அம்மாவின் பிரார்த்தனை
அன்று செவ்வாய்க்கிழமை. கோவிலில் துர்க்கைக்கு ராகுகால பூஜை நடந்து கொண்டிருந்தது. வெய்யிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட வந்து கொண்டிருந்தனர். அதிகம் கன்னிப் பெண்கள்தாம்.

அபிஷேகத்தைப் பார்த்த பெண்கள், அலங்காரம் முடியும்வரை பக்திப் பாடல்களைப் பாடினர். அரைமணி நேரம் ஆனது. திரைச்சீலை விலகியதும் பக்தர்கள் "அம்மா, தாயே, பராசக்தி’ என்று கூவிப் பரவசமானார்கள். அர்ச்சகரும் சன்னதியிலிருந்து இறங்கிச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார். ஒரு ஓரமாக நின்று அலங்காரம் சரியாக அமைந்திருக்கிறதா என்று பார்த்தார். முகத்தில் ஒரு திருப்தி.

அடுத்து அர்ச்சனை. நைவேத்தியம். எல்லாம் கிரமமாக நடந்தது. சேவார்த்திகள் அர்ச்சனைத் தட்டுக்களை நீட்ட ஒவ்வொரு தட்டையும் இயந்திரம்போல வாங்கிக் கொண்டார். அவரது வாய், சேவார்த்திகளின் பெயர், நட்சத்திரத்தைக் கூறியது, ஆனால் கண்களோ கூட்டத்தைத் துழாவியது.

ஒருவழியாக அர்ச்சனை முடிந்து கற்பூரம் காட்டிவிட்டு பக்தர்களிடம் கற்பூரத்தட்டை நீட்டினார். வந்திருந்த கூட்டம் ஆரத்தியை ஒற்றிக்கொண்டு பிரசாதத்தையும் வாங்கிச் சென்றது. அர்ச்சகர் இவ்வளவு நேரம் யாரை எதிர்பார்த்திருந்தாரோ அவர்—ஒரு பெண்—அவரை நோக்கி வரலானாள்.

"வாம்மா கமலா. உன்னைத்தான் இவளோ நேரமா எதிர்பார்த்துண்டிருந்தேன். ஏம்மா இவ்வளவு லேட். எங்கே பிரசாதம்? அபிஷேகம், அர்ச்சனை முடிந்து ஜனங்கள் முக்கால்வாசிப் பேர் போயிட்டா" என விடாமல் பேசினார்.

கமலா, ஒரு ஏழைத்தாயின் ஒரே மகள். உறவு என்று ஒருவருமில்லை. ஒருவேளை பணமிருந்தால் பந்துக்கள் இருந்திருப்பார்களோ என்னவோ? கமலாவுக்குத் திருமண வயது தாண்டிவிட்டது என்றாலும் அவளது தாயாரின் நம்பிக்கைமட்டும் இன்னும் பட்டுப்போகவில்லை. கமலாவின் அம்மா ஒருவர் வீட்டில் சமையல் வேலை பார்த்து வருகிறாள். நேரம் கிடைக்கும்பொழுது இந்தக் கோவிலுக்கு வந்து போய்க் கொண்டிருப்பாள். ஒன்பது செவ்வாய்க் கிழமை விரதமிருந்து, கடைசி செவ்வாய் அன்று எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல் செய்து துர்க்கைக்குப் படைத்துவிட்டுச் சேவார்த்திகளுக்கு விநியோகம் செய்யச் சொல்லி இருந்தார்.

இந்த வாரம் கமலாவின் விரதம் முடிவடைந்ததால் பிரசாதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். எதிரில் நின்றிருந்த கமலாவிடம் மறுபடியும் கேட்டார் "பிரசாதம் எங்கேம்மா?"

"அது... வந்து... " கமலா தடுமாறினாள்.

"அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? பிரசாதம் பண்ணலையா?"

