வேலு ராமன்
திருவையாறில் பிறந்து, புதுக்கோட்டை மாடல் ஸ்கூலில் படித்தபின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தார். அங்கேயே விரிவுரையாளராகப் பணி செய்தபின் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் உதவிப் பொறியாளராகப் பணி செய்தவர் வேலு ராமன். கோவை சௌத் இந்தியா கார்ப்பரேஷனில் துணைப் பொது மேலாளராகவும் பணியாற்றி உள்ளார். இப்போது டாலஸில் இருக்கிறார். ப்ளேனோ தமிழ்ப் பள்ளி, சாஸ்தா தமிழ் அறக்கட்டளை (STF) போன்றவற்றை நிறுவியவர். அண்மையில் 'வள்ளியின் காதல்' நிகழ்ச்சி நடத்தி நூறாயிரம் டாலர் நிதி திரட்டி அறப்பணிக்கு அளித்ததன்மூலம் இவரை அமெரிக்கத் தமிழுலகம் அறிய வந்தது. தமிழ், தமிழர் என்று மூச்சுக்கு மூச்சு பேசும் இவர் நார்த் டாலஸ் ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸில் 13 ஆண்டுகளாகப் பணி செய்த அனுபவம் தன்னைத் தன்னலமற்ற தொண்டுக்குத் தயார் செய்ததாகச் சொல்கிறார். டோனி ராபின்ஸ் பயிற்சியாளர் என்ற முறையில் தீமிதியும் செய்தவர். மிகச்சுவையான இந்த உரையாடலை மேலே படியுங்கள்....

கே: அமெரிக்காவுக்கு வந்ததுலேயிருந்து தொடங்கலாமா?
ப: அமெரிக்காவுக்கு 1998ல வந்தேன். வந்த ஒரு வருஷத்துலேயே டாலஸ் யுனிவர்ஸிட்டில MBA சேர்ந்தேன். அமெரிக்கா வந்த உடனேயே சத்ய சாயி பாலவிகாஸ்ல குழந்தைகளுக்காக உதவி ஆசிரியரா சேர்ந்து சில வருடங்களில் ஆசிரியர் ஆனேன்.

கே: எத்தனை வருஷமா பாலவிகாஸ் ஆசிரியரா இருக்கீங்க?
ப: நான் இங்க வந்த ஒரு வருஷத்துலேயே என்னோட மகள் பாலவிகாஸ் போகத் தொடங்கினார். அதை நடத்தியவர் யார்கிட்டயும் எதையும் எதிர்பார்க்காம சேவை செஞ்சுக்கிட்டே இருந்தாங்க. என்ன நம்மகிட்ட எதுவுமே கேக்க மாட்டேங்கறாங்களேன்னு நெனச்சேன். அப்புறமாத்தான் அவங்க யார்கிட்டயும் எதுவும் கேக்க மாட்டாங்க, நாமாப் போய்க் கேட்டாத்தான் நம்ம பணியை ஏத்துப்பாங்கன்னு புரிஞ்சது. அப்பறமா நான் ஒரு உறுப்பினரா சேர்ந்து சேவை செய்ய ஆரம்பிச்சேன். இப்ப அதுல கிட்டத்தட்ட 300 குழந்தைங்க படிக்கிறாங்க. அதுல நான் ஒரு நிர்வாகியாவும், ஆசிரியராவும் இருக்கேன்.

கே: தமிழ்ப்பள்ளி தொடங்கினது பற்றிச் சொல்லுங்க....
ப: ப்ளேனோ தமிழ்ப் பள்ளியை 2001ல ஆரம்பிச்சோம். அப்ப பால விகாஸில ஆன்மீகக் கதை சொல்வோம், நிறைய சேவை செய்வோம். அதேமாதிரி தமிழ்ப்பள்ளிக் குழந்தைகளுக்கும் கருத்துள்ள கதை சொன்னோம், சேவை மனப்பான்மை வரணும்னு 'உதவும் கரங்கள்' அமைப்போட சேர்ந்து குழந்தைகளிடையே இணக்கம் (Child to child harmony) அப்படீன்னு ஒரு ப்ராஜெக்ட் செய்தோம்.

