை என்று அனுபவியுங்கள். தனிமை போரடித்தாலும், பையன் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படப் போகிறானே என்று அவர் தொடர்ந்து தங்குவார். திரும்பிப் போகவேண்டும் என்று வற்புறுத்தினால் அதற்குள் அவர் வந்து 2 மாதம் ஆகியிருக்கும். இல்லை, ஒன்றாக இருந்த ஒருமாத காலத்தில் மருமகள், மாமியார் ஒத்துப்போய் உங்கள் மனைவி தன் திட்டத்தை மாற்றிவிடலாம், யார் கண்டது!

நீங்கள் எழுதியிருக்கும் விதத்தைப் பார்க்கும்போது என்னால் உங்களைப் பற்றி ஒன்று கணிக்க முடிகிறது. You have a focus. எதிர்ப்பு இருந்தாலும் நீங்கள் நினைத்ததை நடத்திக்கொண்டு செல்பவர். ஆகவே, உங்கள் அம்மாவின் வருகை நிச்சயம். நீங்கள் யாரையும் எதிர்க்கும் நோக்கம் இல்லாதவர். ஆகவே, உங்கள் மனைவியின் இந்தியப் பயணமும் உண்டு. ஒரே ஒரு விஷயத்தைமட்டும் சொல்லிவிட்டு முடித்துக் கொள்கிறேன். 'பொண்டாட்டியை அடக்கத் தெரியாததை' குற்ற உணர்வுபோல எழுதியிருக்கிறீர்கள். இன்றைய நிலையில், அதுவும் மாறிவரும் திருமண ஒப்பந்தங்களில் 'அடக்க வேண்டும்' என்ற உணர்வு தோன்றினாலே அதற்கு நமக்கு நாமே எச்சரிக்கை வகுத்துக்கொள்ள வேண்டும். அடங்கும், ஒடுங்கும் வாழ்க்கை முறை மாறிப் போய்விட்டது. சமமான பகிர்தல்தான் தேவையாக இருக்கிறது. ஆகவே, எதற்கும் வருத்தப்படாதீர்கள்; வெட்கப்படாதீர்கள்.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com