ஆகஸ்ட் 11, 2013 அன்று செல்வி. ஷில்பாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் பாஸ்டன் மாநகரின் லிட்டில்டன் உயர்நிலைப்பள்ளிக் கலைமன்றத்தில் நடைபெற்றது. வெஸ்ட்போர்ட் 'நாட்யாஞ்சலி' நிறுவனர் திருமதி. ஜெயந்தி கட்ராசுவின் மாணவியாவார் ஷில்பா. புஷ்பாஞ்சலியே சுறுசுறுப்பாக அமைந்தது. தொடர்ந்து, அலாரிப்பு, கவுத்துவம், ஜதிஸ்வரம் அம்சங்கள் கனகுஷியோடு வந்தன. அதுவும் தோடி ராக ஜதிஸ்வரத்தில் குரு சொன்ன கணீர் ஜதிகளை மனதில் வாங்கி விறுவிறுப்பாக ஆடினார் ஷில்பா. திலங் ராக வர்ணத்தை ஷில்பா அபிநயித்த அழகே அழகு. திருமாலின் தசாவதாரங்களை விவரிக்கும் ஸ்ரீ மத்வாசாரியாரின் "தேவகிநந்தன" பாடலில் வரும் ஒவ்வொரு அவதாரத்தையும் தத்ரூபமாகச் சித்திரித்தார் ஷில்பா. மகிஷாசுரமர்திநியைப் போற்றும் பதத்தில் ஷில்பாவின் துர்கைக் கோலம் அபாரம். "பிரம்மம் ஒக்கடே" என்ற அன்னமாச்சார்யா சாஹித்யத்தின் உட்கருத்தை முத்திரைகள் மூலம் நன்கு தெரிவித்தார் ஷில்பா. நிறைவாக லால்குடி ஜெயராமனின் தில்லானாவை (மோகனகல்யாணி) அசத்தலாக ஆடினார்.
அடுத்து ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழிப்பாடல் "வாரணம் ஆயிரம்" மன நிறைவு அளித்தது. இதில் ஆண்டாளாக அபிநயித்த ஷில்பாவின் தோற்றம் சபையோரை மெய்சிலிர்க்க வைத்தது. நிகழ்ச்சிக்கு மெருகு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது பக்கவாத்யம். திருமதி. ஜெயந்தி கட்ராசு (நட்டுவாங்கம்), திருவாளர்கள் பிரசாந்த் பராசினி (பாட்டு), தனஞ்சயன் முத்துக்கிருஷ்ணன் (மிருதங்கம்), சூரியநாராயணன் கிருஷ்ண ஐயர் (புல்லாங்குழல்), முருகானந்தன் வாசுதேவன் (வயலின்) ஒரு குதூகலக் கூட்டணியாக தேனிசை பொழிந்தனர். இவர்களுடன் வளரும் கலைஞர் செல்வன் ப்ரணவ் கட்ராசு இணைந்து அற்புதமாக லய விந்நியாசம் செய்து பாராட்டுப் பெற்றார். நன்றி நவின்ற ஷில்பாவின் தந்தை திரு. நாராயணன் தமது புதல்வியின் நடன நேர்த்தியைப் பாராட்டி வாசித்த பாமாலை நிகழ்ச்சிக்கு அழகிய முத்தாய்ப்பாக அமைந்தது.
ஷில்பா தனக்கு அளிக்கப்பட்ட பரிசுகளைத் தொண்டு நிறுவனமான சஹேலிக்கும், நியூ ஹாம்ப்ஷயர் இந்துக் கோயிலுக்கும் (நாஷுவா) வழங்கினார்.
ராமமூர்த்தி, பாஸ்டன், மாசசூசெட்ஸ் |