பாலவிகாஸ்ல செய்யற மாதிரியே நாங்களும் தமிழ்ப்பள்ளில 6 வாரத்துக்கு ஒரு தடவை பல மாணவர்கள் வந்து மைக்கில கதை சொல்லணும்னு கொண்டு வந்தோம். வருஷத்துக்கு ஒரு தடவையாவது மைக்கில வந்து பேசியிருந்தாதான் அவங்க அடுத்த வகுப்புகுத் தேர்ச்சி ஆவாங்க. இது ஆளுமைப் பயிற்சியில ஒரு முக்கியமான படிக்கல், இல்லையா?

கே: உங்கள் தொழில் என்ன?
ப: பிசினஸ் இன்டெலிஜென்ஸ் துறையில கிட்டத்தட்ட 12 வருஷமா இருக்கேன். . அதுவரைக்கும் எஞ்சினியரிங், ஆசிரியர் பணின்னு வெவ்வேற துறைகள்ள இருந்தேன்.



தெ: உங்களுக்குச் சேவை மனப்பான்மை வரக் காரணம் என்னன்னு விவரமாச் சொல்லமுடியுமா?
ப: என் பெற்றொர்கள் உதவி மனப்பான்மை கொண்டவர்கள்.. அம்மா மத்த வீடுங்களுக்குப் போய் பிரசவ நேரத்தில கூட உதவுவாங்க. அவங்கப்பா, ராஜா சர். முத்தையா செட்டியார்கிட்ட பர்மா ஏஜண்டா வேலை பார்த்தார். அடையாறு பங்களாகூட அவர் கட்டினதாச் சொல்வாங்க. ஈட்டலும், காத்தலும், வகுத்தலும் அப்படீங்கறதுதான் ராஜாவின் கொள்கை. நல்லா சம்பாதிக்கணும், அதைக் காப்பாத்தி எல்லாருக்கும் பங்கிட்டுக் குடுக்கணும் அப்படீன்னு நினைக்கிறவர் ராஜா. அதைப் பார்த்து எங்கள் குடும்பத்திலயும் அந்த மனப்பான்மை வந்தது.

எங்க முன்னோர்களோட ஊர் ராயவரம். செட்டிநாட்டுல இருக்கு. எங்கள் முன்னோர்கள் அங்கே ஊர்மக்களுக்காக ஒரு சிவன் கோவில் கட்டிக் கொடுத்தாங்க. இன்னும் அந்தக் கோவிலை எங்க குடும்பம் பராமரிக்குது. நான் அந்த வெ.மு. சிவன் கோவில் நிர்வாகத்தை 8 வருஷம் பார்த்துக்கிட்டேன். எங்க சொந்தப் பணத்துல அதை இன்னிவரைக்கும் நடத்திக்கிட்டிருக்கோம். ஆனா, எல்லாரும் வந்து வழிபாடு செய்யலாம்.

எங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு வருஷமும் வேல் பூஜை பண்ணி, அன்னதானம் செய்வோம். 300, 400 பேருக்கு நாங்களே எங்க கையால பரிமாறுவோம். அதனால சின்ன வயசிலேர்ந்தே சேவை பண்ணறதால வர சந்தோஷத்தை அனுபவிச்சிருக்கேன். சேவை பண்ணுவதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கேன்.

இங்க வந்தப்புறம், நார்த் டாலஸ் சத்ய சாயி சென்டர் நடத்தற டாக்டர். ராவ், திருமதி. உமா ராவ் இவங்களோட சேர்ந்து பாலவிகாஸ் வகுப்புகள் எடுக்கற வாய்ப்புக் கிடைச்சது. அவங்க ரொம்ப அனுபூதிமான்கள், எனக்கு வழிகாட்டிகள். அவங்ககிட்ட இருந்து நிறையக் கத்துக்கிட்டேன். ஆரம்பத்துல, நிர்வாகத்தில் உதவி செய்யும்போது பாலவிகாஸுக்குப் போதிய பொருளுதவி வரணுமேன்னு எனக்கு ஒரு பதட்டம் இருக்கும். எல்லாம் தானே வரும்னு அவங்க சொல்வாங்க. அதெல்லாம் போகப் போகத்தான் புரிஞ்சது. இந்த அமைப்புல நல்ல காரியத்துக்காக என்ன வேணும்னாலும் கேட்கலாங்கறதெல்லாம் கிடையாது. என்ன வேணுமோ அது தானாவே வரும் அப்படீங்கற மனப்பக்குவம் வரணும்.

