பாரதம் - சில பயணக் குறிப்புகள்
2. கண்ணுறங்காத காலம்

எந்த ஒரு கதையோ, காவியமோ, புதினமோ, இதிகாசமோ, எதுவானாலும் சரி ஒவ்வொன்றிலும் அடிப்படையாக நூல் பிசகாமல் கவனித்து வர வேண்டியது, அதன் கால ஓட்டம். எது முதலில் நடந்தது, எது அடுத்ததாக நடந்தது, இதற்குப் பிறகு எந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்று வரிசைப் படுத்தி மனத்தில் வாங்கிக் கொள்வதுதான் வாசகன்முன்னே உள்ள சவால்.

இவ்வளவு எளிய ஒரு செயலைப்போய்ச் சவால் என்று சொல்கிறேனே என்று தோன்றலாம். கதாசிரியரின் அல்லது காவிய கர்த்தாவின் வைப்புமுறையால் கதைப்போக்கு முன்னும் பின்னுமாக மாறுபடலாம். ஒரு முன்னாள் நிகழ்வு, கதையின் இறுதிப் பகுதியில் சொல்லப்படலாம்; அல்லது கதையே நடுப்பகுதியிலிருந்தோ, கடைசிப் பகுதியிலிருந்தோ தொடங்கி, flashback உத்தியின் மூலமாகச் சொல்லப்பட்டிருக்கலாம். எனவே, கால நதியின் ஓட்டம் ஆங்காங்கே கலங்கிக் காணப்பட்டால், கதையில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவக் கோவையை ஒழுங்குபடுத்தி மனத்தில் வாங்கிக் கொண்டால்தான் கதையோட்டம் பிடிபடும்.

இந்த வகையில் ராமயணத்தின் கால ஓட்டம் ஒப்பீட்டளவில் சீரான போக்கை உடையது. வால்மீகியின் மூலத்தில், தொடக்கத்தில் வரும் சில சர்க்கங்களை விட்டுவிட்டால், காலநதி முன்னோக்கியே ஓடுகிறது. ஆரம்பத்தில் வரும் சில சர்க்கங்களில்தான், இராமன் இயற்றிய அசுவமேத யாகத்தின் போது, குச-லவர்கள், வால்மீகி இயற்றிய சீதாயணத்தைப் பாடியவாறு தோன்றுகிறார்கள்; இராமன், அவர்கள் வாய்மொழியாகத் தன் கதையைத் தானே கேட்பதாகத் தொடங்குகிறது. கம்பன் இந்தப் பகுதியை விட்டுவிட்டதால், தமிழ் வாசகர்களுக்கு இந்த மாறுபாடுகூடத் தென்பட வாய்ப்பில்லை. கதைப்போக்கு, வரிசை பிசகாமல் நடக்கிறது. சம்பவக் கோவையில் முன்-பின்னான சுழற்சிகள் இல்லை.

ஆனால் பாரதக் கதையின் அமைப்பே மிகமிகச் சிக்கலான ஒன்று. இங்கே காலம் என்பது பற்பல அடுக்குகளைக் கொண்டது. 'முற்காலங்களில் இப்படி ஒரு வழக்கமிருந்தது' என்று பாரதத்தில் தென்பட்டால், அது பாரதத்துக்கு முற்பட்ட காலம் என்பதனால் கூடுதலாக ஒரு பரிமாணம் சேர்கிறது. அதையும் தவிர்த்து, கதை தொடங்குவதோ, ராமாயணத்தைப் போல் கதாபாத்திரத்தின் காலத்திலேயே இல்லாமல், அர்ஜுனனுடைய கொள்ளுப்பேரனான ஜனமேஜயர் நடத்திய சத்ர யாகத்தின்போது அங்கே வந்திருந்த ரோமஹர்ஷணர் (அல்லது லோமஹர்ஷணர்) மகனான உக்கிரசிரவஸ் என்னும் சூதர் (இந்த 'சூதர்' என்னும் சொல் பல்வேறு விதமாகப் பொருள் கொள்ளப்பட்டு, பலரால் பலவிதமாகப் பேசப்பட்டு வந்திருக்கிறது. இந்த இடத்தில் சூதருக்கு 'பாணன்' என்பது பொருள். கர்ணன் வளர்ந்த குலமான சூதகுலம் வேறு. அதைப்பற்றியும் இந்தத் தொடரில் விரிவாகப் பேச இருக்கிறோம்) வந்து, “உங்களுடைய பாட்டானர்களுடைய கதையை வியாசர் இயற்றி, அவரிடமிருந்து நான் கற்றிருக்கிறேன். உங்களுக்கு அதைச் சொல்லும் விருப்பமுடையவனாய் இருக்கிறேன்” என்று தொடங்கி, பிறகு அவரோடு வைசம்பாயனரும் கதை சொல்ல இணைந்துகொள்கிறார். ஆகவே, மஹாபாரதம் முற்றிலும் நடந்து முடிந்து நான்காவது தலைமுறையில்தான் கதை சொல்லவே படுகிறது. அர்ஜுனன்-அபிமன்யு-பரீட்சித்து-ஜனமேஜயர் என்பது வரிசை.

