அக்டோபர் 2013: வாசகர் கடிதம்
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்
தென்றலில் பொதுவாக அரசியல், கட்சி விமர்சனங்களைப் பிரசுரிப்பதில்லை என்பதை வாசகர்கள் கவனித்திருக்கலாம். எவற்றால் சமூகத்தை இணைக்க முடியுமோ அவற்றையே இயன்றவரை செய்வது என்பதில் உறுதியாக இருக்கிறோம். தென்றலை வெவ்வேறு அரசியல் சார்பு உடையவர்களும் எமது விழுமிய கருத்துக்களுக்காகவும் தமிழுக்காகவும் சேவைக்காகவும் ஆதரிக்கின்றனர். மக்கள் தமக்குள் பிணங்கத் தக்கவற்றை வாசகர் கருத்தாக எழுதினால் அவை பிரசுரிக்கப்படாமல் போக வாய்ப்புள்ளது. உங்கள் புரிதலை வேண்டுகிறோம். நன்றி.

ஆசிரியர் குழு


தென்றலின் கடந்த இதழ்களைப் படித்தேன். தமிழ் கலாசாரத்திற்காக, மொழிக்காக, மக்களுக்காக குறிப்பாக வடஅமெரிக்காவாழ் தமிழ் மக்களுக்காகவும், இந்திய பாரம்பரியக் கலைகளுக்காகவும் தென்றல் செய்துவரும் சேவை மிகவும் மகிழ்வையும் பிரமிப்பையும் தந்தது. தென்றல் பேசுகிறது, முன்னோடி, சாதனையாளர்கள், நேர்காணல்கள்,அமெரிக்காவில் நடக்கும் விழாக்கள் என அனைத்தையும் அறிய முடிகிறது. கவிதைகள், கதைகள், கட்டுரைகள், பயன்படத்தக்க பக்கங்கள் வாசகர்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றது என்ற வகையில் இந்த 'தென்றல்' ஒரு இனிய புயலாக வீசுகிறது.

ஆகஸ்ட் மாத இதழில் வெளியான காவல்துறை உயரதிகாரி எஸ்.கே. டோக்ரா நேர்காணல் பிரமாதம். குறிப்பாக 'சொன்னது பலித்தது' மிகவும் சிறப்பு. நான் குருகுலவாசத்தில் ஜோதிடம் கற்றவன். தற்போது தமிழகத்தில் அக்கலை பயிற்றுநராகவும் இருக்கிறேன். நன்றி.

ரா. ரங்கராஜன்,
ஜெர்சி சிடி, நியூ ஜெர்சி

*****


செப்டம்பர் இதழில் எல்லே சுவாமிநாதனின் 'புது சோஃபா' அருமையான நகைச்சுவை விருந்தாய் அமைந்தது. உண்மையான தேசியவாதியும், காந்தியவாதியும், காலமெல்லாம் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவருமான ஒரு தலைவர்தான் ராஜாஜி.

எஸ்.மோகன்ராஜ்,
ஹாலிஸ் க்வீன்ஸ், நியூ யார்க்

*****


தென்றலை வரிவிடாமல் வாசிக்கும் வாசகி நான். செப்டம்பர் இதழில் வெளியான நடிகர் ராஜேஷ் நேர்காணல், ஒரு நடிகரைப்பற்றி எனக்கிருந்த அபிப்பிராயத்தை மாற்றியது. பெரியார், இந்து மதம், நடராஜர் தத்துவம், ஜோதிடம் என அவர் சொன்ன தகவல்கள் வியக்க வைத்தன. பரதம் பயின்று, பாட்டிசைத்து சிவகாமியின் சபதம் (திணிஜிழிகி வில் பார்த்தேன்) போன்ற அருமையான நாட்டிய நாடகங்களை மேடையேற்றும் மதுரை ஸி. முரளிதரன் எப்பேற்பட்ட கலைஞர்! சிறுகதை "புது சோஃபா"வைப் படித்துப் படித்துச் சிரித்தேன். கீதா பென்னட் அவர்களின் "யாருக்கு அம்மா புரியும்?" சிந்திக்க வைக்கும்.
கவியோகி சுத்தானந்த பாரதியார் தன் எட்டு வயதில் எழுதிய கவிதையைப் படித்து மிரண்டு போனேன். நம் முன்னோர்கள் எவ்வளவு புத்திசாலிகள்! அதேபோல் எழுத்தாளர் கண்மணி குணசேகரனைப் பற்றிய தகவல்களும், கூழ் குடிக்கும் ஆசையில் வளையல் இறங்கி வந்த கவிதையும் பச்சைத் தமிழனின் பிரதிபலிப்பு. சினிமா அதிகம் இல்லாததால்தான் தென்றலின் தரம் உயர்ந்திருக்கிறது. தயவுசெய்து இப்படியே தொடருங்கள். நன்றி.

ஜெயா மாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா.