கே: உங்களுக்கு டோனி ராபின்ஸ் பயிற்சி வகுப்புகளிலயும் ஆர்வம் உண்டு, இல்லையா?
ப: டோனி ராபின்ஸோட பயிற்சி வகுப்புகளுக்கோ, செமினாருக்கோ எட்டு வருஷமா போய்க்கிட்டிருக்கேன். அவர் மனிதனுக்கு மொத்தம் 6 தேவைகள் இருக்குன்னு சொல்றார்: நிச்சயமற்றதன்மை (uncertainty/variety), முக்கியத்துவம் (significance), அன்பு மற்றும் தொடர்பு (love and connection), வளர்ச்சி (growth), ஈகை (contribution). இதுல வளர்ச்சியும், ஈகையும் ஆன்மீகத் தேவைகள். அதாவது நாம வளர்ச்சி அடைந்து மத்தவங்களுக்கு கொடுக்கறது. அதாவது, தன்னோட பிரச்சனைகளை மட்டுமே நினைச்சு சுயநலத்தோட இருந்தா அந்தப் பிரச்சனையே பெரிசாத் தெரியும். மத்தவங்க பிரச்சனைகளைத் தீர்க்கணும்னு நினைச்சு வேலை செஞ்சா, தன் பிரச்சனை இருந்த இடம் தெரியாமப் போயிடும்.

இந்த மாதிரியான ஈகை மனிதகுலத்தோட துன்பங்களைப் போக்க ஒரு நல்ல வழி. இந்த நோக்கத்தோடதான், ப்ளேனோ தமிழ்ப்பள்ளி, சாஸ்தா தமிழ் அறக்கட்டளை இரண்டையும் ஆரம்பிச்சோம். தமிழ்ப்பள்ளியை 2001ல ஆரம்பிச்சோம். அறக்கட்டளை ஆரம்பிச்சு 4 வருஷம் ஆகுது. இன்னிக்குப் பெரிய ஆலமரமா வளர்ந்திருக்கு. சேவை செய்யறத்துக்கான வாய்ப்பை எல்லாருக்கும் ஏற்படுத்திக் கொடுக்கறதே பெரிய சேவை.



கே: 'வள்ளியின் காதல்' நிகழ்ச்சியில நூறாயிரம் டாலர் நிதி திரட்டினது ஒரு மைல்கல்லுனு நினைக்கறோம். அதைப்பத்தி சொல்லுங்க....
ப: ஆமாம். 100,000 டாலர் நிதி திரட்டி 'உதவும் கரங்கள்' அமைப்புக்குக் குடுத்தோம். போன வருஷம் 82000 டாலரும், அதுக்கு முந்தின வருஷம் 45,000 டாலரும் திரட்டினோம். நாங்க முதல்வருஷம் ஆரம்பிக்கும்போது 7,000 டாலர் செலவுக்கு வந்தாப் போதும்னு நெனச்சோம், 45,000 டாலர் வந்தது.

எங்க குறிக்கோள் பணம் திரட்டறது கிடையாது. எந்த நல்ல காரியத்துக்கு வேணா பணத்தைக் குடுங்க, எவ்வளவு தர்மம் பண்ணறீங்களோ அந்த அளவுக்கு உங்க வாழ்க்கை நல்லவிதமா அமையும்னு எடுத்துச் சொல்றோம். என்னோட வழிகாட்டி எல்லாரும் வருமானத்துல 10 சதவீதம் தர்மம் செய்யணும்னு சொல்வார். அதன்படி தர்மம் செய்யறதுக்கான வாய்ப்பை சாஸ்தா தமிழ் அறக்கட்டளை மூலம் அமைச்சுத் தரோம். நாங்க ஒளிவு, மறைவு இல்லாம செயல் படறதாலயும், நல்ல காரியங்களுக்குப் பணம் போய் சேருதுங்கறதை கண்கூடாப் பார்க்கறதாலயும், எங்கள்மேல நம்பகத்தன்மை அதிகமா இருக்குன்னு நம்பறோம். உதாரணமா ஒரு கட்டடம் கட்டப் பணம் கொடுத்தா, அந்தப் பணி முடிந்ததும் வீடியோ எடுத்துப் போட்டுக் காட்டுவோம். இப்படி, கடவுள் பேரால நல்ல காரியம் பண்ணறோம். மக்கள் பணி மகேசன் பணிதானே.