ஆக, இதிகாசத்தை இயற்றிய வியாசரே நேரடியாக இதைப் பேசவில்லை; வால்மீகி தன் சீடர்களான (ராமனுடைய புத்திரர்களான) குச-லவர்கள் மூலமாகப் பேச வைத்ததை ஒத்தும் இல்லை. கதை விவரிக்கப்படுவதோ, அர்ஜுனனுடைய மகன் அபிமன்யுவுக்கு மகனான பரீட்சித்தின் மகனான ஜனமேஜயர் காலத்தில். இங்கேயே மூன்று தலைமுறைகள் கழித்துதான் முதல் சுழியே இடப்படுகிறது. இதிகாசத்தில் முதல் தலைமுறையாக இடம்பெறும் யயாதி, தன்னுடைய ஐந்தாவது மகன் பூருவுக்கு மகுடம் சூட்டி—கண்ணன் பிறந்த யாதவ வம்சத்தின் முதல்வனும் யயாதியின் மூத்த மகனுமான யதுவை நாட்டைவிட்டுத் துரத்தி—பிறகு அந்த வம்சத்தில் ஹரிச்சந்திரன், பரதன், குரு, பரதன், சந்தனு என்று மிகநீண்ட பாரம்பரியத்தில், யயாதிக்கும் நம் கதாபாத்திரங்களான கௌரவ-பாண்டவர்களுக்கும் இடையில் சுமார் நாற்பத்து நான்கு தலைமுறைகள் இடைவெளி உள்ளது. இதைத் தவிர, யயாதியின் முன்னோரான நகுஷன், புரூரவன் போன்றோரின் கதைகளையும் சேர்த்துக் கொண்டால், சுமார் 48 தலைமுறைகளின் கதைகளையும் உள்ளடக்கிய மிகப்பெரும் தொகுப்பாக விளங்குகிறது பாரதம். ஒரு தலைமுறைக்குக் குறைந்தது முப்பது ஆண்டுகள் என்று வைத்துக்கொண்டால்கூட, பாரதத்தின் காலஎல்லை எப்படியும், குறைந்த பட்சம் 1500 ஆண்டுகளைத் தாண்டும். அதாவது, கதைக்குள் விவரிக்கப்படும் பாத்திரங்கள் வாழ்ந்த காலத்தின் அளவைச் சொல்கிறேன். இந்தச் சமயத்தில், பாரதத்தின் ஆதிபர்வத்தில் முதல் அத்தியாயத்தில் இடம்பெறும் இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றன: 'எல்லாம் தூங்கும்போதும் காலம் தூங்காமல் இருக்கிறது. காலத்தைத் தாண்ட யாருக்கும் முடியாது. காலம் யாராலும் நிறுத்தப்படாமல், எல்லாப் பொருள்களிலும் ஒரே விதமாக சஞ்சரிக்கின்றது.' (வியாச பாரத கும்பகோணம் பதிப்பு, முதல் தொகுதி, பக்கம் 27 அனுக்கிரமணிகா பர்வம்).

