சமுதாயக் கூடு உடையும்....
அன்புள்ள சிநேகிதியே,

இந்தப் பகுதி பெண்களுக்கு மட்டும்தானா அல்லது ஆண்களும் தங்கள் பிரச்சனைகளை எழுதலாமா என்று தெரியவில்லை. நான் அமெரிக்கா வந்து இரண்டு வருடங்கள்கூட ஆகவில்லை. Project Work செய்ய வந்திருக்கிறேன். சில மாதங்களில் திரும்பிப் போய்விடுவேன். இங்கு வந்து ஒரு குழப்பத்தில் மாட்டிக்கொண்டு விட்டேன். நான் கிராமத்தைச் சேர்ந்தவன். என் அப்பா ஒரு விவசாயி. அம்மாவுக்கு படிப்போ உலக ஞானமோ அதிகம் இல்லை. நான்தான் அதிகம் படித்து அமெரிக்காவில் வரும் நிலையைப் பெற்றுவிட்டேன். எனக்கு ஒரு தம்பி, இரண்டு தங்கைகள். ஒருத்திக்குப் போன வருடம் கல்யாணம் நடந்தது. எனக்கு ஊரில், உறவில் ஒரு பெண் பார்த்து வைத்திருக்கிறார்கள். நல்ல வசதி படைத்தவர்கள். சிறுவயதில் நாங்கள் வளர்ந்து கொண்டிருந்தபோது, அவர்கள் எங்கோ எட்டாத தூரத்தில் இருந்தார்கள். இப்போது அவர்களே பெண்ணைத் தர ஒத்துக் கொண்டபோது, என் அம்மா, அப்பா மிகவும் சந்தோஷப்பட்டார்கள். நான் இங்கே கிளம்பி வருவதற்குக் கொஞ்சநாள் முன்னால் இந்தப் பேச்சு வார்த்தை நடந்தது.

அந்தப் பெண்ணைப் பார்த்துப் பல வருடங்கள் ஆகியிருந்தன. சின்ன வயதில் நன்றாக இருப்பாள். வெளியூரில் படித்துக் கொண்டிருந்தாள். நான் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். எனக்கு என்னுடைய நண்பர்கள் போல கொஞ்சம் பார்த்து பேசி டேடிங் செய்து, வெளியில் போய்வந்து பிறகு திருமணம் செய்துகொள்ள ஆசை. அந்தப் பெண்ணைப் பார்க்க நேரமில்லை. திரும்பி இந்தியா போய் முடிவு செய்து கொள்ளலாம்; அம்மா, அப்பாவுக்குத் திருப்தியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், இங்கே என் வேலை நீடித்துக்கொண்டே போய்விட்டது. எனக்கு நகரத்தில் அதிக அனுபவம் இல்லை. வேலைக்குச் சேர்ந்த ஆறு மாதத்திலேயே அமெரிக்கா அனுப்பிவிட்டார்கள். இந்தப் புது வாழ்க்கைக்கு அட்ஜஸ்ட் செய்துகொள்ளத் தட்டுத் தடுமாறிப் போய்விட்டேன். நான் வேலை பார்க்கும் கம்பெனியில் ஒரு பெண் - என்னைவிட 2 வருடம் அதிக அனுபவம் - எனக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தாள். சமைப்பதிலிருந்து, கார் ஓட்டுவதுவரை கற்றுக் கொடுத்தாள். எங்களுக்குள் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. அவளும் என்னைப்போல ஒரு சாதாரணக் குடும்பம். மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவள். குடும்பச் சுமைகள் இருக்கின்றன. ஆனால், அவள் நகரத்தில் பிறந்து வளர்ந்தவள். கொஞ்சம் என்னைவிட அதிக விஷயம் தெரிந்து வைத்திருந்தாள்.

ஒரே ஒரு வித்தியாசம் - நான் அசைவம் சாப்பிடுவேன். அவள் சுத்த சைவம். ஜாதியும் வேறு. எங்கள் இரண்டு பேருக்கும் ஒரு புரிதல் வந்துவிட்டது. எங்கள் project முடியும் நிலை இருந்ததால் என் அம்மாவை இரண்டு மாதம் என்னுடன் இருந்து ஊர்சுற்றிப் பார்க்க வரவழைத்தேன். அவர்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. எதையும் சந்தேகப்படவில்லை. நான் அந்த உறவுக்காரப் பெண்ணைத்தான் கட்டிக்கொள்ளப் போகிறேன் என்று நினைத்தார்கள். என்னுடைய தோழி அடிக்கடி என் வீட்டிற்கு வருவது அவர்களுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. "இந்தப் பெண் ஒரு வயசுப் பிள்ளை வீட்டிற்கு ஏன் வருகிறது, அவுங்க அப்பா, அம்மா தட்டிக் கேக்க மாட்டாங்களா?" என்று குறை சொல்ல ஆரம்பித்தார்.