கே: பணம் திரட்டினது ஒருபக்கம் இருக்க, 'வள்ளியின் காதல்' மாதிரி ஒரு மெகா ப்ராஜெக்ட்ல இன்னும் பல நல்ல விளைவுகள் இருக்குமே?
ப: ஆமாம். அதுல பங்கெடுத்துக்கிட்ட குழந்தைகள் நல்லா தமிழ் கத்துக்கிட்டாங்க. கத்துக்கக் கத்துக்க தமிழ்மேல ஆர்வம் அதிகரிக்குது. அப்ப அவங்க தமிழை விட்டுறமாட்டாங்க. தான் தமிழன்கற அடையாளம் அவங்களை விட்டுப் போயிடாது. அது பெற்றோர்களுக்குப் புரிய ஆரம்பிச்சுடுச்சு.

கே: ஒரு திருக்குறள் சொன்னா ஒரு டாலர் பரிசு கொடுப்பதும் நல்ல உத்திதான். அதை ரொம்ப வெற்றிகரமா செய்யறீங்களே!
ப: ஆமாம். போனவருஷம் இப்படி 5000 டாலர் குடுத்தோம். இந்த வருஷம் 10,000 டாலர் ஆகும்போல இருக்கு. இப்படித் திருக்குறளைப் படிப்பதனால் தமிழ் சமூகத்துல வரும் மாறுதலைப் பார்க்கும்போது, மக்களுக்கு எங்களை ஆதரிக்கணும்னு எண்ணம் வருது. 'இந்த நிகழ்ச்சிகளுக்குக் குழந்தைகளை அழைச்சிட்டு வந்தா அவங்களுக்கு நல்ல விழுமியங்கள் வரும், தமிழ் கலாச்சாரத்தைத் தெரிஞ்சுப்பாங்க' அப்படீன்னு நம்பறாங்க.

கே: இந்த நிகழ்ச்சிகளுக்கு சகதமிழர்களிடம் வரவேற்பு எப்படி இருக்கு?
டாலஸுல 10,000 தமிழர்கள் இருக்காங்க. ஆனா 'வள்ளியின் காதல்' நிகழ்ச்சிக்கு 1000 பேர் வந்தாங்க. 10 டாலர் டிக்கெட் இருக்கும்போதுகூட, 50 டாலர் டிக்கெட் இருக்கான்னு கேக்கறாங்க

நாம எல்லாத் தமிழர்களும் ஒன்று சேர்ந்தா, என்ன வேணாப் பண்ணமுடியும்னு எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. தமிழர்கள், தனிப்பட்ட முறையில நல்ல பதவியில இருக்காங்க. தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையா செயல்படணும் அப்படீங்கற நோக்கத்துல நாலு வருஷமா இந்த அமைப்பை நடத்திக்கிட்டு வரோம்.

தமிழுக்காக, குழந்தைகளுக்காக, சமுதாயத்துக்காகத் தொண்டு செய்யும்போது நாம நம்மை மறந்துடணும். இது நம்மைப்பத்தின விஷயம் இல்லை. இது குழந்தைகளை, சமுதாயத்தைப் பத்தின விஷயம். இங்க மேலோர், கீழோர் கிடையாது. எல்லாரும் கருத்துச் சொல்லலாம். முடிந்த வேலையைச் செய்யலாம். ஒளிவுமறைவு இல்லாத அமைப்பா இருக்கறதால, ஒத்த கருத்துள்ளவர்கள் எல்லாம் வந்து சேவை செய்ய STFல் வாய்ப்புக் கிடைக்குது.

