நகரவாசியின் தனிமை
இந்தக் கவிதை
அழைப்பு மணியோ
நாய்க்குரைப்போ
கதவின் க்றீச்சோ
எதுவுமில்லா
வலிந்த நிசப்தம் பற்றியது.

நீரறியாத முல்லைக் கொடிக்கும்
பிரிக்கப்படாத கடிதங்களுக்கும் நடுவே
பின்னப்பட்ட வலை பற்றியது.

மூடப்பட்டே இருக்கும் கதவுகளில்
மோதித் திரும்பும் வௌவால்கள்
மற்றும்
முகவரி தேடியலைபவர்களின்
பதட்டம் குறித்தும்.

தோட்டத்துச் செடிகளின் கதறல் குறித்தும்-
திறக்கப்படாத சாளரங்களின்
மூச்சுத்திணறல் குறித்தும்
பதறுகிறது இந்த வரியில்.

முகம் பார்க்க யாருமற்ற
கண்ணாடிகளின்
இழந்த வசீகரம் குறித்தும்-

தாம்பத்யமறியாத
மெத்தைகளின் தாபம் குறித்தும்
பரிதவிக்கிறது.

தாழிடாத அறைக்குளியலில்
கரையும் தனிமை குறித்தும்-

ஆடைகள் அணியத்
தேவையற்றவனின்
உதிரும் நிர்வாணம் குறித்தும்
உருகிச் சரிகிறது.

யாரென்றே இந்தக் கவிதையாலும்
கண்டுபிடிக்கமுடியாத-

அடர்கருப்புத் தாள் ஒட்டப்பட்ட
வாகனத்தில் பின்னிரவில் வந்து
அதிகாலை தொலைந்துவிடும்

மற்றொரு ஒற்றை நகரத்துவாசியின்
தனிமை மட்டுமின்றி
வாழ்க்கை பற்றியதும் கூட.

*****


சிருஷ்டி

​வெளியில் தத்தளிக்கும்
பட்டத்தின் வால்
எழுதத் தொடங்கியது
கவிதையின் முதல் வரி.

எங்கிருந்தோ பிறக்கிறது
ஒரு சொல் இங்குவந்து
பொருத்திக்கொள்ள.

என்றோ பார்த்த
காட்சியின் வண்ணங்கள்
தூரிகையை நனைக்கிறது
தீட்டிக் கொள்ள.

யாரோ பேசும்
ஒரு வார்த்தை எடுத்தோ
தடுத்தோ நிறுத்துகிறது
அதன் பயணத்தை.

வார்த்தைகள் கைநழுவ
மழை நீர்க்கப்பலாய்
அசைகிறது சாய்கிறது
நிலையின்றி.

ஏதுமற்ற ஒரு நொடியில்
குமிழியின் மென்சுவர்
உடைய

பிறத்தலின் வலியும்
மரித்தலின் சுவையும்
ஒன்றாய்க் கூட

முற்றுப் பெறுகிறது
என்றோ தொடங்கிய
கவிதையின் இறுதிவரி.

*****


லயம்

அந்த வனத்தில் என் முன்னே ஒரு நதி.
பிரவாகமாய்ப் படர்ந்து கிடக்கக் காத்திருந்தேன்
என் கவிதையின் முதல் வரிக்காய்.

மொட்டவிழ இருக்கும் தாமரை.
நீரில் பாதம் பதியாது தத்தும் ஓட்டாஞ்சில்.
கொக்கிப் புழு ஈர்க்காத மீன்களின் சுதந்திரம்.

வானில் சுவடுகளை அழித்துச் செல்லும் சிறகுகள்.
மேய்ப்பனோடு திரும்பும் ஆடுகளின் தோல்மணம்.
யாரோ இசைக்கும் சோகம் கசியும் ஆலாபனை.

மறுபடியும் நதியின் நீரைப் பார்த்து நிற்கையில்
நினைத்துக் கொண்டேன்-
கவிதையின் முதல்வரி
பரவசமும் நெகிழ்ச்சியும் தரும்
இந்தப் பேரமைதியாக இருக்கட்டும் என

சுந்தர்ஜி

© TamilOnline.com