ஆகஸ்ட் 18, 2013 அன்று அட்லாண்டாவின் சுவானியில் உள்ள லேம்பெர்ட் உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் குமாரி. அஹல்யா பிரபாகரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. நிருத்ய சங்கல்பா டான்ஸ் அகாடமி மாணவியான அஹல்யா, குரு. சவிதா விஸ்வநாதன் மற்றும் குரு. பௌலாமி பண்டிட் ஹாப்மன் ஆகியோரிடம் நாட்டியம் கற்றார். கம்பீர நாட்டையில் விஷ்ணு கவுத்துவத்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார். "தேவி நீயே துணை" என்னும் மீனாட்சியம்மன் கீர்த்தனை மற்றும் திருவாரூர் தியாகராஜரைக் கோபம் தணியும்படி 'என்னைப் புறக்கணிக்காதே' என்று கெஞ்சும் பக்தனை வர்ணிக்கும் முத்துசுவாமி தீட்சிதரின் "ரூபமூ ஜூச்சி" என்னும் வர்ணம் எனச் சலங்கை விடாமல் ஒலிக்க நாட்டியத்தில் முழுவதுமாக லயித்து விட்டிருந்தார் அஹல்யா.
தொடர்ந்து வந்த பதத்தில் "இதைவிட இன்னும் வேறு வேண்டுமோ சாட்சி" என்னும் பாடலுக்கு, தலைவனது தகாத தொடர்பை அறிந்து கோபம் கொள்ளும் தலைவியை அற்புதமான முகபாவங்களுடன் தத்ரூபமாகச் சித்திரித்தார். அடுத்து வந்த "ஆடினயே கண்ணா" என்று ராசலீலை ஆடிய விதமும், அதற்கு குரு சவிதாவின் நாட்டிய அமைப்பும் பாராட்டுக்குரியது. ராமபிரானின் அழகையும் குணங்களையும் வர்ணிக்கும் "ஸ்ரீ ராமச்சந்திர க்ரிபாலு" என்னும் பஜனைக்கு அநாயாசமாக அபிநயித்தார். மெய்யடவு, கோர்வை, அனுபல்லவி, சாகித்யம், சரணம் என்று பல்வேறு அங்கங்களைக் கொண்ட தில்லானாவில் ஒரே ஸ்வரத்திற்கு வெவ்வேறு நாட்டிய அசைவுகளுடன் ஆடி மெய்சிலிர்க்க வைத்தார். உலக அமைதி வேண்டும் மங்களத்துடன் அரங்கேற்றம் நிறைவடைந்தது.
ஜோதிஸ்மதி ஷீஜித் (வாய்ப்பாட்டு), ஷீஜித் கிருஷ்ணா (மிருதங்கம்), கீர்த்தனா சங்கர் (வயலின்), ஹேமா பாலசுப்ரமணியம் (புல்லாங்குழல்) ஆகியோரின் பக்கத் துணையிலும் குரு. சவிதாவின் நட்டுவாங்கத்திலும் அரங்கேற்றம் பரிமளித்தது. கலாக்ஷேத்ரா பாணியை முறையாகக் கற்றதோடு, அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல உழைத்து வருகிறார் குரு. சவிதா விஸ்வநாதன். பத்து வயதிலிருந்து நாட்டியம் கற்று, வெற்றிகரமாக அரங்கேறியிருக்கிறார் அஹல்யா. கால்டெக்கில் மெகானிகல் எஞ்சினியரிங் பட்டம் பெற்றுள்ள அஹல்யா, நார்த் வெஸ்டர்னில் ரொபோடிக்ஸ் துறையில் ஆராய்ச்சியைத் துவங்க இருக்கிறார். அரங்கேற்றத்தின் மூலம் கிடைத்த பரிசுத்தொகை 3500 டாலரை, குழந்தைத் தொழிலாளர்களுக்குக் கல்வி கொடுக்கும் M.வெங்கடரங்கய்யா அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனத்திற்கு அளித்தார் அஹல்யா.
ஜெயா மாறன், அட்லாண்டா, ஜார்ஜியா |