நம் அறிவியல் பக்தி
நவம்பர் 12, நியூ யார்க் டைம்ஸ் நாளேட்டில் தலாய் லாமா டென்சின் கியாட்சோ எழுதிய "நம் அறிவியல் பக்தி" என்ற கட்டுரையைப் படித்தேன். அதில் இரண்டு கருத்துகள் என்னைக் கவர்ந்தன. இளவயதில் தொலை நோக்கி வழியாகத் தான் நிலாவைப் பார்த்ததைத் தலாய் லாமா குறிப்பிடுகிறார். தொலைநோக்கியில், நிலவு குண்டும் குழியுமான பாறாங்கல்லாகத்தான் தெரிந்திருக்கிறது. ஆனால், தான் படித்த பண்டைய வானியல் நூல் ஒன்றில், நிலவு தானே ஒளிரும் கோளாகச் சித்தரிக்கப்பட்டது அவருக்கு நினைவுக்கு வந்தது.

அந்த நான்காம் நூற்றாண்டு நூலாசிரியர் இப்போது வாழ்ந்திருந்தால், வானியல் நூலை வேறுவிதமாக எழுதியிருப்பார் என்கிறார் தலாய் லாமா. புத்தமதத்தின் நம்பிக்கைகளில் ஒன்று தவறு என்று அறிவியல் வழியாக நிறுவினால், அதைப் புத்தமதம் ஏற்றுக் கொண்டு மாறவேண்டும். பௌத்தம் அறிவியல் இரண்டுமே உண்மையை, மெய்யறிவைக் கண்டறியும் நோக்கைக் கொண்டவை. அறிவியலிலிருந்து கற்றுக் கொள்வதால் பௌத்தம் மேம்படுகிறது என்கிறார் அவர்.

தம் முன்னோர் எழுதிய நூல்கள் எல்லாமே பிழையில்லாதவை, என்றென்றும் நிலைத் திருப்பவை, மாறாதவை, என்ற நம்பிக்கை களால் உந்தப்பட்டுப் போராடும் மதவாதிகள் நடுவே, பௌத்த மதத்தின் இந்தப் பகுத்தறிவுச் சிந்தனை நம் கவனத்தை ஈர்க்கிறது. இன்றைய அறிவியலை வைத்துப் பண்டைய நூல்கள்தாம் உண்மை என்று வாதிடுவோர் நடுவில், உலகத்தின் தலைசிறந்த விஞ்ஞானி களுடன் பழகி, உள்ளணு இயல்பியல், விண்ணியல், உளவியல், உயிரியல், நரம்பியல் என்ற துறைகளில் தம் அறிவை வளர்த்து வருகிறார் தலாய் லாமா என்ற செய்தி வியப்பூட்டுகிறது.

அறிவியல் உண்மைகளை அறிந்து தம் பழைய நம்பிக்கைகளை விலக்க முன்வரும் அதே நேரத்தில், அறிவியலின் அசுர வளர்ச்சியால் நாம் எதிர்கொள்ளும் ஆபத்துகளைப் பற்றி எச்சரிக்கிறார் தலாய் லாமா. மரபணு ஆராய்ச்சி முன்னேற்றத்தால், ஒட்டுயிரிகளை உருவாக்கும் வல்லமை விஞ்ஞானிகளுக்கு இப்போது உள்ளது. மனித மூளை மரபணுக்களை எலியின் மூளையில் பதித்தல், பல வேறு செடிகள், விலங்குகள், மனிதர்களின் மரபணுக்களை விளையாட்டாக ஒட்டுதல் போன்ற சோதனைகளின் நெடுங்காலத்துப் பின்விளைவுகள் என்னவாயிருக்கும் என்று நமக்குத் தெரியாது. அறிவியல்திறன் வளர்ச்சிக்கு இணையாக நல்லது கெட்டது எது என்று உணரும் மன வளர்ச்சியை நாம் இன்னும் பெறவில்லை. மனிதம் என்றால் என்ன, நம்மோடு உலகில் வாழும் ஏனைய உயிரினங்களுக்கு நம் பொறுப்பு என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவரை, இத்தகைய வல்லமை வெகுசிலரின் கையில் இருக்கட்டும் என்ற நிலை திருப்திகரமானதல்ல என்று எச்சரிக்கிறார் தலாய் லாமா.

