ஸ்ரீ மாதவப் பெருமாள் ஆலயம் மயிலையில், கபாலீச்வரர் கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட கோயில் என்பது கட்டட அமைப்பின்மூலம் தெரிய வருகிறது. முதலாழ்வார்கள் காலம் முதலே இத்திருக்கோயில் இருந்துள்ளது. பாடல்பெறாத புராதன வைணவக் கோயில்களுள் இது ஒன்று. பிரம்மாண்ட புராணத்தில் மயூரபுரி மகாத்மியத்தில் இக்கோயில் தோன்றியவிதம், வரலாறு, பெருமாள் இங்கு வந்து குடிகொண்டு அமிர்தவல்லித் தாயாரை மணந்தது போன்றவை விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
கலியுகத்தில் கலிதோஷமின்றித் தவம் செய்யச் சிறந்த இடம் எது என ஸ்ரீமன் நாராயணனை வேதவியாசர் கேட்க, பிருகு முனிவர் ஆசிரமம் அமைந்த இந்த மாதவபுரமே சிறந்தது என அருளியதாகப் புராணம் கூறுகிறது. இறைவனின் நாமம் ஸ்ரீ மாதவப் பெருமாள். இறைவி, அமிர்தவல்லித் தாயார். தீர்த்தம் சந்தான புஷ்கரணி. தலவிருட்சம் புன்னை மரம். திருக்கோயிலின் தென்கிழக்கே உள்ள மணிகைரவம் எனும் வாவியில் பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார்கள் மூவரில் மூன்றாமவரான பேயாழ்வார் அவதரித்தார் எனப் புராணம் கூறுகிறது. இப்போது கோயில் இருக்கும் இடத்தில் பிருகு முனிவர் ஆச்ரமம் இருந்தது. இதிலிருந்த திருக்குளம்தான் சந்தான புஷ்கரணி. மாசிமாதப் பௌர்ணமியன்று எல்லாப் புனித தீர்த்தங்களும் இத்திருக்குளத்தில் சங்கமமாகும் என்றும், அன்று நீராட புத்திரபாக்கியம் கிட்டும் என்றும் மயூரபுரிப் புராணம் கூறுகிறது. தேவாசுரப் போர் ஏற்பட்டபோது தேவர்கள் தங்களுக்கு அமைதி ஏற்படுத்துமாறு ஸ்ரீமன் நாராயணனை வேண்ட, அவரும் தாம் பூலோகத்தில் லட்சுமி தேவியுடன் அவதாரம் செய்து தேவர்களைக் காப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி பிருகு முனிவர் தமக்கு குழந்தை வேண்டித் தவமிருக்க, அவரது ஆச்ரமத்தில் கன்னிகையாக லட்சுமிதேவி அமிர்த கலசத்துடன் தோன்றியதால், அமிர்தவல்லி என்று பெயரிட்டு வளர்த்தார். ஸ்ரீமன் நாராயணன், மாதவனாகத் தோன்றி, பிருகு முனிவரிடம் அமிர்தவல்லியை மணம் வேண்ட, முனிவர் சம்மதித்தார். மாதவபுரம் எனும் மயிலையில் பங்குனி உத்தரத்தில் திருமணம் நிகழ்ந்ததாகப் புராணம் கூறுகிறது.
அமர்ந்த கோலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆனந்த நிலைய விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். கல்யாணக் கோலத்தில் இருப்பதால் கல்யாண மாதவன். ஸ்ரீ அரவிந்த மாதவன் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்ரம், அபயம், கதை ஆகியவற்றுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். சித்திரையில் பிரம்மோத்சவம், வசந்த உத்சவம், பவித்ர உத்சவம், திருக்கோவிலூர் வைபவம், வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி, தெப்போத்சவம், பங்குனி உத்திரக் கல்யாண வைபவம் என விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ’நிரஞ்சன மாதவன்’ என்னும் சின்ன மாதவன் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். இவருக்கும் தனியாகக் கருடோத்சவம், மாதப்பிறப்பு உற்சவம் உள்ளிட்ட விழாக்கள் நடைபெறுகின்றன. ஆண்டாள் சன்னதி, ஸ்ரீ வராகர் சன்னதி, ஸ்ரீ ராமர் சன்னதி, ஸ்ரீ வேணுகோபாலன், பால ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. இவருக்கு நடக்கும் ஹனுமத் ஜயந்தி உற்சவம் சிறப்பு.
ஸ்ரீ மாதவனைப் பற்றி பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கை ஆழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள் ஆகியோர் பாடியுள்ளனர். திருமழிசை ஆழ்வாருக்குப் பேயாழ்வார் ஞானோபதேசம் செய்ததால் பேயாழ்வார் அவதார உற்சவத்தில் நான்காம் நாள் திருமழிசை ஆழ்வாருக்கு ஞானோபதேசம், எட்டாம் நாள் திருக்கோவிலூர் வைபவமும், மற்ற நாட்களில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. காஞ்சிப் பெரியவர் மயிலை வந்து தங்கியிருந்தபோது இங்கு நீராடி வழிபட்டார். ஓலைச்சுவடியாக இருந்த தலபுராணத்தை 1957ல் நூலாக வெளியிட ஏற்பாடு செய்தார். இத்தல இறைவனை ஆண்டாள், “மாமாயன் மாதவன் வைகுந்தன்” என்று பாடித் துதிக்கிறார்.
மாதவன் என்றென்று ஓத வல்லீரேல் தீதொன்றும் அடையா ஏதம் சாராவே
என நம்மாழ்வார் திருவாய்மொழியில் தெரிவிக்கின்றார்.
சீதா துரைராஜ், சென்னை |