ஆகஸ்ட் 10, 2013 அன்று செல்வி. திவ்யா ராமன் மற்றும் செல்வி. ஸ்ருதி ரெட்டியின் பரதநாட்டிய அரங்கேற்றம் பெப்பர்டைன் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. கணேசர், சரஸ்வதி, மஹாவிஷ்ணு, சிவன் ஆகியோருக்கு ராகமாலிகையாக அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் கல்யாணி ராக ஜதீஸ்வரத்திற்கு குரு கல்யாணி ஷண்முகராஜாவும் அவரது மகள் தாரிணியும் சேர்ந்து கூறிய ஜதிக்கு தாளக்கட்டுடன் நிருத்யம் ஆடி கரவொலியைப் பெற்றனர். இடைவேளைக்குப் பின் கனம் கிருஷ்ணையரின் கமாஸ் ராகத்தில் அமைந்த 'தெருவில் வாரானோ' என்கிற பதத்திற்கு நாயகியின் எதிர்பார்ப்பை அழகாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் திவ்யா. அடுத்து அன்னமாச்சார்யாவின் "முத்து கரரே யசோதா" என்ற குறிஞ்சி ராகப் பதத்திற்கு திவ்யாவும், ஸ்ருதியும் மஹாவிஷ்ணு, கிருஷ்ணன் கதைகளிலிருந்து சில பகுதிகளை அபிநயித்தனர். காளிங்க நர்த்தனம், கிருஷ்ணன் தேரில் குதிரைகளை விரட்டிக் கொண்டு வந்தது போன்றவை தத்ரூபமாக இருந்தன. தர்மபுரி சுப்பராயரின் 'கானடா' ராக ஜாவளிக்கு கோபம், அதிருப்தி, காதல், தனிமைத் தவிப்பு எல்லாவற்றையும் ஒருங்கே நாயகனுக்கு ஸ்ருதி காண்பித்தது சிறப்பு. இறுதியில் வலஜ் ராகத் தில்லானா. கலாஷேத்ரா ஸ்ரீ பாகவதலு சீதாராம சர்மாவால் அமைக்கப்பட்டது. கடினமான தில்லானாவை அழகாக கலாக்ஷேத்ரா வழிப்படி ஆடியது சிறப்பு.
திவ்யா ராமன், ஸ்ருதி ரெட்டி இருவரின் குரு திருமதி. கல்யாணி ஷண்முகராஜா கலாக்ஷேத்ராவில் நடனம் பயின்றவர். அந்த முத்திரையை இருவரின் ஆட்டத்திலும் காண முடிந்தது. தாய்க்கு உறுதுணையாக மகள் தாரிணியும் அமர்ந்து ஜதிகள் சொன்னது அருமை. ஸ்ரீஜித் கிருஷ்ணா (மிருதங்கம்), அவரது மனைவி ஜோதிஷ்மதி (குரலிசை), முரளி பவித்ரன் (வயலின்) ஆகியோர் நிகழ்ச்சிக்கு நல்ல பக்கபலம்.
இந்திரா பார்த்தசாரதி, தென் கலிஃபோர்னியா |