ரா. ராகவையங்கார்
உரையாசிரியர், செய்யுளாசிரியர், எழுத்தாளர், கவிஞர், பதிப்பாசிரியர், பேச்சாளர், ஆராய்ச்சியாளர், கட்டுரையாளர் எனத் தமிழ் இலக்கியத்தின் பல தளங்களுக்கும் முக்கியப் பங்களித்தவர் ரா. ராகவையங்கார். சிவகங்கை மாவட்டத்தின் தென்னவராயன் புதுக்கோட்டையில், ராமானுஜையங்கார்-பத்மாசினி அம்மாள் தம்பதியினருக்கு செப்டம்பர் 20, 1870 அன்று மகனாகப் பிறந்தார். தந்தைவழிக் குடும்பம் பரம்பரையாகவே 'மாடபூசி' என்ற சிறப்புப் பெயர் பெற்றது. தாய்வழிக் குடும்பத்தினர் ராமநாதபுர சமஸ்தானத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தனர். இவருடைய மாமாக்கள் அஷ்டாவதானம் கிருஷ்ணையங்கார், சதாவதானம் முத்துசாமி ஐயங்கார் இருவருமே சேது சமஸ்தானத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தனர். ராகவையங்காரின் தந்தை திடீரெனக் காலமாகவே இவரை வளர்க்கும் பொறுப்பை மாமா சதாவதானம் முத்துசாமி ஐயங்கார் ஏற்றுக் கொண்டார். பள்ளியிறுதி வகுப்பை ராமநாதபுரத்தில் முடித்தார் ராகவையங்கார். 1888ல் பதினெட்டாவது வயதில் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியேற்றார்.

இக்காலத்தில் ஜானகி அம்மையாருடன் திருமணம் நிகழ்ந்தது. மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் மகவும் வாய்த்தன. பின்னர் திருச்சியில் உள்ள சேஷையங்கார் பள்ளியில் தமிழாசிரியர் ஆனார். அக்காலகட்டத்தில் உ.வே. சாமிநாதையருடன் தொடர்பு ஏற்பட்டது. அது இவருக்குப் பல வாசல்களைத் திறந்துவிட்டது. உ.வே.சா.வைப் போலவே பழங்காலச் சுவடிகளைத் தேடுவதிலும், ஆராய்ந்து பதிப்பிப்பதிலும் ஆர்வம் காட்டினார். மாணவர்களுக்கும் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். பிற்காலத்தில் சிறந்த கல்வெட்டு ஆராய்ச்சி நிபுணராக விளங்கிய அ. கோபிநாத ராயர் அக்காலத்தில் இவரிடம் பயின்றவரே.


பல கட்டுரைகளை எழுதினார். தமிழகமெங்கும் பயணம் செய்து கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில், கருத்தரங்குகளில் சொற்பொழிவாற்றினார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் ராகவையங்கார் ஆற்றிய சொற்பொழிவு அறிஞர்கள் பலரைக் கவர்ந்தது. மாநிலக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராகவும், சிறந்த தமிழறிஞராகவும் விளங்கிய பூண்டி அரங்கநாத முதலியார் உள்ளிட்டோரின் நட்பும், அன்பும் கிடைத்தது. இவரது திறமைகளை அறியவந்த ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி, இவரை சமஸ்தானப் புலவர்களுள் ஒருவராக நியமித்தார். மாமா சதாவதானம் முத்துசாமி ஐயங்கார் காலமானபின் ராகவையங்கார் சமஸ்தான வித்வானாக நியமிக்கப் பெற்றார். பல வாதுகளில் வென்று தமது அறிவுத்திறனை நிரூபித்தார். சுவாமி விவேகானந்தர் அயல்தேசப் பயணத்தை முடித்துவிட்டு ராமநாதபுரத்திற்கு விஜயம் செய்தபோது அந்த வரவேற்புக் குழுவில் இருந்து சுவாமிகளை வரவேற்றார். இந்து சமயம் குறித்து அவருடன் ஒரு விவாதத்தையும் நடத்தினார்.

பாண்டித்துரைத் தேவர் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதற்குத் துணை நின்ற ராகவையங்கார், அதன் நூற்பதிப்பு மற்றும் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். சங்கத்தின் சார்பாக சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை, பாண்டியன் புத்தக சாலை, நூலாராய்ச்சி சாலை போன்றவை துவங்கப்பெற்றன. தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று, பழஞ்சுவடிகளைத் திரட்டி அவற்றை சங்கத்தைச் சேர்ந்த பாண்டியன் நூலகத்தில் தொகுத்து வைத்தார். மேலும் சங்கம் மூலம் பல்வேறு நூல்கள் வெளிவரவும் காரணமானார். தமிழ் ஆராய்ச்சி மற்றும் இலக்கிய, இலக்கண வளர்ச்சிக்காக சங்கத்தின் சார்பாக 'செந்தமிழ்' என்ற இதழ் துவங்கப்பெற்றது. இதழாசிரியாகப் பொறுப்பேற்ற ராகவையங்கார், அதில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள், நூல் மதிப்புரைகள் எழுதினார். அவற்றில் சில பின்னர் புத்தகமாக வெளிவந்தன. 'வஞ்சிமாநகர்', 'சேதுநாடும் தமிழும்', 'புவி எழுபது', 'தொழிற்சிறப்பு', 'திருவடிமாலை', 'நல்லிசைப் புலமை மெல்லியர்கள்', 'அண்டகோள மெய்ப்பொருள்', 'நன்றியில் திரு' போன்ற கட்டுரை நூல்கள் குறிப்பிடத்தக்கன.