எங்களுக்குத் தேர்தல், சாதனைப் பட்டியல் மாதிரியான நெருக்கடிகள் கிடையாது. அதுனால நாங்க திடமா என்ன செய்யணுமோ அதைச் செஞ்சுகிட்டிருக்கோம். அதனால பெரிய வளர்ச்சியும் இருக்கு.

கே: ஒருத்தர் முனைஞ்சு செய்தால் இந்தச் சமூகத்தையே ஊக்குவித்து, மாற்றம் கொண்டுவர முடியும்னு நம்பறீங்க. அந்த நம்பிக்கையைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க.
ப: ஒரு தனிமனிதனோட அசைக்க முடியாத நம்பிக்கை ஒரு சமுதாயத்துக்கே ஊன்றுகோலாக இருக்கமுடியும். இதுக்கு காந்தி ஒரு உதாரணம். ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்து, மத்தவங்களைத் தூண்ட முடிஞ்சா எல்லாரும் ஒன்றிணைந்து செயல்படத் தயாரா இருக்காங்க. மக்கள்கிட்ட தலைமைப் பண்புகள் இருக்கு. அது வெளிவர நாங்க உதவறோம்.

இப்ப கிட்டத்தட்ட STF மூலம் 25க்கும் மேற்பட்ட திட்டப்பணிகள்ள ஈடுபட்டிருக்கோம். 40க்கும் மேலாகத் தலைமைப் பண்பு உள்ளவர்கள் இருக்காங்க. 'Basket Brigade'னு ஒரு ப்ராஜெக்ட். ஏழைகள், கைவிடப்பட்டவர்கள், பதின்மவயதுத் தாய்மார்கள், வருமானமில்லாமல் சர்ச் உதவியில் வாழறவங்க இவங்களுக்கெல்லாம், நாங்க உங்க உறவினர்களாக இருக்கோம்னு சொல்லி, துணிமணிகள், உணவுப் பொருட்கள் எல்லாம் நிரப்பி, கிட்டத்தட்ட 75 கூடைகள் 'நன்றியறிதல் நாள்' அன்றைக்குக் குடுக்கப் போறோம். அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்பத்தை எற்படுத்த டோனி ராபின்ஸோட புத்தகமும் ஒண்ணு அதுல வைப்போம்.

அதுக்கு 50 பேர் நன்கொடை கொடுத்திருக்காங்க. 50 பேர் அதைக் கொண்டுபோய்க் கொடுக்கப் போறாங்க. அதுக்கு 3 பேர் தலைமைப் பொறுப்பெடுத்து வேலை செய்யறாங்க. நான் அவங்களுக்குப் பயிற்சி மட்டுந்தான் குடுக்கறேன். இப்ப கிட்டத்தட்ட 100 தன்னார்வத் தொண்டர்கள் இருக்காங்க.



கே: உங்ககூட ஒரு பெரிய டீம் ரொம்ப நல்லா வேலை செய்யுது இல்லையா, அது எப்படி?
ப: அவங்க எனக்காகப் பண்ணலை. தனக்குக் கிடைக்கிற சந்தோஷத்துக்காகவும், தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கிற நன்மைகளுக்காகவும் தொடர்ந்து செய்றாங்க.
'வள்ளியின் காதல்' மாதிரி ஒரு நாடகம் போடும்போது மார்க்கெட்டிங், சேல்ஸ் எதுவும் தெரியாதவங்க போய் டிக்கெட் வித்தாங்க. நாலுபேர்கிட்ட போய்ப் பேசும்போது அவங்களுக்கு மக்கள் தொடர்பு கிடைக்குது. அவங்க குழந்தைகள், 100 மணி நேரம் தமிழில் பேசிப் பயிற்சி பண்ணி, மேடையேறி நல்ல உச்சரிப்போட, தமிழ் வரலாற்றைப் புரிஞ்சுக்கிட்டு பேசும்போது அவங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நமக்குத் தெரியாத விஷயங்களை நம்ம குழந்தைகள் கத்துக்கறாங்கன்னு பெருமையா இருக்கு.

