கலைவாணர் பணமுடையில் கஷ்டப்பட்ட நேரம். உடல் நலிவுற்றிருந்த அதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார்.
ஒருநாள் காலை நேரம். கலைவாணர் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர்முன் வந்து நின்றான் ஒருவன். அவன் கலைவாணரிடம் முன்பு வேலை பார்த்தவன்.
"அடடா நீயா? எப்படியிருக்கிறாய்?" என்று அன்போடு கேட்டார் கலைவாணர்.
"நல்லா இருக்கேன் அண்ணே!" என்று அவன் அவரை வணங்கினான். பின் தனக்கு இரண்டு நாளில் திருமணம் நடக்க இருப்பதாகவும், அதற்காகப் பண உதவி வேண்டி கலைவாணரை நாடி வந்திருப்பதாகவும் தெரிவித்தான்.
"ஓஹோ. சபாஷ். உனக்குக் கல்யாணமா? நல்லா செஞ்சிக்க" என்று கலைவாணர் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு வெள்ளிக் கூஜாவில் வெந்நீர் எடுத்துக் கொண்டு அங்கே மதுரம் வந்தார்.
உடனே தன் பேச்சை நிறுத்திய கலைவாணர், "நீ அந்தக் கூஜாவை அப்படி வை. வெந்நீர் குடிக்கறதுக்கு முன்னால மருந்து சாப்பிடணும். மருந்தை எடுத்துக்கிட்டு வா" என்றார்.
அது மருந்து சாப்பிடும் வேளை அல்ல என்று மதுரத்திற்குத் தெரிந்தாலும், மறுப்பேதும் சொல்லாமல் அங்கிருந்து சென்றார்.
மதுரம் போய்விட்டார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கலைவாணர், அந்த வெள்ளிக் கூஜாவை வந்தவனிடம் கொடுத்துவிட்டு, "இந்தா... இதை வித்து உன் திருமணச் செலவுக்கு எடுத்துக்கொள்" என்றார்.
கண்களில் கண்ணீர் சிந்தக் கலைவாணரைப் பணிந்து அவன் அந்த கூஜாவை வாங்கிக் கொண்டான்.
அந்த அறைக்கு வெளியேயும் கண்ணீர்த் துளிகள் சிந்தின. அவை மதுரத்தினுடையவை.
அவன் சென்றபின் அறைக்கு வந்த மதுரம் எங்கே அந்தக் கூஜா என்று கலைவாணரைக் கேட்கவுமில்லை; அவர் அதைப்பற்றி ஏதும் சொல்லவுமில்லை.
மேன்மக்கள், மேன்மக்களே!
பரந்தாமன் எழுதிய "கலைவாணர் கதை" நூலிலிருந்து. |