"இல்லை மாமா. அம்மா மடியோட பண்ணிக் கொடுத்தா. நானும் 3 மணிக்கு முன்னாலேயே ஆத்துலேர்ந்து புறப்பட்டுட்டேன். வர்ற வழில இரண்டு கார் மோதிண்டு பெரிய ஆக்ஸிடெண்ட். போலீஸ் வந்து எல்லோரையும் திரும்பி வேற பாதைல சுத்திப் போகும்படிச் சொல்லிட்டா. அப்படிச் சுத்தி வரும்போது திடீர்னு ட்ராஃபிக்அதிகமாயிடுத்து. வண்டி எல்லாம் ஜானவாச ஊர்வலம் மாதிரி நகர்ந்திண்டிருந்தது. ஒரு சிக்னல்கிட்ட ஒரு பிள்ளைதாச்சிப் பெண் பிச்சை கேட்டுண்டிருந்தா. வெயில் தாங்காம திடீர்னு மயக்கம்போட்டு விழுந்துட்டா. ரொம்பப் பேர் பார்த்துட்டு அப்படியே முணுமுணுத்துண்டே அவாவா வழியிலே போயிட்டா. யாரோ ஒரு புண்ணியவான் பக்கத்துக் கடைலேர்ந்து தண்ணி வாங்கிண்டு வந்து அவ மூஞ்சில தெளிச்சார். கண்ணைத் திறந்து பார்த்தவளை மெல்ல எழுப்பி பிளாட்ஃபார்ம்ல கொண்டு வந்து விட்டார்."

"பாவமே, அப்புறம் என்ன ஆச்சு..." ஆர்வம் தாங்காமல் குறுக்கிட்டார் அர்ச்சகர்.

"அவளோட இரண்டு குழந்தைகள் வேற. ஒண்ணும் புரியாம, ‘அம்மா பசி.. அம்மா பசி’ன்னு ஒரே அழுகை. . அந்தப் பொண்ணோ ரெண்டு நாளா சாப்பிடலையாம். எனக்கு மனசு கேக்கலை. அதனால தூக்கில இருந்த எலுமிச்சை சாதத்தையும் சர்க்கரைப் பொங்கலையும் எடுத்து அப்படியே அவ அலுமினிய பாத்திரத்துல போட்டுட்டேன். குழந்தைகள் ரெண்டும் உடனே சாதத்தை அள்ளி அள்ளி தன் வாயிலயும் போட்டுண்டு, அவா அம்மாக்கும் ஊட்டி விட்டதுகள்."

"ம்ம்ம்ம்ம்ம்ம்....."

"அம்மாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவா மாமா. விரதம் கெட்டுப் போயிடுத்து. அதனால கல்யாணத்துக்குத் தடைவரும்னு ரொம்பக் கவலைப்படுவா. ஆனா, இந்தச் சாப்பட்டை அம்பாளுக்கு நைவேத்தியம் செய்யாததால விரதபங்கம் ஆகி எனக்கு கல்யாணமே நின்னு போனாக்கூட பரவாயில்ல மாமா. அந்தப் பிச்சைக்காரியும், அவ குழந்தைகளும் ஒரு வேளையாவது வயிறு நிறைய சாப்பிட்டதேன்னு என் மனசுக்கு ரொம்ப திருப்தியா, சந்தோஷமா இருக்கு. நீங்கதான் சொல்வேளே ’யாதேவி ஸர்வ பூதேஷு தயாரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ’ன்னு."

கமலா தொடர்ந்தாள், "வழக்கமா இங்க அம்பாளுக்கு நைவேத்தியம் பண்ணிட்டு வந்திருக்கிறவாளுக்கு விநியோகிப்போம். ஆனா இன்னிக்கு விநியோகம் முதல்லயே ஆயிடுத்து. அவா சாப்பிட்டது, அந்த அம்பாளே சாப்பிட்ட மாதிரி எனக்குத் திருப்தியா இருக்கு மாமா... "

அர்ச்சகர் வாயடைத்து, மெய்சிலிர்த்துப் போய் நின்றார்.

பின் தழுதழுத்த குரலில் "கமலா... அம்பாள் இன்னிக்கு உன்னை சோதிச்சுப் பார்த்திருக்கா. அதுல நீ ஜெயிச்சுட்டே. அவளோட அனுக்ரஹம் உனக்கு எப்பவும் இருக்கும். உனக்கு ஒரு குறையும் வராது" சொல்லும்போதே குரல் உடைந்து கண்ணீர் அவரது கண்களில் வழிந்தது.

கமலாவும் அர்ச்சகரும் அம்பாளைப் பார்க்க, அம்பாள் புன்னகையை பூ அலங்காரத்தில் உதிர்த்துக் கொண்டிருந்தாள்.

கமலாவின் பிரார்த்தனை அவளது அம்மா வருத்தப்படாமல் இருக்க வேண்டும் என்பதுதான். அம்மாவின் பிரார்த்தனை’யை அம்பாள் நிறைவேற்றும் வழி அந்த அம்பாளுக்குத்தானே தெரியும்!

ராதா விஸ்வநாதன்

© TamilOnline.com