ஒரு நல்ல காரியம் பண்ணும்போது, கடவுளை நினைச்சு, நம்மளை முன்னிலைப் படுத்தாம, மத்தவங்களுக்காகப் பண்ணினா அது வெற்றிகரமா அமையுது. யோசிச்சுப் பாத்தா, ஒரு தனிமனிதனா இதைப் பண்ணி இருக்கமுடியுமான்னா, முடியாது. அப்படீன்னா வேற ஏதோ ஒரு சக்தி இருக்கு. நல்லதையே நினைச்சு, நல்லதையே செய்யும்போது எப்பவுமே, எல்லாமே நல்லவிதமா நடக்கும் என்று நான் நம்புகிறேன்.

வெறுமே இந்தத் தலைமுறைக்கு மட்டும் தமிழ் சொல்லிக் குடுக்கறதாக எண்ணாம, பின்னால வர ஐந்து தலைமுறைக்கும் இது போய்ச் சேரணும்னு செய்கிறோம். இந்தக் குழந்தைகள் தமிழில் டாக்டரேட் பண்ணற அளவுக்கு வளரணும். கொஞ்சம்பேரையாவது முன்னோடிகளாகக் கொண்டுவரணும்னு நாங்க அன்போட உழைக்கிறோம்.

கே: நீங்க தீமிதியெல்லாம் செஞ்சிருக்கீங்க போலிருக்கே?
ப: ஆமாம். நான் டோனி ராபின்ஸ்கிட்ட தன்னார்வத் தொண்டராப் பங்கெடுத்திருக்கேன். அதுல நெருப்புல நடக்கிற பயிற்சி உண்டு. அந்தத் தீ மேலயே நடந்து எந்த பிரச்சனையும் இல்லாம வெளில வரமுடியும்னா நம்மால எந்தப் பிரச்சனையையும் சமாளிக்க முடியும்னு மக்களுக்கு நம்பிக்கை வரும்.

நான் வாராவாரம், வீடுகளிலோ அல்லது அரங்குகள்ளயோ செமினார் நடத்திட்டிருக்கேன். அதுல உடல்நலம் சம்பந்தமான விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறேன். நான் 4 வருஷம் முன்னால அரை மாரத்தான் ஓடினேன். அதுக்கப்புறம் 'சாஸ்தா ஹெல்த் கிளப்' அமைப்பைத் தொடங்கி அமைப்பைத் தொடங்கி 52 பேர் மாரத்தான் ஓடி இருக்கிறார்கள். எங்களால அரைமணி நேரங்கூட ஓட முடியாதுன்னு நினைச்சவங்கள அரை மாரத்தான் ஓட வைச்சோம். எல்லோருமே ஆரோக்கியமாக உணர்வதாகச் சொல்றாங்க.

தவிர, இயற்கை மருத்துவம் மூலமா எந்த நோயையும் குணப்படுத்த முடியும்ங்கறது என்னோட ஆழ்ந்த நம்பிக்கை. உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சி போன்றவற்றாலயும், சமூகப் பணிகள் செய்யறதாலயும், மன அழுத்தம் இல்லாமப் பார்த்துக்கறதாலயும் மீண்டும் இளமையா இருக்க முடியும்னு நான் நம்பறேன். தவிர, ரிலேஷன்ஷிப் பயிற்சியும் கொடுக்கறேன். எங்கிட்ட நிறைய பிரச்சனைகளோட வந்த 2 தம்பதிகள் இப்ப நல்லா சேர்ந்து வாழ்ந்துக்கிட்டிருக்காங்க.

கே: இங்க வந்து உங்களையே நீங்க மீள்கண்டுபிடிப்பு செய்ததாச் சொல்லலாமா?
ப: நிச்சயமா. 15 வருஷத்துக்கப்புறம் இப்ப நான் அப்ப இருந்ததைவிட இளைமையா உணருகிறேன். அந்த அளவுக்கு அமெரிக்காவுல நிறைய கத்துக்கற வாய்ப்புகள் இருக்கு. அதே சமயம் பிரச்சனைகளும் இருக்கு.

