நவம்பர் 12, 2005 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி விழா மேற்கு புளூம்·பீல்டு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. தீபாவளி பத்து நாட்களுக்கு முன்பே முடிந்திருந்த நிலையிலும் வந்திருந்தவர்கள் ஒருவருக்கொருவர் 'ஹேப்பி தீபாவளி' சொல்லிக் கொண்டதில் அன்றுதான் உண்மையான தீபாவளியோ என்று தோன்றியது.
உணவு அருந்தும் அரங்கத்தில் உயிர்க் கொலு! மிகவும் ஆர்வமாக, தமிழ்ச் சங்க சிறுவர் சிறுமியர் கொலுப் படிகளில் ஏறி உயிரோட்டமுள்ள பொம்மைகளாக வீற்றிருந்தனர். இரண்டு முறை விட்டுவிட்டு நடந்த இந்தக் காட்சியில் குழந்தைகள் உடலும் மனமும் தளராமல் பங்கேற்றது பாராட்டுக்குரியது.
தமிழ் சங்க இளைஞர் அணியின் ஓராண்டுச் சாதனைகளைச் சொக்கும் தமிழில் விளக்கிய இளைஞர் ஹரீஷின் பாணி அற்புதம்.
பிரதான நிகழ்ச்சியாக இசைக் கச்சேரி. இரண்டரை மணி நேரம் போனதேத் தெரியாமல், இசைமழையில் நம்மை நனைய வைத்தார்கள். ஒவ்வொரு பாடலுக்கு மிடையே உடைகளை மாற்றியும், நடனக் கலைஞர்களை நடனமாடச் செய்தும் அசத்திவிட்டார்கள். கூட்டு முயற்சியின் பலன் வியக்கத்தக்கதுதான்.
இந்த ஆண்டின் செயற்குழு தம்பதி சமேதராக அளித்த 'மலரும் நினைவுகள்' புதுமை. அடுத்து வரப் போகும் பாடலைத் தமிழிலேயே அறிவித்த விதம் இன்னமும் புதுமை.
கச்சேரி முடிந்து வீட்டிற்குக் கிளம்பலாம் என்றால் "போகாதீர்கள் மற்றொரு நடனவிழா இருக்கிறது" என்றார்கள். "உங்களுக்கு நடனம் ஆடத் தெரியா விட்டாலும் பரவாயில்லை. நாங்கள் கற்றுத் தருகிறோம்" என்று ஆரம்பத்திலேயே 'டாண்டியா' (குஜராத்தியரின் நவராத்திரிக் கோலாட்ட நடனம்) அமைப்பாளர்கள் கூறியது என்னைப் போன்ற பலருக்கும் ஆறுதலாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் இத்தீபாவளி விழாவில் கோலாட்டமும் இருந்தது, கோலாகலமும் இருந்தது.
காந்தி சுந்தர் |