சிடுமூஞ்சி ராஜாவை சிரிக்க வைப்பது யார்?
ஒரே ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தார். அவரது முகம் எப்போதும் கடுகடுவென்றே இருக்கும். இதனால் மக்கள் அவரை "சிடுமூஞ்சி ராஜா!" என்று அழைத்தனர். இது அவருக்குத் தெரியவந்தது.

கண்ணாடிக்கு முன் நின்று தன்னையே உற்றுக் கவனித்தார். மக்கள் சொல்வதில் தவறில்லை என்று புரிந்தது. தன்னை யார் சிரிக்க வைக்கிறாரோ அவர் விரும்பும் பரிசைப் பெறலாம் என்றும், முயற்சியில் தோற்றால் அவருக்கு அரசவையில் 108 செருப்படி கிடைக்கும் என்றும் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

மறுநாளே அந்நாட்டுக் குடிமகன் ஒருவன் வந்து, "மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம் என்று உணர்ந்த மன்னா வாழ்க!" என்றான்.

"போதும் போதும்! நீ வந்த காரணம் என்ன?"

"நிபந்தனையுடன் கூடிய தங்கள் அறிவிப்பைக் கேட்டு வந்துள்ளேன்."

"சரி, ஆரம்பிக்கலாம்."

அரசவையில் அனைவர் முகத்திலும் ஒரு வியப்பும் விரக்தியும் கூடிய எதிர்பார்ப்பு, நிசப்தம். "இவனாவது நம் மன்னரைச் சிரிக்க வைக்கப்போவதாவது" என நினைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"மன்னா, காலணியில் ஒன்றைக் கழற்றித் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். நான் தோற்றுவிட்டால் நொடிப்பொழுதும் தாமதிக்காமல் என்னை அடிக்க வசதியாக இருக்கும்" என்றான் அவன்.

மன்னர் உடனே இடதுகாலின்மேல் வலதுகாலை மடித்து வைத்து ஒற்றைக் காலணியை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டார்.

அவன் சற்றும் தாமதிக்காமல் ஓடிப்போய் மன்னரின் வலது உள்ளங்காலில் தன் கை விரல்களால் மென்மையாக வருடினான்.

குறுகுறுப்புத் தாளாத மன்னர் குழந்தையைப் போல வளைந்து, நெளிந்து, பின் சிரித்து விட்டார். பின் அந்த மனிதனை நோக்கி, "என்னை வெற்றிகொண்ட குடிமகனே, நீ விரும்பும் பொருளைக் கேள்" என்றார்.

"மன்னா, தங்கள் கையிலுள்ள அந்த ஒற்றைக் காலணியை மட்டும் கொடுங்கள் போதும்" என்றான்.

மன்னருக்கு ஒரே வியப்பு. "ஒற்றைக் காலணி யாருக்கும் பயன்படாது. இரண்டையும் நீயே எடுத்துக் கொள்" என்றார்.

"மிக்க நன்றி மன்னா! ஆனால் இந்தக் காலணிகள் தங்களுக்கு மிகவும் ராசியானவை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே இதற்கு ஒரு விலையைக் கொடுத்துவிட்டு நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்" என்றான் மிகப் பணிவாக.

மன்னருக்கு இக்கட்டான நிலை. மதிப்பைக் குறைத்துக் கொடுத்தால், மன்னர் காலணிகளின் மதிப்பு இவ்வளவுதானா என்றாகிவிடும். ஒன்றும் சொல்லமுடியாத சூழ்நிலையில் பத்தாயிரம் பொற்காசுகளைக் கொடுத்து காலணிகளைப் பெற்றுக் கொண்டார்.

இதை எப்போது நினைத்தாலும் மன்னருக்குச் சிரிப்பு வந்துவிடும். அப்புறமென்ன சிடுமூஞ்சி ராஜா, சிரிச்ச மூஞ்சி ராஜா ஆகிவிட்டார், அவ்வளோதான்!

பாவலர் தஞ்சை தர்மராசன்,
செயின்ட்லூயிஸ்

© TamilOnline.com