அரங்கேற்றம்: சிவு பழனியப்பன், சாமு பழனியப்பன்
ஜூலை 14, 2013 அன்று குரு விஷால் ரமணியின் மாணவிகள் செல்வி. சிவு பழனியப்பன் மற்றும் செல்வி. சாமு பழனியப்பன் சகோதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. தில்லை நடராஜரில் துவங்கி, குருவுக்கும், மற்ற கலைஞர்களுக்கும் கர்நாடக தேவகாந்தாரியில் புஷ்பாஞ்சலி செலுத்திவிட்டு கம்பீர நாட்டையில் கணபதியை வழிபட்டுத் துவங்கினர் தங்களது அரங்கேற்றத்தை. இருவரும் இணைந்து சரியான தாளக்கட்டுடனும் முகபாவங்களுடனும் ஆடியது இதயத்தைக் கவர்ந்தது. தொடர்ந்து வாசஸ்பதி ராக ஜதிஸ்வரத்தில் ஸ்வரங்களுக்கு ஏற்ற அடவுகளுடன் ஆடினர் சிவுவும் சாமுவும்.

லால்குடி ஜெயராமன் இயற்றிய 'செந்தில் மேவும் தேவதேவா' என்ற நீலாம்பரி ராக வர்ணத்துக்கு, கனிக்காக முருகக் கடவுள் உலகை வலம்வந்ததைப் பார்ப்போரின் கண்முன் கொண்டு நிறுத்தினர். மயிலாக ஒருவரும் முருகக் கடவுளாக மற்றவரும் நின்ற காட்சி கரவொலி பெற்றது. கண்ணனின் விஷமங்களை சிவுவின் நாட்டியம் மூலம் கொணர்ந்தது செஞ்சுருட்டியில் அமைந்த 'விஷமக்காரக் கண்ணன்'. கௌளையில் அமைந்த மகாகாளியின் பாடலுக்கான சாமுவின் நாட்டியம் வெகு அழகு. அமிர்தவர்ஷினி ராகத் தில்லானா விறுவிறுப்பு. மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவேறியது.

குரு விஷால் ரமணியின் நாட்டிய அமைப்பும், திரு. வாசுதேவன் கேசவுலுவின் நட்டுவாங்கமும், திரு. கௌஷிக் சம்பகேசனின் வாய்ப்பாட்டும், திரு. C,K. விஜயராகவனின் வயலினும், திரு. ராம் சங்கர் பாபுவின் மிருதங்கமும் நிகழ்ச்சியின் பெரும் பலங்கள்.

சொக்கலிங்கம் கருப்பையா,
சாரடோகா, கலிஃபோர்னியா

© TamilOnline.com