சோவியத் யூனியனைப் பேயரசு என்று வர்ணித்தது அன்றைய அமெரிக்க அரசு. சோவியத் யூனியனின் குற்றம்? ரகசியச் சிறைகள், கைதிகளைக் கொடுமைப் படுத்துதல், துன்புறுத்தி வாக்குமூலம் வாங்குதல், தன் மக்களையே வேவு பார்த்தல், சின்னஞ்சிறு நாடுகளின் மீது படையெடுத்தல், பொம்மைப் பாராளு மன்றத்தைப் பொருட்படுத்தாமல் சர்வாதிகாரம் செய்தல் என்று பட்டியல் நீளும். கம்யூனிஸ்டு சோவியத் யூனியன் தன்னைக் காப்பாற்றத் தன் கொள்கைகள் எல்லாவற்றையுமே காற்றில் பறக்கவிட்டு, கொடுங்கோலாட்சியாக மாறினாலும் தன் வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை. இன்று பயங்கரவாதி களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று சோவியத் யூனியனின் அதே உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளது அமெரிக்கக் குடியரசு. இந்த நிலை தொடர்ந்தால், இந்தக் காலம் அமெரிக்காவின் வரலாற்றிலேயே கருங்காலம் என்று வருங்கால வரலாற்று ஆசிரியர்கள் சொல்லப் போகிறார்கள். போகிற போக்கில் "அமெரிக்காவை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்ற வேண்டுமென்றால், 2008 அதிபர் தேர்தலை ஒத்தி வைத்துவிட்டு, அதிபர் புஷ்ஷை இடைக்காலச் சர்வாதிகாரியாக நியமிக்க வேண்டும்" என்று காரணம் கற்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இணையத்தில் வலைத்தளங்கள் மட்டு மல்ல, வலைப்பூக்களும் (blogs) கோலோச்சத் தொடங்கிவிட்டன. ஆங்கிலத்தைப் போலவே தமிழிலும் வலைப்பூக்கள் மலர்ந்து கொண்டிருக்கின்றன. தென்றல் வாசகர்கள் தங்கள் கருத்துகளை ஆசிரியர் குழுவுடன் மட்டு மல்லாமல், ஏனைய தென்றல் வாசகர் களோடும் பகிர்ந்து கொண்டு உரையாட வலைப்பூ வாய்ப்பளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தென்றல் வலைப்பூ தொடங்கியது பற்றி மின்னஞ்சலில் அறிவித்திருந்தோம்; ஆனால், அச்சில் அறிவிக்கவில்லை. தென்றலில் வரும் கதைகள், கட்டுரைகள், கருத்துகள், நேர்காணல்கள், குறுக்கெழுத்துப் புதிர்கள் என்று எல்லாவற்றையும் பற்றிய வாசகர் கருத்துகளைத் தென்றல் வலைப்பூவிலும் வரவேற்கிறோம். தென்றல் வலைப்பூவின் முகவரி http://thendralmag.blogspot.com

வலைப்பூ அறிவிப்பில் குறிப்பிட்டபடி, வட அமெரிக்கத் தமிழ்ச் சமுதாயத்தின் தேவை களை அறிந்துகொள்ளத் தென்றல் வலைப்பூ ஏது செய்யும் என்று நம்புகிறோம். மாத இதழான தென்றலுக்கு, வலைப்பூவின் உடனடி ஊடாட்டம் இன்றியமையாதது. கருத்துகளைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் பகிர்ந்து கொள்ளலாம். பல இல்லங்களில் தென்றலின் படைப்புகள் காரசாரமாக விவாதிக்கப்படுகின்றன என்று அறிகிறோம். அது போன்ற விவாதங்களைத் தங்கள் அடையாளங்களைக் காட்ட விரும்பாதவர்களும் பொதுமேடையில் பகிர்ந்து கொள்ளத் தென்றல் வலைப்பூ வாய்ப்பளிக்கிறது. பத்திரிக்கையைப் பார்த்துப் படித்து, அதில் உள்ள கருத்துகளைப் பற்றிச் சிந்தித்து, நேரத்தை ஒதுக்கி ஆசிரியருக்குக் கடிதம் எழுதும் வாசகர்கள் ஒரு பத்திரிக்கைக்கு விலைமதிக்கமுடியாத செல்வம்.

வலைப்பூவில் ஷொட்டுகள் மட்டுமல்ல, கொட்டுகளும் விழும் என்பது எதிர்பார்த்தது தான். வாசகர்கள் ஏமாற்றவில்லை. வாசகர் "நாராயணன்" வலைப்பூவில் எங்களுக்குக் கொட்டிய கொட்டை, இந்த இதழில் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில் வெளியிட்டிருக்கிறோம். வாசகர் நாராயணனின் கடைசிக் கொட்டு, புழைக்கடைப் பக்கத்துக்கு விழுந்திருக்கிறது! "அதென்ன குஷ்பு பேசிய பேச்சுக்கு எதிராக ஒரு எண்ணம்? கடல் கடந்து வந்தும் நம் எதிர்பார்ப்புகள் மாறவில்லையே?" என்று கேட்டிருக்கிறார் நாராயணன். நல்ல கேள்விதான். இது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களை வலைப்பூவில் தொடரலாமா? இது மட்டு மல்ல, பண்பாட்டுக் குழப்பங்கள், அமெரிக்க வாழ்க்கையில் சோதனைகள், போன்ற பல விஷயங்களில் வாசகர்களின் அனுபவ அறிவு பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். வலைப்பூவில் இடும் கருத்துகளில் சில வற்றைத் தேர்ந்தெடுத்து தென்றலில் வெளியிட எண்ணியிருக்கிறோம்.

சென்றமாதக் குறுக்கெழுத்துப் புதிர் போட்டி அறிவுப்புக்குப் பலத்த வரவேற்பு இருந்தது. புதிரின் விடையைச் சரியான நாளில் வலையேற்றியிருந்தோம். ஆனால், புதிர் விடையின் வலைச்சுட்டி முகவரி சற்று வேறுபட்டிருந்தது. சரியான முகவரி: thendral.chennaionline.com/puthir.asp அல்லது archives.aaraamthinai.com/thendral/puthir.asp. புதிர் மன்னர்களுக்குப் பாராட்டுகள். அனைவருக்கும் எங்கள் அன்பான பொங்கல் வாழ்த்துகள்.

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com