தெரியுமா?: காஞ்சி காமகோடிபீட ஆஸ்தான வித்வானாக மது வெங்கடேஷ்
ஃப்ளோரிடா மாகாணத்தில் வாழும் இசைக்கலைஞர் மது வெங்கடேஷ் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வானாகக் கௌரவிக்கப் பட்டுள்ளார். காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற நவராத்திரி உற்சவத்தில் இவரது கலைத்தொண்டைப் பாராட்டி, ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த விருதை வழங்கி ஆசிர்வதித்தார். பாரம்பரிய சங்கீதம், தமிழிசை உட்படப் பல்வேறு கலைத்துறைகளில் அர்ப்பணித்துக்கொண்டோருக்கு இந்த கௌரவம் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மது வெங்கடேஷ் சிறுவயது முதற்கொண்டே கர்நாடக சங்கீதம், சம்பிரதாய ஹரிபஜனை, திருப்புகழ் பஜனை மற்றும் பக்திப் பாடல் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். அமெரிக்காவில் பல்வேறு மேடைகளிலும், கோவில்களிலும் கர்நாடக இசைக்கச்சேரி, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய பஜனைகளில் இவரது குரலைக் கேட்டு உருகாதோர் குறைவு. இதுமட்டுமன்றி ஃப்ளோரிடா மாகாணத்தில் பல்வேறு குழந்தைகளுக்கு இசைப்பயிற்சியும் அளித்து வருகிறார்.

ஸ்ரீவித்யா,
இல்லினாய்

© TamilOnline.com