ஜூலை 20, 2013 அன்று திருமதி. ஹேமா ராஜகோபாலனின் சிஷ்யைகள் செல்வி. ஸ்வேதா சேகரன் மற்றும் செல்வி. ஆர்த்தி சேகரனின் நாட்டிய அரங்கேற்றம் சிகாகோவின் லேக் ஐரிஷ் பெர்ஃபார்மன்ஸ் ஆர்ட் சென்டரில் நடந்தது. டாக்டர். மாதங்கி சேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். திருமதி ஹேமா ராஜகோபாலனின் வலசி ராகப் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி துவங்கியது. சாரங்கா ராகத்தில் அமைந்த 'கண நாதனே...' என்ற கீர்த்தனையை அடுத்து, ஸ்வாதித் திருநாளின் 'பாவயாமி ரகுராமம்' என்ற கீர்த்தனைக்கு இருவரும் அந்தந்தப் பாத்திரங்களாகவே மாறி பாவங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தினர். பாரதியாரின் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' பாடலுக்கு ஆர்த்தி கிருஷ்ணனாகவும், ஸ்வேதா கோபிகையாகவும் ஆடிய விதம் சிறப்பு.
தொடர்ந்த 'மகா காளி' பாடலுக்கு ஸ்வேதா அம்மனின் பல்வேறு நிலைகளைக் கண்முன் காட்டினார். ஆர்த்தி, 'தெவிட்டாத திருநடனம்' பாடலில் சிவபிரானை நேரில் கண்ட உணர்ச்சியை ஏற்படுத்தினார். 'மயில்வாகனா மனமோகனா' பாடலுக்கு இருவரும் ஆடி முருகனின் புகழை அழகாக வெளிப்படுத்தினர். பத்மஸ்ரீ தண்டாயுதபாணி அவர்களின் ஹிந்தோள ராகத் தில்லானா நிகழ்சியின் மகுடமாக அமைந்தது. செல்வன். அக்ஷய் ஸ்ரீதரின் இன்னிசை, ஹேமா ராஜகோபாலனின் நடன அமைப்பும், நட்டுவாங்கமும் மிகச் சிறப்பு. திரு. டி.எஸ். சங்கரன் (புல்லாங்குழல்), திருமதி. சித்ராம்பாரி கிருஷ்ணகுமார் (வாய்ப்பாட்டு), திரு. விஜயராகவன் (மிருதங்கம்) திரு. வெங்கடேஷ் பத்மநாபன் (வயலின்), திரு. ஜே.ஏ. ஜெயந்த் (புல்லாங்குழல்) நிகழ்ச்சிக்கு நல்ல பக்கபலமாக இருந்தன. டாக்டர் சந்திரசேகரின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
டாக்டர் கமலா ராதாகிருஷ்ணன், ஓக்லஹாமா |