மிசோரி: தமிழிசை விழா
செப்டம்பர் 22, 2013 அன்று செயின்ட் லூயிஸ் மிசோரியில் தமிழிசை விழா ஒன்றை Midwest Music Conservatory அரங்கில் மிசோரி தமிழ் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தார்கள். மங்கள இசையுடன் விழா தொடங்கியது. வரவேற்புரை ஆற்றிய திரு. பொற்செழியன் "உலகெல்லாம் வழங்கிவரும் இசைமுறை எல்லாம் தமிழர் இசையினின்றும் தோன்றியவை என்று கூறப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் அடிப்படையாய் விளங்கும் ச,ரி,க,ம,ப,த,நி என்னும் ஏழு சுரங்களை உலகுக்குத் தந்தவர்களும் பழந்தமிழர்களே" என்றுரைத்தார்.

திருமதி. கீதா சிவசங்கர் விழாவைத் தொகுத்து வழங்கினார். இசை ஆசிரியர்கள் திருமதி. மாலா கோபினாத், திருமதி. வித்யா ஆனந்த், திருமதி. சீமா கஸ்தூரி, திருமதி. நித்யா சாய்கணேஷ், திரு. ஆத்மனாதன், செல்வி. கோமதி, செல்வி. விதுஸ்ரீ ராஜேஷ்வரி பட் ஆகியோரின் இசை மாணவர்கள் தமிழிசை விருந்து படைத்தனர். 5 வயதுமுதல் மேல்நிலைப் பள்ளி மாணாக்கர் வரை 52 பேர் தமிழிசை பாடி மெய் மறக்கச்செய்தனர். அகத்தியர், அருணகிரிநாதர், பாரதியார், பாரதிதாசன், பாபனாசம் சிவன், தண்டபாணி தேசிகர், அருணாசலக் கவிராயர், பெ. தூரன், ஊத்துக்காடு வேங்கடகவி மற்றும் பலரின் பாடல்களை குழந்தைகள் சங்கதிகள், தாளங்களுடன் பாடி வியப்பில் ஆழ்த்தினர். இறுதியில் 19 மாணவர்கள் "சாந்தி நிலவ வேண்டும்" என்று பாடியது மனதைக் கொள்ளை கொண்டது.

சங்கத் தலைவர் திரு. பிருத்விராஜ் நன்றியுரை வழங்கினார். பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இசையாசிரியர்கள் கெளரவிக்கப்பட்டார்கள்.

ஜெயஸ்ரீ மற்றும் சின்னமணி

© TamilOnline.com