ராமாயணத்துக்கு ஒரு கம்பன் கிடைத்ததைப் போல, பாரதத்துக்கு நமக்குக் கிடைத்திருப்பதெல்லாம் வில்லி மட்டும்தான். பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றிய பாரதம் போன இடமும் தெரியாது; பாரத வெண்பாவில் பெரும்பகுதியும் போன இடத்தையும் நாமறியோம். வில்லி, கம்பன் கதை நடத்தியதைப் போல நடத்தவில்லை. ஆங்காங்கே சிற்சில பகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழில் செய்திருக்கிறார். இராமயணத்தைப் பாடவே கம்பனுக்குப் பத்தாயிரம்-அல்லது பன்னிரண்டாயிரம் [மிகைப்பாடல்கள் உட்பட]-தேவைப்பட்டது என்றால், அதற்குச் சுமார் நான்கு மடங்கு பெரிதான பாரதத்தை வில்லி 4204 பாடல்கள் (மர்ரே பதிப்பின்படி) அல்லது வைமுகோ பதிப்பின்படி 4336 பாடல்களில் முடித்திருக்கிறார். அதாவது நான்கு மடங்கு பெரிய கதையை, கம்பனுக்குச் சுமார் மூன்று மடங்கு சுருக்கமாக முடித்திருக்கிறார் என்றால், கதை இவருடைய விவரிப்பில் எவ்வளவு முழுமையாக இருக்க முடியும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளலாம். இதைப்பற்றி மிக விரிவாக நல்லாபிள்ளை பாரதத்துக்கு முன்னுரை எழுதியிருக்கும் பதிப்பாசிரியர் முனைவர் இரா. சீனிவாசன் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் குறைபாட்டை நிறைவு செய்யத்தான், வில்லி இயற்றிய அத்தனைப் பாடல்களையும் உள்ளடக்கி, அதற்குமேல் சுமார் பத்தாயிரம் பாடல்களை இயற்றி, மொத்தம் 13,949 பாடல்கள் என்ற அளவில் பூர்த்தி செய்திருக்கிறார். மூலத்துக்குப் பெரும்பாலும் நெருங்கிய படைப்பு என்று இதனைச் சொல்லலாம்.

இது ஒரு சிக்கல் என்றால், விடுபட்ட இடங்களைத் தேடிக் கண்டடைந்து பூர்த்தி செய்துகொள்ளலாம் என்றால், ஒரு பெயர் மூலத்தில் எழுதப்படும் விதமும், தமிழ் வடிவத்தில் எழுதப்படும் விதமும் பெரிதும் மாறுபடுவதால், இன்னார்தான் இன்னார் என்று ஆயிரக்கணக்கான பெயர்களை ஒப்புநோக்கி இணைப்பது மிகப்பெரிய சவால். இப்படித்தான் 'பொற்றடந் தேரொன்று தட வாலிகன் கொடுத்ததும்' என்று பாரதி பாஞ்சாலி சபதத்தில் பாடியிருக்கும் வாலிகன் யார் என்ற நெடுந்தேடல் நிறைவேறியது திருமதி. வித்யா ஜெயராமன் (கனடா) அவர்களின் உதவியுடன்தான். அவர்கள்தான் இந்தப் பெயரின் சரியான உச்சரிப்பு Bahlika அல்லது Vahlika என்ற குறிப்பைக் கொடுத்து உதவினார்கள். இந்தக் குறிப்பை வைத்துக்கொண்டுதான் இந்த வாலிகன், பிரதீபனுடைய இரண்டாவது மகன்; சந்தனுவின் இரண்டாவது அண்ணன்; பீஷ்மருக்குப் பெரியப்பா முறை ஆகவேண்டும் என்பதைக் கண்டறிய முடிந்தது.

இப்படிப் பெயர் தடுமாற்றத்தில் சிக்கி, அடையாளம் காண முடியாமல் போனவர்களில் ஒருவன்தான் ஏகலைவன் என்று நாம் அறியும் ஏகலவ்யன். ஆமாம். அவன் பெயர் ஏகலவ்யன்.

பற்றலர் அஞ்சும் பெரும்புகழ் ஏகலவியனே - செம்பொன்
பாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்ததும்

என்று பாஞ்சாலி சபதத்தில் பாரதி எழுதியுள்ள குறிப்புதான் என்னை ஏகலவ்யனைத் துப்பறிய வைத்தது. கட்டைவிரலைக் கொடுத்த ஏகலவ்யன் என்னதான் ஆனான்?

அடுத்த மாதம் தொடர்வோம். நாம் உறங்கினாலும் காலம் மட்டும் கண்ணுறங்குவதில்லை என்று பாரதம்தான் பேசுகிறதே!

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com