டாலஸ்: நூறாயிரம் டாலர் நிதி திரட்டிய 'வள்ளியின் காதல்'
செப்டம்பர் 7, 2013 அன்று, 'உதவும் கரங்கள்' அமைப்புக்கு நிதி திரட்டுவதற்கென்று டாலஸில் 'வள்ளியின் காதல்' நாட்டிய நாடகம், ரிச்சர்ட்ஸனிலுள்ள ஐஸ்மன் சென்டரில், சாஸ்தா தமிழ் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைத் திருமதி ராதிகா கணேஷ் வடிவமைத்து இயக்கி இருந்தார். இவர் எக்ஸ்பிரஷன்ஸ் என்ற நடனப்பள்ளியை நடத்தி வருவதுடன், பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகளை இயக்கி வருபவர். இதனை ரசித்த ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்டோரில் தமிழர்கள் மட்டுமின்றி, அமெரிக்கர்களும் பிற மொழியினரும் வந்திருந்தனர். பாரம்பரிய நடனத்துடன் ஆரம்பமான அரங்கத்தின் நுழைவாயில் வழியாகப் பார்வையாளார் மத்தியில் பல்லக்கில் வள்ளி தெய்வானையுடன் முருகன் வந்து மேடை ஏறியபோதே பார்வையாளர்கள் சொக்கிப் போய்விட்டனர். கதா கலாட்சேபம்போல் இரு சூத்திரதாரிளும், 'ஆமாம்' போடும் அடிப்பொடிகளும் கதையைச் சொல்வதுபோல் வடிவமைத்திருந்தார்கள்.

வள்ளியின் பெயர் சூட்டு விழாவில் தமிழர் வீரக் கலைகளான சிலம்பாட்டம், களறி, வாட்சண்டை என மேடையை அமர்க்களப்படுத்தி விட்டார்கள். அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளுக்கு இவை புதிய விஷயங்களாக அமைந்திருந்தன. விநாயகரை முருகன் தனது காதலுக்கு உதவ அழைத்தபோது, நிஜ யானையே வந்துவிட்டதோ என்று எண்ணுமளவுக்குக் காட்சி அமைந்திருந்தது. அதுவரையில் தாத்தாவாக இருந்த முருகன், சட்டென்று சுயஉருவத்திற்குத் திரும்பிய வேகம் மலைக்க வைத்தது. மயிலாட்டம், கரகாட்டம், பால்குடம், வேல், மாவிளக்கு, காவடி, நாட்டுப்புற நடனம் என அனைத்தையும் உள்ளடக்கி இறுதிக்காட்சியைத் திருவிழாவாக அமைத்திருந்தார்கள். நிறைவில், வள்ளி தெய்வானையுடன் மலையிலிருந்து முருகன் காட்சி தந்த போது, பார்வையாளர்கள், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பத் தொடங்கிவிட்டனர்!

இந்த நிகழ்ச்சியை வழங்கியதோடு, பல நற்பணிகளையும் செய்துவரும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை, இதன்மூலம் நூறாயிரம் டாலர் நன்கொடை திரட்டியது. நிகழ்ச்சிச் செலவுபோக 82 ஆயிரம் டாலர் உதவும் கரங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. திருவண்ணாமலையில் மனநலம் குன்றிய பெண்கள் காப்பகக் கட்டடத்துக்கு இது பயன்படும். அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகத்தின் நிறுவனர், தலைவர் முனைவர் அரசு செல்லையா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். ஐஸ்மன் சென்டரில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தாலும் இதுவரையில் பார்த்த இந்திய நிகழ்ச்சிகளில் இதுதான் மிகச் சிறந்தது என்று அரங்கத்தை நிர்வகிக்கும் அமெரிக்க ஊழியர்கள் கூறினர்.

சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனரும், இயக்குனருமான வேலு கூறுகையில், "வள்ளியின் காதல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மற்றும் கண்டுகளிக்கும் குழந்தைகளுக்கு, தமிழ், தமிழர்களின் அடையாளங்கள், எளிதில் மனதில் சென்றடைகின்றன. சேவை மனப்பான்மை போன்ற வாழ்க்கை நெறிகளை அறிந்து கொள்கின்றனர். சாதனையாளர்களைப் நேரில் பார்க்க வாய்ப்புக் கிடைக்கிறது" என்று கூறினார்.

சின்னமணி

© TamilOnline.com