செப்டம்பர் 7, 2013 அன்று நாட்யசுதா நடன அகாடமியின் மாணவி செல்வி. ஷ்வேதா ஐயரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நியூடனில் உள்ள ஓக்ஹில் நடுநிலைப்பள்ளிக் கலையரங்கில் நடந்தேறியது. கணேச புஷ்பாஞ்சலியில் துவங்கி, அலாரிப்பில் நடனம் களைகட்டத் துவங்கியது. பின்வந்த தஞ்சை நால்வரின் வசந்தா ராக ஜதிஸ்வரத்தில் நல்ல தீர்மானம், தாளக்கட்டுடன் இணைந்து ஆடியவிதம் சிறப்பு. காம்போதி, சண்முகப்ரியா, பிலஹரி, மத்தியமாவதி என ராகமாலிகையில் அமைந்த "ஆயர் சேரியர் அறிந்திடாமலும்" என்ற சப்தத்திற்கு ஆடியபோது அவரது முகபாவமும் அபிநயமும் அற்புதம். முத்துசுவாமி தீட்சதரின் தோடி ராக "ரூபமு ஜூச்சி வலச்சி" வர்ணத்தில் சிவன்மீது நாயகி காதலைக் கூறுவதாக ஆடியபோது சிருங்கார ரசம் சொட்டியது என்றால் மிகையாகாது.
சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சார்யார் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் "ஸ்ரீ சாரதம்பாம் பஜே" என்ற கமாஸ் ராகக் கீர்த்தனத்திற்கு ஷ்வேதா தாளம் பிசகாமல் துள்ளலுடன் ஆடியபோது அவரது குரு. சங்கீதா விஜய்யின் கடின உழைப்பு தெரிந்ததது. சங்கீதா திரு. தனஞ்சயன் அவர்களின் சிஷ்யை.
ஷ்வேதாவின் தாத்தாவும், செம்மங்குடி சீனிவாசய்யர் அவர்களின் சிஷ்யரும், பிரபல கர்நாடக வித்வானுமான சங்கீத கலா ஆச்சார்யா திரு. வி. சுப்ரமணியம் இந்தப் பாடலுக்கு இதமாக இசை அமைத்திருந்தார். அருணாச்சலக்கவியின் பாடலான "நீ உரைப்பாய் அனுமனே நான் சொன்னதாக" என்ற பதத்தில் ராமனாகவும், அனுமனாகவும் மாறி மாறி வெவ்வேறு ரசங்களை முகத்தில் கொண்டுவந்த விதம் கொள்ளை அழகு. திரு. பாபு பரமேச்வரனின் சண்முகப்ரியா ராகத் தில்லானாவுக்கு ஷ்வேதாவின் பேசும் கண்கள், துள்ளும் பாதங்கள், நளின விரல்கள் என யாவையும் மெருகூட்டின. மங்களத்திற்குப் பின் ஷ்வேதாவின் நன்றி நவிலலுடன் நிகழ்ச்சி நிறைவெய்தியது. ஷங்கர்-ஜெயஸ்ரீ தம்பதியினரின் மகளான ஷ்வேதா பாப்சன் கல்லூரியில் சீனியர் மாணவி என்பதோடு கராத்தேயில் முதல் டிகிரி கறுப்பு பெல்ட்டும் வாங்கியுள்ளார்.
ஜனனி சுவாமியின் கானமழை, கெளரீஷ் சந்த்ரசேகரின் மிருதங்கம், ரசிகா முரளியின் வயலின் ஆகியவை நல்ல பக்கபலம்.
சரஸ்வதி தியாகராஜன், பாஸ்டன், மாசசூசெட்ஸ் |