அரங்கேற்றம்: சுமனா கிருஷ்ணகுமார்
செப்டம்பர் 7, 2013 அன்று குரு தீபா மகாதேவன் அவர்களின் சிஷ்யை செல்வி. சுமனப்ரியா கிருஷ்ணகுமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஒலோனி கல்லூரியின் ஜாக்சன் அரங்கில் நடைபெற்றது. சிறந்த தாளக்கட்டுடனும், அருமையான முகபாவங்களுடனும் சுமனா ஆடினார்.

'தடைகளைக் களையும் விநாயகப் பெருமானே' என்ற புஷ்பாஞ்சலியுடன் துவங்கினார். அடுத்து, பக்தர்களுக்கு ஒளியாகவும், கோபத்தில் நெருப்பாகவும் ஜொலிக்கும் சக்தியின்மீது அமைந்த பாரதியின் பாடலுக்குச் சிறப்பாக ஆடினார். காம்போஜி ராகத்தில் அமைந்த வர்ணத்தில் சிருங்கார ரசத்தை ஆண்டாளாய் வெளிப்படுத்தினார். மதுரை ஆர். முரளிதரன் அவர்கள் மெட்டமைத்த 'ஆனந்தம் பொங்கும் இன்பத் தாண்டவம்' என்ற பாடலுக்குச் சிவனின் நாட்டிய வேகத்தை வெளிப்படுத்தினார். 'நின்றந்த மயில் ஒன்று' என்கிற பாடலில் மயில், முகில், ஆகியவற்றை ஆடியது அருமை. புரந்தரதாசரின் 'கும்மன கரையதிரே' என்ற பாடலில் தாயே, நான் இனி தவறே செய்ய மாட்டேன் என்று கூறும் கண்ணனாய் ஆடி பாராட்டுப் பெற்றார். ராமர், அனுமன் மீதான தில்லானாவுடன் அரங்கேற்றம் நிறைவடைந்தது.

திருமதி. தீபா மகாதேவனின் நட்டுவாங்கம், திருமதி. ஸ்னிக்தா வெங்கட்ரமணியின் பாடல், திரு. ரவீந்திர பாரதியின் மிருதங்கம், திருமதி. ஸ்ருதி சாரதியின் வயலின், பிரசன்னா ராஜனின் புல்லாங்குழல் சிறப்பான பக்கபலம்.

நித்யவதி சுந்தரேஷ்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com