அக்டோபர் 26, 2013 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் பல்சுவை திருவிழா ஒன்றை லெமான்ட் கோவில் கலையரங்கத்தில் நடத்தியது. நகைச்சுவைப் பட்டிமன்றம் மற்றும் மெல்லிசை நிகழ்ச்சி ஆகியவை கொண்ட விருந்தாக விழா அமைந்தது. சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. டோனி வரவேற்புரை வழங்கினார். துணைத் தலைவர் திரு. சோமு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். விழாவிற்கு அரங்கம் நிரம்பிவிட்டது குறித்து சங்கத் தலைவர் திரு. அறவாழி மகிழ்ச்சி தெரிவித்தார்.
பேரா. சாலமன் பாப்பையா தலைமையில் "அமெரிக்க வாழ்க்கையில் அதிகம் அவதிப்படுவது ஆண்களே! பெண்களே!" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. "ஆண்களே" அணியின் தொடக்கப் பேச்சாளர் திரு. முத்துவேலு, அவரைத் தொடர்ந்து பேசிய திரு. மணிகண்டன் ஆகியோர் "பெண்கள் கோவப்பட்டால் ஒன்று பத்திரகாளி இல்லை பாத்திரம் காலி" போன்ற பஞ்ச் டயலாக் வரிகளால் மக்களை சிரிப்புக் கடலில் ஆழ்த்தினர். இந்த அணிக்குத் தலைமை ஏற்றுப் பேசிய பட்டிமன்றம் ராஜா அரங்கத்தைச் சிரிப்புவெடிகளால் அதிரவைத்தார்.
"பெண்களே" அணியின் பேச்சாளர்கள் திருமதி. சித்ரா, திருமதி. ப்ரீத்தி ஆகியோர் நகைச்சுவை மட்டுமின்றி உணர்ச்சிபூர்வமாகப் பேசி கரவொலி பெற்றனர். அணிக்குத் தலைமையேற்றுப் பேசிய திருமதி. பாரதி பாஸ்கர், இலக்கியத்திலிருந்து மட்டுமின்றி, உளவியல் ரீதியாகவும் தம் அணிக்கு வலு சேர்த்தார். எதிரணியின் வாதங்களைத் திறமையாக மறுத்து மக்களை உற்சாகக் கடலில் ஆழ்த்தினார். நடுவர் தமது உரையில், பெண்கள் மனைவி, தாய், சகோதரி, மகள் எனப் பல பரிமாணங்கள் எடுத்து அதில் படும் அவஸ்தைகளை மேற்கோள் காட்டி எங்குமே வாழ்க்கையில் அதிகம் அவதிப்படுவது பெண்களே என்றுதீர்ப்பு வழங்கினார்.
இடைவேளைக்குப் பிறகு மெல்லிசை நிகழ்ச்சியை திரு. ரகுராம் தொடங்கி வைத்தார். புதிய மற்றும் பழைய பாடல்கள், மெலடி, குத்துப் பாடல்கள் என அரங்கத்தை இசைமழையில் சிகாகோ பாடகர்கள் நனைய வைத்தனர். திரு. ஐங்கரன், திருமதி. ரமா, திருமதி, பவித்ரா மற்றும் திரு ரவிசங்கர் ஆகியோர் தங்களது குரல் வளத்தால் ரசிகர்களைக் கவர்ந்தனர். அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பிரசாந்த், ஸ்வேதா ஆகியோர் தமிழ் உச்சரிப்பில் பிழையில்லாமல் பாடியது பாராட்டுக்கு உரியது.
பாடகர்கள் Dr. ரோச், நாதன், ப்ரீதி, எட்மன்ட், சந்திரகலா, ஷில்பா ஆகியோர் நிகழ்ச்சிக்கு மெருகேற்றினர். திரு. சினோ தலைமையில் அமைந்த இசைக்குழு அருமையாக இசைக்கருவிகளை வாசித்தனர். நிகழ்ச்சியைத் திருமதிகள். ரம்யா, கமலா, பசீதா, அல்லி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
இந்த நிகழ்ச்சி மூலமாக, தமிழ்நாடு அறகட்டளையின் ABC Project அமைப்புக்கு 5௦௦௦ டாலர் நன்கொடையாக, சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் திருவாளர்கள். வீரா, ரகுராம், டோனி ஆகியோர் வழங்கினர். இந்தக் காசோலையை அறக்கட்டளைத் தலைவர் திரு. அறவாழி, பொருளாளர் திரு. பாஸ்கரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியின் களிப்பைவிட 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்ற பாரதியின் வரிக்கு அர்த்தம் சேர்த்ததில் சிகாகோ தமிழ் சங்கம் பெருமிதம் கொள்வதாக சோமு குறிப்பிட்டார். இறுதியில் செயலாளர் திரு. சாக்ரடீஸ் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
மணி குணசேகரன், ரோமியோவில், இல்லினாய் |