வெ. துரைசாமி: 'கனவு மெய்ப்படவேண்டும்'
இன்றைய கால கட்டத்தில் அரசியல் என்பது சாக்கடை, அதுவும் தூய்மைப்படுத்தவே முடியாத நாற்றம் தரும் சாக்கடை என்பது எல்லோருக்கும் தெரியும்தான். எங்கு பார்த்தாலும் லஞ்சம், சுயநலம், ஜாதிவெறி, கொலை, கொள்ளை, போலீஸ் அராஜகம், அரசியல்வாதிகள் மக்களிடமிருந்து ஓட்டுக்காகச் செய்யும் சாகசங்கள், மதவெறிச் சண்டைகள், இது போதாதென்று அண்டை நாடு நமக்கு அன்றாடம் கொடுக்கும் பயங்கரவாதப் பிரச்சனைகள், சுயநலமிக்க ஆட்சியாளர்களின் அலட்சியத்தினாலும், சரியான நிர்வாகத் திறமையின்மையினாலும் முன்னேற்றத்தில் முடக்கம், வாணிகத்தில் வளர்ச்சியின்மை, வேலியே பயிரை மேயும் நிலையாக அரசாங்கமே மிக அதிக அளவில் வரிகளை விதித்ததோடு அல்லாமல் பணத்தைத் தூக்கிப் போட்டால் எதையும் யாரையும் வாங்கலாம் என்ற நிலை, ஏழைமை, நீண்டுகொண்டே இருக்கும் ஈழப்பிரச்சனை, அதை நீட்டித்துக் கொண்டே இருக்கும் அரசியல்வாதிகள்... சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு விடிவு எப்போது!

நம்மில் பலர் இந்தப் பிரச்னைகளோடு இப்படியே வாழப் பழகிவிட்டோம். ராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன, இதுதான் நம் தலைவிதி என்று போய்விடுவர். சிலர் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பர்மா போன்ற நாடுகளை ஒப்பிட்டுப்பார்த்து இவற்றைவிட இந்தியா பரவாயில்லை என அல்பதிருப்தி அடைவதுண்டு. சிலர் இந்த நிலைமையிலிருந்து மீள வழியில்லையா என்று ஏங்குவர், ஆனால் வாய்மூடிக் கிடப்பர். இன்னும் சிலர் எப்படியாவது யாராவது மனதுவைத்து இந்த நாட்டை முன்னேற்றிக் காட்டவேண்டும், இறைவன் நல்லாட்சி வருவதற்குத் துணை இருப்பான் என்றும் நம்பிக்கையோடு இருப்பார்கள். இந்த நம்பிக்கைதான் நமது பலம். இந்த பலத்தைக் கொண்டுதான் நூலாசிரியர் துரைசாமி இத்தகைய ஒரு புத்தகத்தைப் படைத்திருக்கவேண்டும்.

இந்த அற்புதக் கனவைக் காணும் வெ. துரைசாமி வங்கிப் பணியில் இருந்ததோடு அதன் அனைத்திந்திய அளவில் தொழிற்சங்கத் தலைவராகச் சேவை செய்து 1999ல் பணி ஓய்வு பெற்றவர். நலப்பணிகள் பலவற்றை வங்கிப் பணியாளருக்குப் பெற்றுத் தருவதில் பெரும்பங்கு ஆற்றியவர். ஆகவே வெறும் 'நாற்காலிச் சிந்தனையாளர்' அல்ல. நூலின் நாயகன் பிஜேவிடம் இவரின் சாயலைக் காண முடிந்தால் அதில் ஆச்சரியம் இல்லை. முன்னுரை போதும், கதையைப் பார்க்கலாம்.

நாயகன் பிஜே ஒரு தொழிற்சங்க ஆதரவாளர் என்பதை முதலிலேயே ஆழமாகப் பதிவு செய்துவிடுகிறார் ஆசிரியர். பிஜே ஒருநாள் சாலையில் ஒரு நோயாளியை ஏற்றுச் செல்லும் ஆம்புலன்ஸ் ஊர்தி, அநாவசியமான அரசியல் கட்சியின் ஊர்வலத்தின் காரணமாக மரண ஊர்தியாகத் திரும்பச் செல்ல நேரிடுவதைக் கண்டு, வருந்தி, ஒரு தொலைக்காட்சிக்கு இதற்குக் காரணம் அந்தக் கட்சி ஊர்வலம்தான் என்று வேதனையாகப் பேட்டி கொடுக்கிறார். அந்த பேட்டி பெரிய அரசியல் பிரச்சனையாகி, அவர் வேலையை இழக்க நேரிடுகிறது. 'இந்த நாடு திருந்தவே திருந்தாதா?' என்ற வருத்தத்துடன் இனி இந்த நாட்டைக் காப்பாற்ற ஆண்டவனால் மட்டுமே முடியும்' என்று வெறுப்புடன் உறங்கப்போக, ஆண்டவனே அவர்முன் வந்து அவரை முன்வைத்தே பாரதநாட்டைக் காப்பாற்ற முன்வருகிறார் எனச் சுவையாக ஆரம்பிக்கிறது கதை.