இவற்றில் 'சேதுநாடும் தமிழும்' மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பதின்மூன்றாம் ஆண்டுக் கூட்டத்தில் படிக்கப்பட்டு, உ.வே.சா.வின் பாராட்டைப் பெற்றது. 'நல்லிசைப் புலமை மெல்லியர்கள்' நூல், ஆதிமந்தி தொடங்கி பூங்கண் உத்திரை வரையிலான சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் சிறப்பைப் பேசுவது. 'அண்டகோள மெய்ப்பொருள்' என்பது நம்மாழ்வார் பாடலுக்கு உரை விளக்கமாக அமைந்த நூல். சேரர் தலைநகரமாகக் குறிப்பிடப்படும் வஞ்சி என்பது கருவூர்தான் என்பதை இலக்கண, இலக்கியச் சான்றுகள் மூலம் தமது 'வஞ்சிமாநகரம்' நூலில் சுட்டுகிறார் ஐயங்கார். “பாண்டியன் வையைத் துறைவன் என்றும், சோழன் பொன்னித் துறைவன் என்றும் அழைக்கப்படுவது போல் சேரன் பொருநைத் துறைவன் என்று அழைக்கப்படுகிறான். காரணம், பொருநை கருவூரில் பாய்வதால். சேரர்களின் தலைநகரமான வஞ்சி என்பது கருவூர்தான்” என்று தமது நூலில் உறுதிபடத் தெரிவிக்கிறார் ராகவையங்கார்.

உடல்நலக் குறைவால் பத்திரிகைப் பணியில் இருந்து விலகிய ராகவையங்கார், தேவகோட்டைக்குச் சென்று சில ஆண்டு காலம் வாழ்ந்தார். இக்காலகட்டத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறை உருவாக்கப்பட்டது. ரா. ராகவையங்காரின் அறிவுத்திறன் பற்றிக் கேள்விப்பட்ட செட்டிநாட்டரசர், இவரை அத்துறையின் முதன்மை ஆராய்ச்சியாளராக நியமித்தார். பொறுப்பேற்றுக் கொண்ட ஐயங்கார், பல நூல்களை ஆராய்ந்து முக்கியமான பல கட்டுரைகளை எழுதினார். ஆராய்ச்சிப் பணியுடன் மாணவர்களுக்குக் கற்பிக்கும் பணியையும் செய்து வந்தார். இவர் எழுதிய 'பாரிகாதை' இவருக்கு நீடித்த புகழைத் தேடித் தந்தது. அதில் அவர், “பாரியை மூவேந்தர்கள் கொல்லவில்லை; குறுநிலமன்னர்களே கொன்றனர்” என்பதை சான்றுடன் நிறுவியிருக்கிறார். இவர் எழுதிய தித்தன், கோசர் பற்றிய ஆய்வு நூல்களும் குறிப்பிடத்தக்கன. 'உறையூர் தித்தன்' எனக் குறிப்பிடப்படுபவன் சோழ மன்னன் அல்ல; அவன் வேளிர்குல அரசன் என்பதை அதில் அவர் சான்றுகளுடன் மெய்ப்பித்திருக்கிறார்.

அதுபோலக் கோசர்கள் பற்றி ஆராய்ந்து கூறியுள்ள தகவல்களும் முக்கியமானவை. கோசர்கள் அதிகம் வாழ்ந்த கோசன்புத்தூரே பின்னர் மருவி கோயம்புத்தூர் ஆனது என்கிறார் இவர். கொங்கர்கள் அதிகம் வாழ்ந்த நாடே கொங்கு நாடானது என்பதும் இவர் கூறும் தகவல். வள்ளுவர் ஜைனரோ, பௌத்தரோ அல்ல என்பதையும் ஆய்ந்து நிறுவியிருக்கிறார். கம்பரின் காலம் பற்றி இவர் ஆராய்ந்து கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒப்பிட்டாய்வு என்ற துறையில், வள்ளுவரையும் கம்பரையும் ஒப்பிட்டாய்ந்திருக்கிறார். திருத்தக்க தேவரையும் கம்பரையும் ஒப்பிட்டு ஆய்ந்து எழுதியுள்ள கட்டுரையும் குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் செய்யுளியல், மரபியல்களின் உரைகளாக அச்சிடப்பட்டவை நச்சினார்க்கினியர் இயற்றியவை அல்ல; அவை பேராசிரியர் உரையே என்றும்; கம்பராமாயணத்திற்கு அதன் ஆசிரியர் இட்ட பெயர் இராமாவதாரம் என்றும்; திருக்கோவையாருக்கு உரை வகுத்தவர் பேராசிரியரே என்றும்; பாகவத புராணம் பாடியவர் வேம்பற்றூர் செவ்வைச் சூடுவார் என்றும்; புறப்பொருள் வெண்பா மாலை உரையாசிரியர் மாகறல் சாமுண்டி தேவநாயகரே என்றும், இவை போல்வன பலவும் ஆராய்ச்சியிற் கண்டு முதன்முதலில் தமிழ் இலக்கிய உலகிற்குத் தெரிவித்தவர் ராகவையங்கார்தான்.

