ஆகஸ்ட் 24, 2013 அன்று சான்டா க்ளாராவில் உள்ள Mission Cine Centre for Performings Arts அரங்கில் அஞ்சலி நாட்யா மாணவி செல்வி. திவ்யா லக்ஷ்மணனின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. துளஸிதாஸரின் 'காயியே கணபதி' என்னும் வலசி ராகத் துதியுடன் நிகழ்ச்சி துவங்கியது. ஆபோகி ராகத்தில் அமைந்த தேவியைப் பற்றிய கீர்த்தனைக்கு தேவியின் வெவ்வேறு முகபாவங்களைக் காட்டி அழகாக ஆடினார் திவ்யா. லால்குடி ஜெயராமனின் ஷண்முகப்ரியா வர்ணத்திற்கு தசாவதாரங்களை அழகாக அபிநயித்தார். குறிப்பாக வாமனாவதாரத்தின் ஓங்கி உலகளந்த அடியை தகுந்த பின்னணி இசை வாத்தியத்துடன் வெகு அழகாக வடிவமைத்திருந்தார் குரு ராதிகா கிரி.
சிவ தாண்டவத்தை விவரிக்கும் 'ஆடும் சிதம்பரமோ' கீர்த்தனை விறுவிறுப்பான அடைவுகளுடன் அமைந்திருந்தது. துளஸிதாஸரின் 'ஸ்ரீ ராமசந்த்ர' பாடல் பக்திபூர்வமான பாவங்களுடன் நிறைவைத் தந்தது. 'கண்ணன் வருகின்ற நேரம்' காவடிச்சிந்துவுக்குப் பின், லால்குடி ஜெயராமனின் திலங் ராகத் தில்லானாவிற்கு அழகான அபிநயங்களுடனும், துரிதமான அடைவுகளுடனும் குரு ராதிகா கிரியின் விறுவிறுப்பான அழுத்தமான சொற்கட்டுக்கு ஈடு கொடுத்து ஆடிக் கைதட்டல் பெற்றார். மங்களப் பாடலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. ஸ்ரீகாந்தின் கம்பீரமான குரலும், கேசவனின் அருமையான தாள வாசிப்பும், முத்துக்குமாரின் இனிய குழலிசையும் அரங்கேற்றத்துக்கு வளம் சேர்த்தன.
சரோஜா நாராயணன், சான்டா க்ளாரா, கலிஃபோர்னியா |