செப்டம்பர் 21, 2013 அன்று கனெக்டிகட்டின் ஃபார்மிங்டன் நகரத்திலுள்ள IAR நடுநிலைப்பள்ளியில் செல்வி. ப்ரீத்திகா சேஷாத்ரி மற்றும் செல்வி. அபிநயா நிரஞ்சன் இணைந்து வழங்கிய கர்நாடக இசைக்கச்சேரி நடைபெற்றது. இது Interval House of Connecticut என்ற இல்ல வன்முறைத் தடுப்பு அமைப்புக்கும், கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் கல்விப் பணிக்கும் நிதி திரட்டும் பொருட்டு நடத்தப்பட்டது. இளைய தலைமுறையினர் முன்னின்று சமூகநோக்குடன் இதை நடத்தியது பாராட்டத்தக்கது.
9ம் வகுப்பு பயிலும் இவ்விருவரும் திருமதி. கலா பிரசாத்திடம் இசை பயிலத் தொடங்கி, கடந்த மூன்று வருடங்களாக திரு. ஸ்ரீரங்கம் S. பிரசன்னா வெங்கடேஷ் அவர்களிடமும் கற்று வருகின்றனர். அபிநயா கர்நாடக இசை தவிர வயோலா மற்றும் பரதத்தில் தேர்ந்தவர். ப்ரீத்திகா, பள்ளி இசைக்குழுவில் வயலின் வாசிப்பதோடு தேசியப் பாடகர் குழுவாகிய OAKE-லும் பள்ளியின் சார்பில் பங்கேற்கிறார்.
கேதார கௌளையில் தியாகராஜரின் 'சாமி தயஜூட' என்ற வர்ணத்தில் ப்ரீத்திகா கச்சேரியைத் துவக்கினார். அடுத்து ஹம்சத்வனியில் 'வாதாபி கணபதிம்' கிருதியை கல்பனா ஸ்வரங்களுடன் பாடினார். கச்சேரியின் சிகரமாக நீலகண்ட சிவனின் பூர்விகல்யாணி ராக ஆலாபனையில் தொடங்கி 'ஆனந்த நடமாடுவார்' பாடலை அநாயாசமாகப் பாடினார். அடுத்து வந்த அன்னமாச்சார்யாரின் 'நாராயணதே நமோ நமோ' பாடலை பேஹாகில் உருக்கமாகப் பாடினார். இறுதியாக லால்குடி ஜெயராமன் இயற்றிய தேஷ் ராகத் தில்லானாவில் நிறைவு செய்தார்.
அபிநயா நவராகமாலிகாவில் ஆதி தாளத்தில் பட்ணம் சுப்ரமணிய ஐயரின் வர்ணத்தில் துவங்கினார். சாரங்கா ராகத்தில் பெரியசாமித் தூரனின் 'கணநாதனே'வைக் கல்பனா ஸ்வரங்களுடன் பாடினார். கச்சேரிக்கு மகுடம் சூட்டினாற்போல கரஹரப்ரியா ராகத்தில் 'பக்கல நிலபடி' என்ற தியாகராஜ கிருதியை ஆலாபனையோடு துவங்கினார். மதுரை ஸ்ரீநிவாசனின் 'கருணை தெய்வமே'வை சிந்துபைரவி ராகத்தில் பாடி மனமுருக வைத்தார். இறுதியாக கானடா ராகத்தில் பூச்சி ஸ்ரீநிவாச அய்யங்காரின் தில்லானாவோடு நிறைவுசெய்தார்.
வயலினில் திரு. கல்யாண் கோபாலகிருஷ்ணன், மிருதங்கத்தில் திரு. ஆனந்த் ஐயரும் கச்சேரிக்குப் பக்கபலமாய் இருந்தனர். நிகழ்ச்சியை டாக்டர். நிரஞ்சன் சங்கரநாராயணன், டாக்டர். பார்த்தா சேஷாத்ரி ஆகியோர் தொகுத்து வழங்கினர். Interval House அமைப்பின் பிரதிநிதி திரு. பிரசாத் மேனன், தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. நம்பி ஸ்ரீனி ஆகியோர் உரையாற்றினர். டாக்டர். சந்திரா நாராயணன் நன்றியுரை வழங்கினார்.
சீதா நாராயணன், உத்ரா ஸ்ரீதர், கனெக்டிகட் |