இரண்டு தண்டனைகள்
தெனாலிராமன் கிருஷ்ணதேவராயரின் அவையில் இருந்த விகடகவி என்பது உங்களுக்குத் தெரியும். அவன்மீது மன்னருக்கு மிகுந்த அன்பு உண்டு. சமயத்தில் அவன் மன்னருக்கு கோபம் ஏற்படும்படி ஏதாவது செய்தாலும் இறுதியில் நன்மையிலேயே முடியும் என்பதால் மன்னர் அவன்மீது மதிப்பு வைத்திருந்தார். ஆனால் இது அமைச்சருக்கும், ராஜகுருவுக்கும் பிடிக்கவில்லை. தெனாலியின் மீது பொறாமை கொண்ட அவர்கள் அவனை எப்படியாவது ஒழித்துக்கட்டச் சமயம் பார்த்திருந்தனர்.

ஒரு சமயம் உடல்நலக் குறைவால் தெனாலிராமன் அவைக்கு வரவில்லை. இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்த ராஜகுருவும், அமைச்சரும் தெனாலிமீது இல்லாததும் பொல்லாததும் சொல்லி மன்னரிடம் கோள்மூட்டினார்கள்.

"தெனாலிராமன் உங்களை மதிப்பதே இல்லை மன்னா, பாருங்கள் சில நாட்களாக அவன் அவைக்கு வரவில்லை. உங்களிடம் தகவல் சொல்லியிருக்க வேண்டுமல்லவா! ஏன் சொல்லவில்லை? எல்லாம் உங்கள் மீதுள்ள அலட்சியம்தான்" என்றார் ராஜகுரு.

"ஆமாம். ஆமாம். மன்னர் எனக்கு மிகவும் நெருக்கம். நான் சொல்வதை எல்லாம் கேட்பார் என்று அவன் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறான். உண்மையில் அவன் ஒரு முட்டாள். மன்னர்தான் அவனை அதிகம் நம்புகிறார். மதிக்கிறார்" என்றார் அமைச்சரும்.

இதைக் கேட்ட மன்னர் குழம்பினார். ஒருவேளை தெனாலிராமனுக்கு மிகுந்த இடம் அளித்துவிட்டோமோ, அவன் முட்டாள்தானோ என்று நினைத்தார். உடன் காவலர்களை அழைத்த அவர் "நாளை காலை தெனாலி இங்கு அவசியம் வந்தாக வேண்டும். 'இது மன்னர் உத்தரவு' என்று அவனிடம் சொல்லிவிட்டு வாருங்கள்" என்று சொல்லி எழுந்து சென்றார்.

மறுநாள் காலை.

உடல் முழுதும் போர்த்திக்கொண்டு, தலைக்கு ஒரு முக்காடும் போட்டுக்கொண்டு அவைக்கு வந்தான் தெனாலிராமன். அவனைப் பார்த்ததும் மன்னருக்குச் சிரிப்பு வந்தது. அதேசமயம் கோபமும் வந்தது. "ஏன் சில நாட்களாக அவைக்கு வரவில்லை?" என்று கேட்டார் சீற்றத்துடன்.

"மன்னா, எனக்கு உடல்நலமில்லை. அதுதான் காரணம்."

"அப்படியானால் எனக்கு தகவல் சொல்லியிருக்கலாமே!"

"என் மகனை அனுப்பினேன். அவன் அரண்மனைக் காவலர்களைப் பார்த்து பயந்து ஓடிவந்து விட்டான்."

"தெனாலி, இங்கு எல்லோரும் உன்னை முட்டாள் என்கிறார்கள். உனக்கு நான் அதிக இடம் கொடுத்துவிட்டேன் என்கிறார்கள். எனக்கும் கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருக்கிறது. நான் உன் அறிவுத் திறனை சோதிக்கப் போகிறேன். நீ ஏதேனும் ஒரு விஷயத்தைச் சொல். நீ சொல்வது உண்மையாக இருந்தால் உனது தலை வெட்டப்படும்; நீ சொல்வது பொய்யாக இருந்தால் நீ கழுவில் ஏற்றப்படுவாய்" என்றார்.

இதைக் கேட்டதும் ராஜகுருவுக்கும், அமைச்சருக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. இன்றோடு தெனாலி தொலைந்தான் என எண்ணி மகிழ்ந்தனர்.

தெனாலி என்ன பதில் சொல்லப் போகிறான் என்று அவையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தது.

ஏற்கனவே ஜுரத்தால் நடுங்கிக் கொண்டிருந்த தெனாலிக்கு மேலும் உடம்பு நடுங்கியது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு தந்திரமாக, "மன்னா, தாங்கள் என்னை கழுவில் ஏற்றப் போகிறீர்கள்" என்றான்.

அதைக் கேட்ட மன்னர் கிருஷணதேவராயர் திகைத்தார். தெனாலி சொல்வது உண்மையானால் அவனுடைய தலை வெட்டப்பட வேண்டும். அவ்வாறு வெட்டப்பட்டால் அவன் "கழுவில் ஏற்றப் போகிறீர்கள்" என்று கூறியது பொய்யாகிவிடும். அவன் கூறியது பொய் ஆனால் அவனைக் கழுவில் ஏற்ற வேண்டும். கழுவில் ஏற்றினால் அவன் கூறியது உண்மை என்று ஆகிவிடும். உண்மை என்றால் அவனை கழுவில் ஏற்றாமல் தலையை வெட்டவேண்டும். அதனால் என்ன செய்வது என்று புரியாமல் மன்னர் குழம்பினார்.

பின் அவையிலுள்ளவர்களிடம், "இப்படி ஒரு பதில்மூலம் நம்மை எதுவுமே செய்யமுடியாமல் செய்துவிட்ட தெனாலிராமனா முட்டாள்! அவனல்லவா புத்திசாலி! அவனை விகடகவியாக வைத்திருப்பதில் இந்த சமஸ்தானம் பெருமை கொள்கிறது. அவனைப் பிடிக்காதவர்கள் தாரளமாக இந்த நாட்டைவிட்டு வெளியேறலாம்" என்றார், ராஜகுருவையும், அமைச்சரையும் பார்த்துக் கொண்டே!

அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்! தலைகுனிந்தனர், அவ்வளவே!

சுப்புத்தாத்தா

© TamilOnline.com