சிறந்த பதிப்பாசிரியராகவும், உரையாசிரியராகவும் இவர் திகழ்ந்தார். 'அகநானூறு', 'கனாநூல்', 'பன்னிருபாட்டியல்', 'இனியவை நாற்பது-மூலமும் உரையும்', 'நேமிநாதம்-மூலமும் உரையும்', 'ஐந்திணை ஐம்பது உரை', 'திருநூற்றந்தாதி-மூலமும் உரையும்', 'நான்மணிக்கடிகை', 'முத்தொள்ளாயிரம்', 'திணைமாலை நூற்றைம்பது-மூலமும் உரையும்', 'வளையாபதிச் செய்யுட்கள்', 'மதுரைத் தமிழ்ச் சங்கத்து புலவராற்றுப்படை' போன்ற நூல்கள் இவரது மேதைமைக்கும், ஆராய்ச்சித் திறனுக்கும் சான்றாகும்.

மொழிபெயர்ப்பிலும் இவர் தேந்தவர். வடமொழியிலிருந்து இவர் மொழிபெயர்த்த 'அபிஜ்ஞான சாகுந்தலம்', 'பகவத் கீதை', 'பல்லட சதகம்' போன்ற நூல்கள் இவரது அறிவுத் திறனுக்குச் சான்று. இவர் எழுதிய 'ஆத்திசூடி உரை', 'ஆராய்ச்சிக் கட்டுரைகள்', 'இனிய இலக்கியம்', 'கம்பர்', 'செந்தமிழ் இன்பம்', 'தமிழகக் குறுநில வேந்தர்கள்' போன்ற நூல்களும் முக்கியமானவை. இது தவிர வால்மீகி ராமாயணத்தின் சில பகுதிகளையும், ரகுவம்சத்தின் சில சருக்கங்களையும் தமிழில் பெயர்த்திருக்கிறார். ஆனால் அவை அச்சாகவில்லை. இவர் எழுதிய 'சங்கு சக்கரச் சாமி வந்து சிங்கு சிங்குனு ஆடும்' என்ற குழந்தைப் பாடலும் குறிப்பிடத்தக்கது. 'வஞ்சிமாநாகரம்', 'தொல்காப்பியம் : செய்யுளியல்-நச்சினார்க்கினியருரை', 'தமிழ் வரலாறு', 'பரிமேழலகர் உரை விளக்கம்', 'சேதுநாடும் தமிழும்' போன்ற நூல்கள் இவருக்குப் பெருமை சேர்ப்பவை. இவரது நூல்கள் சில பல்கலைக்கழகங்களின் பாட நூல்களாகவும் வைக்கப்பட்டன.

தமிழின் பரந்துபட்ட பல களங்களிலும் தமது அறிவுத்திறனை நிரூபித்த ரா. ராகவையங்காருக்கு, மகாமகோபாத்யாய உ.வே. சாமிநாதையர் அவர்கள், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை ஆண்டு விழாவில் 'மகாவித்வான்' பட்டமளித்துச் சிறப்பித்தார். வடமொழியில் இவருக்கு இருந்த புலமை மற்றும் பேச்சுத் திறனுக்காக, சென்னை மயிலாப்பூர் சம்ஸ்கிருதக் கல்லூரி இவருக்கு 'பாஷா கவிசேகரர்' என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. பாஸ்கர சேதுபதி மட்டுமல்லாமல் அவர் மகன் ராஜராஜ சேதுபதி, அவரது மகன் சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி அவைகளிலும் சமஸ்தானப் புலவராக இருந்த பெருமையுடையவர் ரா. ராகவையங்கார். சேதுபதி மன்னர் பற்றி இவர் எழுதியிருக்கும் 'இராசராசேசுவர சேதுபதி-ஒருதுறைக் கோவை' என்ற நூல் இலக்கியச் சுவையுடையது.

1941ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வுபெற்ற ரா. ராகவையங்கார் பின்னர் ராமநாதபுரத்துக்குச் சென்று தங்கினார். கண் குறைபாடு ஏற்பட்டதால் பிற ஊர்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றுவதைக் கைவிட்டார். தன்னை நாடிவருபவர்களுக்கு மட்டும் சமய விளக்கமும், தமிழும் கற்பித்தார். ஜூலை 11, 1946ல் காலமானார். தமிழறிஞர் ரா. ராமானுஜையங்கார் இவரது புதல்வர். ரா. ராகவையங்காரின் நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

(தகவல் உதவி: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட 'மகாவித்துவான் ரா. ராகவையங்கார்')

பா.சு.ரமணன்

© TamilOnline.com