*****


நான் தமிழ்நாட்டின் கல்வித்துறையில் மாவட்டக் கல்வி அலுவலராகவும், முதன்மைக் கல்வி அலுவலராகவும், கல்வி ஆலோசகராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவன். எழுத்தாளன்; பத்திரிகையாளன். காட்பாடி ரெட் க்ராஸ் சொசைட்டியின் தலைவன். வேலூர் தியசாஃபிகல் சொசைடியின் பொறுப்பாளன். பத்திரிகையாளர் சங்கத் தலைவன். எனது பேத்தி சாஸ்தா தமிழ் பள்ளியில் பயின்று வருகிறாள். அப்பள்ளியின் அறிமுகக் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அமெரிக்காவில் எந்த அளவிற்கு அமெரிக்க தமிழ் அறக்கட்டளையும், தமிழ்ப் பள்ளிகளும் தமிழை வாழ வைத்தும் வளர்த்தும் வருகிறது என்பதை நேரில் கண்டு வியந்தேன்.
அத்துடன் 'வள்ளியின் காதல்' நாட்டிய நாடகத்தை ரசித்தேன். தமிழக நாட்டுப்புற, பாரம்பரியக் கலைகள், வித்தைகள், இசை என அனைத்தையும் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியாக அது இருந்தது. இவற்றோடு 'தென்றல்' இதழையும் கண்டு மகிழ்ந்தேன். செப்டம்பர் இதழில் நடிகர் ராஜேஷின் நேர்காணல், பிளாஸ்டிக் பணம், அமெரிக்கத் திருமணம் ஆகியவை சிறப்பாக இருந்தன. வாழ்த்துக்கள்.

டி.வி. சிவசுப்ரமணியம், டெக்சஸ்

*****


வணக்கம். தென்றல் இதழ் பல்சுவை இதழாக வெளிவருகிறது. வாசகர்களுக்கு பூரண திருப்தி தருகிறது. இருப்பினும் தென்றலில் கேள்வி - பதில் தொடங்கினால் பல வாசகர்களுக்கு மன மகிழ்ச்சி தருவதாக அது அமையும். இந்தியாவில் கேள்வி - பதில் பகுதி பத்திரிகைகளில் மிகவும் பிரபலம். ஒரு சில அரசியல் தலைவர்கள் தாங்களே கேள்விகளைக் கேட்டுக் கொண்டு, அதற்கு தாங்களே பதில்களையும் எழுதி வருவது கண்கூடு. எனவே வாசகர்களின் அறிவார்ந்த கேள்விகளுக்கு தென்றலில் அன்பான பதிலை வெளிப்படுத்தினால் மகிழ்வுறுவோம். முயற்சிக்கலாமே!

சமீபத்தில் நாட்டரசன் கோட்டைக்குச் சென்றபோது எனது 'அமெரிக்கப் பயணம்' பற்றிக் கேட்டார்கள். விலாவாரியாகச் சொன்ன நான், 'தென்றல்' பற்றியும் குறிப்பிட்டேன். "தென்றலா, வாங்குகிறீர்களா?' என புருவம் உயர்த்திக் கேட்டார்கள். 'வரி விடாமல் படிப்பேன்' என்றேன்.

'அப்படியானால் ஜூன் 2013 இதழில் நமது சுவர்ணலட்சுமி மாமி பற்றிய விவரம் வந்துள்ளதே, கவனித்தீர்களா?' என்று கேட்டனர். 'தென்றல்' தமிழ்நாட்டில் இவ்வளவு பிரசித்தமா என நான் நினைத்தேன். உடனே உள்ளே சென்று தென்றல் ஜூன் மாத இதழைக் கொண்டுவந்து தந்தனர்.

'77வது திருமண நாளன்று' என்ற கட்டுரையைக் கண்டு வியந்தேன்.

நடராஜபுரம் செல்லப்பா ஐயர் என்றால் 'ஓ' பந்தயமாட்டு ஐயரா? எனக் கேட்பார்கள். அவர் எனது மாமனார் ஆவார். ராமச்சந்திரன் - சுவர்ணலட்சுமி குடும்பத்தாருக்கு நெருங்கிய சொந்தம். சிவகங்கையில் 'வைத்தியர் சொர்ணமேனி' வீடு எது என்றால் காக்காய், குருவி கூட வழி சொல்லும் அளவுக்கு பிரசித்தமான குடும்பம். எனக்கும் ஒருவகையில் உறவுக்காரக் குடும்பம். அட்லாண்டா-ஜார்ஜியாவில் சிவகுமார் அனந்தசுப்ரமணியம் இருப்பது இதுநாள்வரை தெரியாது. 'தென்றல்' மூலம் தெரிந்து கொண்டேன். எட்டின சொந்தம் கிட்டின சொந்தமானது. தென்றலுக்கு நன்றி.

அரிமளம் தளவாய் நாராயணசாமி,
ஹூஸ்டன், டெக்ஸாஸ்

*****


2003 ஏப்ரலில் தென்றலைச் சுவைத்தேன். பத்தாண்டுகளுக்குப் பின் விமானம் விட்டு இறங்கியவுடன் கண்கள் தென்றலைத் தேடின. உடலோ சற்று ஓய்வு கொடேன் என்றது. இருப்பினும் தென்றலைச் சுவைக்க ஆசை நெஞ்சில். இல்லம் வந்ததும் ஜூலை மாத இதழைச் சுவைத்தேன். இரண்டு திங்கள் தொடர்ந்து வந்த இதழ்களையும் சுவைத்தேன். அறிவிற்கும், மனதிற்கும் திருப்தியான அறுசுவை உணவு. நீண்ட நாட்களுக்குப் பின் கீதா பென்னட்டின் பகிர்வுகள், ராஜேஷின் அனுபவம், சிறுகதைகள், ஆலய தரிசனம் எனப் பல செய்திகள் தென்றலில் கண்டேன். இன்றைய இந்திய அமெரிக்கக் கல்யாண நிகழ்வுகள் கண்டு மலைத்தேன்.

சாவித்ரி பாலசுப்ரமணியன் (வைகைத் தென்றல்),
கலிஃபோர்னியா

© TamilOnline.com