ஆசை, ஆசையாக சிக்கன், 'மீன்' செய்து போடுவார். நான் முன்புபோல அவ்வளவு விரும்பிச் சாப்பிடாததை நினைத்துக் கவலைப்பட்டார். இந்த நிலையில்தான், எங்கள் காதலை எடுத்துச் சொன்னேன். அன்றிலிருந்து தினமும் அழுகை. "எப்படி 'சாதி சனங்களை'ச் சமாளிக்கப் போறேன். அந்த உறவுக்காரப் பெண்வீட்டுக் காரங்களுக்கு என்ன பதில் சொல்லப் போறேன். தங்கச்சிய யார் கட்டுவாங்க" என்றெல்லாம் கவலை. என் அம்மா என்னை அப்படிப் பாசத்தோடு வளர்த்திருக்கிறார்கள். எனக்கும் அவர்கள்மேல் உயிர். அவர்களுடைய கவலையை எப்படித் தீர்ப்பது என்று தெரியவில்லை. என் அம்மா இன்னும் ஒரு மாதம் இருப்பதாகத் திட்டம். என்னுடைய தோழி, எல்லா வகையிலும் என் அம்மாவின் கையைப் பிடித்து எஸ்கலேடர், குளியலறை என்று உதவி செய்வாள். இப்போது, அவளும் என்னுடன் வெளியே வருவதை நிறுத்தி விட்டாள். "எனக்கே என்னுடைய குடும்பத்தை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்ற கவலை. உங்கள் அம்மா என்னிடமே 'நீங்கள் எப்படி வீட்டு கௌரவத்தை விட்டுக் கொடுக்கிறீர்கள்' என்று கேட்கிறாள்" என்று அவளும் வருத்தப்பட்டு விலகி இருக்கிறாள்.

நான் என்ன செய்தால் என் அம்மாவை திருப்திப்படுத்த முடியும்? இந்தப் பெண்ணை மனதார ஏற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? அவளை நான் மனமாரக் காதலிக்கிறேன். அவள் எனக்குக் கொடுத்த ஆதரவால்தான் இந்த அமெரிக்காவில் நான் இரண்டு வருடம் ஓட்டியிருக்கிறேன். பணமும் சம்பாதித்து, சேர்த்துவைக்க முடிந்தது. அந்த உதவியையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

இப்படிக்கு
உங்கள் நண்பன்


அன்புள்ள சிநேகிதரே,

* நன்றி உணர்ச்சியின் பேரில் உங்களுக்குக் காதலா, பரிவா, அனுதாபமா என்று நீங்களே உங்களுக்குள் ஆராய்ந்து முடிவு செய்து கொள்ளுங்கள். அது மிகவும் முக்கியம்.

* அது காதல்தான் என்று உறுதியாகத் தீர்மானித்தால், உங்கள் பாசமுள்ள தாய்க்கு உங்கள் மகிழ்ச்சி எதில் என்று தெளிவாகச் சொல்லிவிடுங்கள்.

* உங்கள் அம்மாவிற்கு அவருடைய "சாதி, சனங்களை" எப்படி எதிர்கொள்வது என்று உபாயம் சொல்லிக் கொடுங்கள்.

* எப்படி ஒரு வாத்தியார் ஒருவர் படிப்பிற்கு உதவி செய்தாரோ, எப்படி ஒரு மேல்நிலை அதிகாரி தொழில் முன்னேற்றத்திற்கு உதவி செய்தாரோ, அது போல, உங்கள் சிநேகிதி வாழ்க்கை முன்னேற்றத்திற்கு, குடும்ப ஒற்றுமைக்கு உதவியாக இருப்பாள் என்று எடுத்துச் சொல்லுங்கள்.

* முதலில் உங்கள் அம்மாவை தைரியமாக இருக்கச் சொல்லி உறவினரிடம் முதலிலேயே உங்கள் முடிவைத் தெரிவித்து, அவருடைய ஆதரவையும் தெரிவித்துவிடச் சொல்லுங்கள்.

* இதுபோன்ற விஷயங்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு பெற்றோர் உண்மையைச் சொல்லி, ஆதரவைச் சொல்கிறார்களோ அந்த அளவுக்கு உறவினர் தலையீடு இருக்காது. வீண் வம்பும் இருக்காது.

மாறிவரும் சமூகத்தில் குறுகிக்கொண்டு வருகிறது சாதி வேற்றுமை. அவரவர் சமுதாயக் கூட்டை உடைத்துக்கொண்டு வர வர மற்றவர்கள் தொடர ஆரம்பிக்கிறார்கள். பிறகு அந்தக் கூடே தெரிவதில்லை. எல்லாமே சகஜமாகப் போகிறது. கவலைப்படாதீர்கள். தாய்ப்பாசம் கரை கடைந்தது. உங்கள் சுகத்திற்கே தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும்.

வாழ்த்துக்கள்.
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com