OVBI: வளமான பாரதத்தை உருவாக்க
வரும் 2014ல் இந்தியாவுக்கான தேர்தலை எதிர்கொள்ளவும், வளமான, வலிமையான பாரதத்தை உருவாக்கவும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்த இணையக் கலந்துரையாடல் அக்டோபர் 19 அன்று நடந்தது. டாக்டர் கிரண் பேடி தலைமையிலான Overseas Volunteers for a Better India (OVBI), (www.overseasvbi.org) என்ற அமைப்பு Google Hangout மூலம் இதை ஏற்பாடு செய்தது. இதில் அமெரிக்கா, பிரிட்டன் உட்பட உலகெங்கும் உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் கலந்து கொண்டனர். இணையம் மற்றும் இணைய வானொலி மூலம் நடந்த இந்நிகழ்வில் தன்னார்வத் தொண்டர்களுடன் இணைந்து இந்தியாவில் எவ்வாறு ஊழலற்ற தூய்மையான அரசியலை உருவாக்கலாம் என்பதுபற்றி விவாதிக்கப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளாவன:

1. இளம் தொண்டர்கள் தொலைதூர கிராமங்களுக்குச் சென்று ஒவ்வொருவரிடமும் வாக்காளர் அடையாள அட்டை பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. 2. வாக்குப்பதிவு குறித்த செயல்முறை தொடர்பாக, உலகெங்கிலுமுள்ள இந்தியர்களின் கேள்விகளுக்கு அவரவர் மொழியில் பதில் சொல்லும் இலவச வாக்காளர் ஹெல்ப்லைனை உருவாக்குவது. 3. ஊடகங்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, அவர்களை வலுவான இந்தியாவை உருவாக்க அறிவுறுத்தி, வாக்களிப்பதை ஊக்குவிக்க ஊடகப் பிரச்சாரம் மேற்கொள்வது.

வாக்களர்களுக்கு உதவ மும்பையில் 8888888888 என்றதொரு ஹெல்ப்லைன் எண்ணை ஏற்படுத்தியிருக்கிறார் கிரண் பேடி. இதன்மூலம் அடுத்த பத்து நாட்களுக்குள் இந்தியா முழுவதும் உள்ள 300 தொகுதியினர் உதவி மற்றும் ஆலோசனை பெறமுடியும். மகாராஷ்டிராவில் வசிக்கும் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் இதன்மூலம் பதிவு செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் VBI தனது லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் மூலம் மக்களைச் சந்தித்து வாக்காளர் பதிவு மற்றும் மக்களது கல்வி, வாழ்க்கைத் தர உயர்வுக்கான ஆலோசனை வழங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் VBI-யின் அமைப்பாளர்கள் சிலரும், தன்னார்வத் தொண்டர்களும் கலந்துகொண்டனர். OVBI கூகிள் கலந்துரையாடல் மேலாளர், "நாம் இதுபற்றிய விழிப்புணர்வை நிறுவனங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் மூலம் உருவாக்க முடியும். மாணவர்களிடம் 'votathon' போட்டிகள் அமைப்பதன் மூலமும், புதிய வாக்காளர்களை மாணவர்களைக் கொண்டு பதிவு செய்வதன் மூலமும் இதுபற்றிய கவனத்தை ஏற்படுத்தலாம்" என்று கூறினார். மேலும் அவர், "வாக்களிப்பதற்கான தகுதி கொண்ட சுமார் ஏழு கோடி மாணவர்கள் இதுவரை பதிவு செய்யவில்லை" என்று தெரிவித்தார். VBIயின் தேசிய மேலாளர் வசுதா ஜுன்ஜுன்வாலா, "நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் 'நான் சிறந்த இந்தியா உருவாக வாக்களிப்பேன்' என்பதுபற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இது முதல் படி. தொடர்ந்து இதை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் மற்ற இளைஞர்களிடமும், பொதுமக்களிடமும் இதுபற்றிய அக்கறையை ஏற்படுத்த முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கிரண்பேடி பேசுகையில், "இதற்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் உதவ வேண்டும். இந்தியாவில் வசிக்கும் தங்கள் குடும்பம் மற்றும் உறவினர்களிடம் எடுத்துக் கூறி வலிமையான, ஊழலற்ற, வளமான இந்தியா உருவாக உதவவேண்டும்" என்றார். இம்முயற்சி பற்றி விரிவாக அறிய வலைமனை: adrindia.org

OVBI மே, 2013ல் துவங்கப் பெற்றது. இந்த அமைப்பு இந்தியாவிற்காக மட்டுமல்லாமல், அமெரிக்காவாழ் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கும் உதவுகிறது. அரசியலில் ஊழல், பெண்கள் மீதான வன்முறை, விவசாயிகள் தற்கொலை, தண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றின் மீதும் அக்கறை செலுத்தும், Volunteers for a Better India அமைப்பு பிப்ரவரி 3, 2013 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு:
இணையதளம்: www.overseasvbi.org
மின்னஞ்சல்: chaudharysatej@gmail.com
தொலைபேசி: 202-468-9474

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com