நம்ம குழந்தைகள் இங்க இருக்கற சௌகரியங்களுக்குப் பழகிட்டு, நம்ம கலாசாரம் என்ன, நம்மோட வேர்கள் என்ன, நம்ம மூதாதையர்கள் யாரு அப்படீங்கறதை மறந்து போயிடறாங்களோன்னு ஒரு பயம் வருது. அந்த இடைவெளியை நிரப்பறதைதான் என்னோட குறிக்கோளா எடுத்துகிட்டு உழைச்சிட்டிருக்கேன்.



கே: முத்தாய்ப்பாக, இளந்தமிழர்களுக்கு ஒரு வார்த்தை....
ப: Information Age - ஆயிரம் வருஷங்களுக்கு ஒரு தடவையாக இருந்து பின்னர் 50 ஆண்டுகளாக மாறி பிறகு 10 ஆண்டுகள்ல இன்ஃபர்மேஷன் இரட்டிப்பு ஆகி கொண்டிருந்தது. இப்ப இன்ஃபர்மேஷன், ஒரு வருஷத்துல இருமடங்காக ஆயிடுதுன்னு சொல்லறாங்க. எவ்வளவு படிச்சாலும் பத்தாதுங்கற நிலைமை. அதனால எல்லாருக்குமே நிறைய தெரிஞ்சுக்கணும், படிக்கணும்ங்கற பிரெஷர். இதுல நம்மை நாமே தொலைத்து விடுகிறோமோ?

அப்போ, நாம என்ன சாதிச்சிருக்கோம்னு கேள்வி வருது.வாழ்க்கை முறையை அழகா கத்துக்கிட்டு, சம்பாதிக்கிறதெல்லாம் சந்தோஷமா இருக்கறதுக்குதான்னு புரிந்துகொண்டு, வாழ்க்கையை சரியா பேலன்ஸ் பண்ணக் கத்துக்கணும். அதுக்கு சமுதாயப் பணி, சமுதாய நோக்கம் எவ்வளவு முக்கியம்னு புரியணும். அதைப் பெரியவங்களுக்கும், குழந்தைகளுக்கும் எடுத்துச் சொல்லணும். சொல்றதைவிட வாழ்ந்து காட்டி உணர வைக்கணும். அதை எல்லாரும் பின்பற்றினா தீவிரமா ஒரு வைரஸ் மாதிரி பரவும். நாம் அனைவரும் ஒற்றுமையாய் சந்தோஷமான வாழ்க்கை வாழலாம்.

இது டாலஸ்ல மட்டுமில்லாம இங்க இருக்கற நிறைய பேருக்குப் போய்ச்சேரணும்னு STF மூலம் வேலை செய்துகொண்டிருக்கிறேன். திருக்குறள் போட்டி இதுக்கான ஒரு கருவியாக இருக்கும் என்று நம்புகிறேன். முதல்ல ப்ளேனோ தமிழ்ப்பள்ளில நடத்தினோம். அப்புறம் டாலஸ், டெக்சஸ் இங்கெல்லாம் நடத்தினோம். ஹூஸ்டன்ல, செயின்ட் லூயிஸ்ல இப்ப நடத்தறாங்க. கலிஃபோர்னியால நடக்கப் போகுது. இதை உலக அளவில எடுத்துட்டுப் போய் அதன்மூலமா ஒத்த கருத்துள்ளவர்களை இணைச்சு பல நல்ல காரியங்கள் செய்ய முடியும்னு நம்பறேன். தென்றல் என்னை அப்படிப்பட்ட பலரிடம் எடுத்துச் செல்லும்னு நினைக்கிறேன். அதற்காக முன்கூட்டியே தென்றலுக்கும் அதன் வாசகர்களுக்கும் நன்றிகள்.

உரையாடல்: தினகர், டாலஸ்;
சி.கே. வெங்கட்ராமன், சன்னிவேல்.