நூலாசிரியர் இதற்கான சந்தர்ப்பங்களை ஆண்டவன் ஏற்பாடு செய்துதருவதாகச் சொன்னாலும் இயல்பாக அமைவதாக எழுதியிருப்பது போற்றத் தக்கது. மயிலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இறந்துபோக அதற்கு இடைத்தேர்தல் நடக்க, இந்த இடைக்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளால் பி.ஜே. சற்றே மக்களிடையே பெயர்பெற்றுவிட, அவரே இடைத்தேர்தலில் நின்று, சந்தர்ப்பங்கள் சரியான சமயத்தில் கை கொடுக்க, சட்டமன்ற உறுப்பினராகி விடுகிறார். பிஜேயின் அரசியல் பயணம் தொடர்கின்றது.

பிஜேயின் சமூக சேவைகள் மக்களிடையே பிரபலமாகிவிட, நாடு முழுவதும் அவர் பெயர் பேசப்படும் நிலை வருகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் நியாயம், நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, ஆட்சித் திறன் கொண்டோரை மாநிலம்தோறும் கண்டெடுத்து ஒரு செயல்படும் குழுவாக அவர்களை உருவாக்குகிறார். இவர்கள் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவித அட்டகாசமும் இல்லாமல் நல்லாட்சியைக் கொடுப்போம் என்ற ஒரே வாசகத்துடன் நேர்மையாகப் பேசி பாராளுமன்றத்துக்குச் செல்வதாக கதைக்களன் அமைகிறது.

அட்டூழிய அரசியல்வாதிகளின் கையில் இருந்த நாடாளுமன்றம் முதன்முதலாக நேர்மையும் நெஞ்சுரமும் கொண்ட நல்லவர்கள் கைக்குச் செல்கிறது. பிஜே பிரதமராகிறார். இனிதான் ஒவ்வொரு பிரச்னையும் விஸ்வரூபம் எடுக்க, அவற்றை எப்படிச் சமாளித்து வெற்றி காண்கின்றார் என்று கதை மேல் விரைகிறது.

நாட்டின் சிறு சிறு பிரச்சனையிலிருந்து, பாகிஸ்தான் பயங்கரவாதம், காஷ்மீரம், ஈழப் பிரச்னை வரை எதையும் விடாமல் கையிலெடுத்து அதற்கான தீர்வுக்குச் செயல்வடிவம் தந்து, 'மனமிருந்தால் மார்க்கமுண்டு' என்ற வகையில் ராமராஜ்யத்தைக் கொடுப்பதாக முடிக்கிறார் ஆசிரியர். இன்றைய கால கட்டத்தில் இப்படியெல்லாம் முடியுமா என்று பலர் கேட்கலாம். அதற்காகத்தான் 'கனவு மெய்ப்படவேண்டும்' என்று இறைவனிடத்தில் ஆரம்பத்திலேயே யாசிக்கிறார் ஆசிரியர்!

ஒரு விஷயத்தை நிச்சயமாகக் குறிப்பிடவேண்டும். நல்ல தலைவனும் அந்தத் தலைவனை மதித்து நடக்கும் நல்ல துணைவர்களும் இருந்தால் இத்தகைய நல்ல தீர்வுகள் நம் பாரதத்திலும் காண வழி உண்டுதான். இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் ஏற்கனவே சொன்னபடி ஒரு முடிவில்லா ஏக்கம் கிடைத்தாலும் கூடவே பலமான நம்பிக்கை ஒன்று கிடைக்கிறது. அந்த நம்பிக்கையை வாசகனுக்குத் தருவதுதான் துரைசாமியின் வெற்றிகூட. இப்படியொரு கனவு மெய்ப்படவேண்டும் என்று யார்தான் விரும்ப மாட்டார்கள்!

('கனவு மெய்ப்பட வேண்டும்'; ஆசிரியர்: வெ. துரைசாமி; விலை: ரூ. 195; பதிப்பாளர்: ஆப்பிள் பப்ளிஷிங் இன்டர்நேஷனல் (பி) லிமிடட்)

திவாகர்,
விசாகப்பட்டினம்

© TamilOnline.com