சிகாகோ: 'ஹனிமூன் கப்பிள்ஸ்' நாடகம்
செப்டம்பர் 28, 2013 அன்று சிகாகோவின் திரிவேணி நாடக குழுவினர் கலைமாமணி காத்தாடி ராமமூர்த்தியுடன் இணைந்து, அவரது இயக்கத்தில் 'Honeymoon Couples' என்ற க்ரேஸி மோகன் எழுதிய நகைச்சுவை நாடகத்தை சிகாகோ இந்துக் கோவில் அரங்கத்தில் மேடையேற்றினர். பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுப் போன தேனிலவை, வயதான பின்பு கொண்டாட நினைக்கும் ரமணி-ருக்மணி தம்பதியினரின் அனுபவங்களே இந்த நாடகம். அவர்களின் ஹனிமூன் பயணத்தில் ஏற்படும் இடையூறுகள், திருப்பங்கள், சமாளிப்புகள் என முழு நாடகமுமே சிரிப்பு விருந்துதான்.

தேர்ந்த நடிப்பால் ரசிகர்களை நகைச்சுவை மழையில் நனைய வைத்தார் கதாநாயகன் காத்தாடி ராமமூர்த்தி. அவரது வசன உச்சரிப்பும், முகபாவங்களும் அரங்கில் சிரிப்பலைகளைத் தோற்றுவித்தன. அவருக்கு ஈடுகொடுத்து நடித்து கரவொலியை அள்ளினர் ஸ்ரீவித்யாவும், லக்ஷ்மியும். நண்பர் ரகோத்தமனாக ஸ்ரீராமும், தில்லுமுல்லு மேனேஜராக ரங்காவும், மகாராஜாவாக கார்த்திக்கும், மருத்துவராக ராஜும் நடிப்பில் அசத்தினார்கள். கடன் வசூலிக்க வரும் செட்டியார் ஹரிஹரனின் சமாளிப்புகளும், ஆபீஸ் நிர்வாகி மணிகண்டன் படும் அவஸ்தைகளும், உதவியாளர் சுந்தரராமனின் கட்டிய கோஷமும் குபீர் சிரிப்பைக் கிளப்பின.

சிறிய வேடங்களில் தோன்றினாலும் தனி முத்திரை பதித்தார்கள் ரமேஷ், ஸ்ரீனிவாஸ், தீபா, ஜெயஸ்ரீ மற்றும் வசுமதி. நாடகத்தை சிறப்பாக ஒருங்கிணைத்து அளித்த ரங்காவுக்கு ஒரு சபாஷ்.

'ஹரியுடன் நான்' புகழ் லக்ஷ்மி மாதவனின் இறைவணக்கப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. நாடகத்தைத் தொடர்ந்து வந்த நாட்யா குழுவினரின் நடன நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. ஏற்பாடுகளை நிறைவாகச் செய்திருந்த ரகுராமனுக்கு பாராட்டுக்கள்.

ராஜ் வரதன்,
சிகாகோ, இல்லினாய்

© TamilOnline.com