அரங்கேற்றம்: நடனமணிகள் ஐவர்
ஆகஸ்ட் 17, 2013 ஐந்து பெண்கள் ஒரே சமயத்தில் ஆடப் போகிறார்களே, எப்படி இருக்குமோ என்று பயந்துகொண்டே சென்ற எனக்கு, இர்வைன் நார்த்வுட் ஹைவே ஹைஸ்கூலில் நடந்த நேர்த்தியான நடனம் சந்தேகத்தைப் போக்கி பிரமிப்பைத் தந்தது. பாரம்பரியமாக மல்லாரியில் மூன்று காலங்களிலும் ஆடிவிட்டு தொடர்ந்து கணேச பஞ்சரத்னத்துக்கு விநாயகரின் பெருமைகளைச் சொல்லி ஆடினர் நடன மணிகள் ஐவரும். பின் 'ஜய ஜானகி' என்ற அன்னமாச்சார்யரின் தோடயமங்களத்துக்கு ராமாயணக் காட்சிகளை அபிநயித்த விதம் சிறப்பு. அவரது 'ஸ்ரீமந்நாராயண' என்கிற பதத்திற்கு மஹாவிஷ்ணுவின் லீலைகளைக் காட்டி ஆடியது அருமை. வர்ணம், நடனம் ஆடும் பெண்களுக்கு ஒரு சவால். 35-40 நிமிடங்கள் ஆடிய ராகமாலிகை நடனம், விஷ்ணுவின் 'கஜேந்திர மோட்சம்' கிருஷ்ணனின் 'காளிங்க நர்த்தனம்', மஹா பாரதத்தில் 'தருமரின் சூதாட்டம்', 'திரௌபதி வஸ்திராபஹரணம்', 'வாமனாவதாரம்' ஆகிய காட்சிகளைக் கண்முன் கொண்டு வந்தது.

இடைவேளைக்குப் பின் பார்வதி தேவியின் குணங்களைக் காட்டும் 'சிவகாம சுந்தரி' பாட்டுக்கு அபிநயித்தது சிறப்பு. அடுத்து "நீ ஆட நான் ஆடுவேன்" பதத்துக்கு நடராஜரின் நாட்டிய அசைவுகளை குருவின் நட்டுவாங்கத்திற்கு அழகாக ஆடினர். "எத்தனை சொன்னாலும்' சாவேரி ராகப் பதம் சிறப்பு. காவடிச் சிந்துவுக்குப் பின் வந்த தில்லானா சிறப்பாக இருந்தது. பாபு பரமேஸ்வரனின் ஜதிகளும், பிரபு ஸ்ரீராமின் மிருதங்கமும், பாவலன் சுப்பிரமணியனின் வயலினும், கார்த்திக் ரவிகுமாரின் குழலிசையும், வசந்தா மாதவனின் வீணை இசையும் நிகழ்ச்சிக்கு மிகவும் உறுதுணை.

குரு உஷா சீனிவாசனின் முதல் முயற்சி இந்த அரங்கேற்றம் என்று நம்புவதற்குச் சிரமம்தான். ஆனால் அதுதான் உண்மை. அவரது நட்டுவாங்கமும் நிகழ்ச்சி அமைப்பும் சிறப்பாக இருந்தன. பஞ்சநர்த்தகிகள் வர்ஷா சுந்தர், சௌம்யா ரவிச்சந்திரன், மான்ஸி அச்சுதன், நித்யா மேனன், நிதி வாரியார் அனைவருமே 12-16 வயதுக்கு உட்பட்டவர்கள். திறமையும், குருபக்தியுமே திறமைகள் வெளிப்படக் காரணமாக இருந்ததென்று சொல்லலாம்.

இந்திரா பார்த்தசாரதி,
சௌத் கலிஃபோர்னியா

© TamilOnline.com