கர்நாடிக் மியூசிக் ஐடல் அமெரிக்கா - சீசன் 3
இந்தியாவின் பிரபலமான டிவி நிகழ்ச்சியான 'கர்நாடிக் மியூசிக் ஐடல்' தனது மூன்றாவது பதிப்பை அக்டோபர் மாதம் அமெரிக்காவின் நான்கு நகரங்களில் படமாக்கியது. உலகப் புகழ்பெற்ற கிளீவ்லண்ட் ஆராதனை மற்றும் சென்னையின் மேக்சிமம் மீடியா இணைந்து தயாரித்த இந்த நிகழ்வின் மேற்குக்கரை முதல்சுற்றுத் தேர்வு வளைகுடாப் பகுதியில் அக்டோபர் 20ம் தேதி நடந்தது. இதற்கு முன்னர் சிகாகோ, டாலஸ் மற்றும் நியூ ஜெர்சி நகரங்களில் முதல்சுற்றுக்கள் நடைபெற்றிருந்தன. வளைகுடா நிகழ்ச்சியில் பங்கேற்க சான் டியேகோ முதல் சாக்ரமென்டோ வரையுள்ள இடங்களிருந்து பலர் வந்திருந்தனர். இந்த வருடத்தின் புது அம்சமான குழுக்கள் பங்கேற்பு நிகழ்ச்சி. பெரும் வரவேற்புப் பெற்றது.

இந்த வருடம் தேர்வாளர்களாக பங்கேற்றவர்கள் திரு நெய்வேலி சந்தானகோபாலன் மற்றும் திரு கே.என். சசிகிரண். வளைகுடா நிகழ்ச்சிக்குப் பெரிதும் உதவியவர் பட்டியலில் வைத்யநாதன், மணி கிருஷ்ணன், சுபா சந்திரன் மற்றும் பத்மா மோகன் ஆகியோர் குடும்பத்தினர் இடம்பெறுவர். வெற்றிபெற்றோர் யாரென்று அறிய ஆவலாக இருக்கிறதா, டி.வி.யில் நிகழ்ச்சியைப் பாருங்கள்!

தகவல்: V.V. வைத்யநாதன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா.

© TamilOnline.com