*****


நான் தயார், நீங்கள்?
தமிழர்களை ஒன்றிணைக்கத் திருக்குறள் போட்டி ஒரு நல்ல வழி. இதையே எல்லா ஊர்களுக்கும் போய் செய்யமுடிஞ்சா இன்னும் சந்தோஷமா இருக்கும். அதுக்காக இந்தத் திருக்குறள் போட்டியை யார் எங்கே நடத்த விரும்பினாலும் அதை வெற்றிகரமா நடத்தறதுக்கான வழிமுறைகளைப் பகிர்ந்து கொள்ளத் தயாரா இருக்கோம். அதுபோல டாலஸில் இருக்கும் ஒரு இசைப்போட்டி அமைப்பாளர்களும் இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை எப்படி பத்தே நாள்ல ஏற்பாடு செய்யறது, பணம் எப்படி சேகரிக்கறதுன்னு மலைச்சாங்க. நான் அவர்களுடன் கலந்து பேசி சில ஆலோசனைகள் கூறி, அதன்படி அவங்க ரொம்பவும் வெற்றிகரமாச் செய்து முடிச்சாங்க. எந்த தமிழ் அமைப்பா இருந்தாலும் நிகழ்ச்சிகளை அனைவருடனும் இணைந்து வெற்றிகரமா நடத்தறதுக்கான வழிமுறைகளைப் பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம். அப்படி இணைந்து செய்தால் இங்க இருக்கிற தமிழ் சமுதாயம் தமிழன் என்ற அடையாளத்துடன், நமது பல்லாயிர வருடப் பாரம்பரியத்துடனும் ஒற்றுமையாக சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

- வேலு ராமன்

*****


உறவுகள் சீர்பட வயதேது!
நான் ஒரு 70 வயசுப் பெரியவரைப்பத்தி சொல்றேன். அவர் ஒரு பேராசிரியரா இருந்தவர். எல்லா வகையிலயும் நல்லா இருந்த அவருக்கு ஒரு நீண்டகால உறவுப் பிரச்சனை. நான் அவரோட அணுகுமுறையை மாத்திக்கச் சொல்லிக்குடுத்த போதுதான் அவருக்கு அப்படிப் பண்ணினா விஷயங்கள் நல்லவிதமா இருக்கும்னு புரிஞ்சது. அவர், தான் செஞ்சது, செய்யறதுதான் சரிங்கற எண்ணத்துல இருந்தார். எது நடந்து போச்சோ அதை மறந்து, மன்னிப்போம்னு சொல்லிப் புரியவைச்சேன். அதுல நல்லதை மட்டுமே எடுத்துக்கணும்னு சொன்னேன். எல்லாரும் ஒண்ணா சேர்ந்து இருக்கறதுக்குத்தான் முக்கியத்துவம் குடுக்கணும்னு புரிய வைச்சேன். அதுக்கப்புறம் அவர்கிட்ட ஆச்சரியகரமான மாற்றம் வந்துடுச்சு. இப்ப அவர் தன் அணுகுமுறையை மாத்திக்கிட்டு, குடும்பத்தோட ஒன்று சேர்வதை ஆவலா எதிர்பார்த்துகிட்டிருக்கார்.

- வேலு ராமன்

*****


குடும்பத்தின் துணை
என் மனைவி விசாலாட்சி தமிழ்ப் பள்ளியை நிர்வகிப்பதோடு எல்லாப் பணித்திட்டங்களின் நிதி மற்றும் பிறவற்றையும் நிர்வகிக்கிறார். என்மகன் கணபத் வேலு யூட்யூப் சேனல் மற்றும் பிற மீடியாவைக் கவனித்துக் கொள்கிறார். என் மகள் ரம்யாவினால்தான் 'உதவும் கரங்கள்' அமைப்போடு நாங்கள் தொடர்பு கொண்டோம். ரம்யா சென்னையில் உதவும் கரங்கள் வாசிகளோடு இரண்டு மாத காலம் தங்கியிருந்து நேரடி அனுபவம் பெற்றார் (பார்க்க: http://myexperienceatudavumkarangal.blogspot.com). இவர்கள் தரும் முழு ஒத்துழைப்புக்கு நான் நிச்சயம் நன்றி சொல்லியாக வேண்டும்.

- வேலு ராமன்

*****


தொடர்புக்கு:
வலையகம்: www.pltamil.com

© TamilOnline.com