டிசம்பர் 3, 2005 அன்று சான் ஹோசே C.E.T. மையத்தில் 'நிருத்யோல்லாஸ அகாடமி' ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியை வழங்கியது.
குருவந்தனத்துடன் மாணவிகள் புஷ்பாஞ்சலி செய்து நிகழ்ச்சியை ஆரம்பித்து, அடுத்து கணேச பஞ்சரத்னத்தின் ஐந்து சரணங்க ளிலும் ஒருங்கியைந்து ஆடியது கண்ணுக்கு விருந்து.
அடுத்து சிவபஞ்சாக்ஷரி ஸ்லோகத்திற்கு பத்து மாணவியர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் மாறி மாறி வந்து ஆடிய விதம் அற்புதம். தொடர்ந்து தேவி மஹிமாவில் 'மகிஷாசுரன் வதம் புரிந்தாயே' என்பதற்கேற்ப அசுரனைத் துரத்தி வதம் செய்த காட்சி நல்ல தாளகதியுடன் இருந்தது.
'ஷண்முக சரணம்' நடனத்தில் 'மயில் வாகனா' எனும் பாபநாசம் சிவன் பாடலின் இறுதியில் மயில்வாகன முருகனாக ஒயிலுடன் ஒரு மாணவி நிற்க, மற்றொருவர் முருகன் காலடியில் அர்ச்சனை செய்வதாகச் சித்தரித்த காட்சி மிக தத்ரூபம். சிவ தாண்டவம் சுருக்கமாகவும் சுகமாகவும் இருந்தது.
அடுத்து வந்த 'ஸாதிஞ்சனே' எனும் ஆரபி ராகப் பஞ்சரத்ன கீர்த்தனைக்குத் தாளக் கட்டு, அபிநயம் யாவும் நன்கு அமைந் திருந்தன. வில்லேந்திய ராமனைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி 'ஸ்ரீராமா!' எனச் சொல்லி முடித்த விதம் நிகழ்ச்சியின் சிகரம். நீண்ட கீர்த்தனையைக் கொஞ்சமும் அலுப்புத் தட்டாமல் பக்தி பாவத்துடன் கையாண்ட விதத்தில் குருவின் திறமையும் மாணவிகளின் உழைப்பும் பளிச்சிட்டன.
இறுதியாகத் தில்லானாவில் கண்ணனின் குழல் இசையில் மனம் இழக்கும் நிலையைத் திறம்படச் சித்தரித்தனர் மாணவிகள். கிட்டத்தட்ட 35 மாணவர்களைக் கொண்டு குரு இந்துமதி கணேஷ் நிகழ்ச்சியைத் திறம்பட அமைத்து அளித்தவிதம் பாராட்டுக் குரியது.
சீதா துரைராஜ் |