கனெக்டிகட் தமிழ் மையம் துவக்கம்
செப்டம்பர் 28, 2013 அன்று கனெக்டிகட் தமிழ் மையத்தின் துவக்க விழா நியூ ஹேவன் நகரில் நடைபெற்றது. தமிழ்த் தாய் வாழ்த்து, அமெரிக்க நாட்டுப்பண்ணுடன் துவங்கிய விழாவில் தமிழ் மையத் தலைவரும் நிறுவனருமான முனை. பழனி சுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முன்னாள் தலைவர் முனை. முத்துவேல் செல்லையா வாழ்த்துரை வழங்கினார். நியூ யார்க் தமிழ்ச்சங்கத் தலைவர் டாக்டர் எம்.என். கிருஷ்ணன் மையத்தை வாழ்த்தியும், கலைநிகழ்ச்சி நடத்திய லக்ஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினர் மற்றும் பாடகர்களைப் பாராட்டியும் உரை நிகழ்த்தினார். நியூ யார்க் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகர் திருமதி. காஞ்சனா பூலா மற்றும் கனெக்டிகட்டைச் சேர்ந்த திருமதி. ஸ்ரீமதி ராகவன் ஆகியோர் நிகழ்ச்சியை அழகாகத் தொகுத்து வழங்கினர்.

விழாவிற்கு கனெக்டிகட், நியூ யார்க், நியூ ஜெர்ஸி, மாசசூஸெட்ஸ், மேரிலாந்து போன்ற பல்வேறு மாகாணங்களிலிருந்து தமிழ் மக்கள் திரளாக வந்திருந்தனர். லக்ஷ்மண் ஸ்ருதி இசைக் குழுவின் தலைவர் லக்ஷ்மண் மற்றும் பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், ஹரி சரண், விஜய் பிரகாஷ், சுசித்ரா, ஆனந்த், கல்பனா ஆகியோர் ரசிகர்களை இசை வெள்ளத்தில் மூழ்கடித்தனர். முனை. பழனி சுந்தரம் வரவேற்புரையில் தமிழ் மையம் வெற்றிநடை போடும் என்று கூறினார். இது அமெரிக்காவின் முதல் தமிழ் மையம் என்றும் படிப்படியாக நாடுமுழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார். முனை. முத்துவேல் செல்லையா வாழ்த்துரையில், இதை நாடு தழுவிய அளவில் எடுத்துச் செல்லத் தாம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். மேலும் தமிழ் தொடர்பான அகழ்வாராய்ச்சிக்கு உதவித் தொகை வழங்க எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

டாக்டர் எம்.என். கிருஷ்ணன் வாழ்த்துரையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முனை. சுந்தரம் மற்றும் குழுவினரைப் பாராட்டினார். நிகழ்ச்சியின் இறுதியில் கலைஞர்களுக்குத் தமிழ் மையத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. விழாவிற்கு மேநாள் இந்திய குடியரசுத் தலைவர் முனை. அப்துல் கலாம் அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com