கனிந்து வரும் பசுபோல்!
குடும்பத்தில் இரண்டு பிரசவங்கள் அடுத்தடுத்து. மருமகள் ஆனந்திக்கும் மகள் சுகுணாவுக்கும் தலைச்சன் பேறு. ஆனந்தி பிறந்தகம் போக ஆசைப்பட்டாள். அவளை அழைத்துக் கொண்டு போக அவள் தகப்பனார் வந்தார். சீமந்தம், வளைகாப்பு எல்லாம் அழகாகச் செய்து மீனாமாமி தன் மருமகளைப் பிறந்தகம் அனுப்பினாள்.

இரண்டு பேரக் குழந்தைகள் பிறக்கப் போகிறார்கள் என்று மீனாமாமிக்கும் அப்புமாமாவுக்கும் ஒரே குஷி. சுகுணாவுக்கு உடனடியாக வர முடியவில்லை. அவளுக்குக் கணவன் வீட்டில் வசதிக் குறைச்சல். மாப்பிள்ளை நிறைய சம்பாதித்தாலும் குடும்பத்தில் சமயத்துக்கு உதவ உறவுக்காரர்கள் கிடையாது. தாயார் தள்ளாத கிழவி. படுத்த படுக்கை. வேலைக்காரியும் நர்ஸும் போட்டு அம்மாவைச் சமாளித்தார்கள். ஆஸ்பத்திரியும் தொலைவில் இருந்தது. டாக்ஸியில்தான் போய்வர வேண்டும். அதனால் சுகுணா பிரசவத்துக்கு பிறந்த வீடு வருவதுதான் வசதி. ரமணி ஆஃபீஸ் போய்விட்டால் வேலைக்காரியும், நர்ஸும்தான் பாட்டியம்மாவை கவனிப்பார்கள். எப்படியோ இரண்டு மாதத்துக்குச் சமாளிக்கலாம் என்று ரமணி சுகுணாவுடன் அப்புமாமா வீட்டுக்கு வந்து இரண்டு நாள் இருந்து விட்டுத் திரும்பினான், அவசரமாக. சீமந்தச் சடங்கை சுருக்காக நடத்தி அவனை வழியனுப்பினார்கள்.

ஆஸ்பத்திரி மிகவும் பக்கத்தில் இருந்தது. வீட்டில் சமையலுக்கும், குழந்தை துணிமணிகளை சுத்தம் செய்ய மீனா மாமி ஆட்களை வைத்தாள்.

அடுத்துக் கொஞ்சநாளில் ஆனந்திக்கு சுகப்ரசவமாகி ஆண்குழந்தை பிறந்த விஷயத்தை அவள் தகப்பனார் அறிவித்தார். ஆனால் இரண்டு நாட்களுக்குள் இன்னொரு தகவல் எல்லோரையும் அதிர வைத்தது. பிறந்த குழந்தை ஜுரம் கண்டு திடீரென்று இறந்துவிட்டது என்று. மகன் வாசு பதைபதைத்தான். அப்புமாமா உடனடியாக அவனை மாமனார் வீட்டுக்கு விமானத்தில் போக ஏற்பாடு செய்தார். வீடு களையிழந்தது.

வாசு வரும்வரை குழந்தையின் உடலை வைத்திருந்தார்கள். ஆனந்திக்கு துக்கம் தாளவில்லை. வாசு அவளைத் தேற்றி, தன்னையும் தேற்றிக்கொண்டு வீடு வந்தான். முதல் குழந்தையை இப்படி இழந்தது என்ன அநியாயம்!

அப்பா, அம்மா வாசுவையும் ஆனந்தியையும் நினைத்து நினைத்துக் கலங்கினார்கள். ஆனந்திக்கு இதற்குமேல் பிறந்த வீட்டில் வாசு இல்லாமல் இருக்க முடியவில்லை. சில வாரங்களிலேயே வந்துவிட்டாள். சுகுணா, ஆனந்தியை ஆதரவுடன் கவனித்துக் கொண்டாள். பிள்ளை பெற்ற உடம்பு குணமாக வேண்டும் என்று பரிவாக இருந்தாள். இரண்டு இளம் பெண்களும் ஒற்றுமையாக இருந்தார்கள்.

ஒருநாள் சுகுணாவை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்கள். கொஞ்சம் கஷ்டமான பிரசவமாக இருந்தது. ஆபரேஷன் வேண்டி வரவில்லை. அதிக நேரம் எடுத்தது. இரண்டு டாக்டர்கள் மாறிமாறி கவனித்துக் கொண்டார்கள். வீடு பக்கத்தில் இருந்ததால் உறவு மனிதர்கள் அடிக்கடி வந்து சுகுணாவைப் பார்த்து விட்டுப் போனார்கள். சுகுணா நன்றாய்ச் சோர்ந்து போய்விட்டாள். மீனாமாமி எல்லா தெய்வங்களையும் வேண்டிப் பிரார்த்தனை செய்தாள். பெரிய கவலைக்குப் பின் இயற்கையாக சுகுணாவும் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். ஆனால் கவலை தீரவில்லை. ரத்தப்போக்கு அதிகமாகி, அதைக் கட்டுப்படுத்த முடியாமல் சிலமணி நேரத்தில் தான் பெற்ற சிசுவை கையில் ஏந்தியபடியே சுகுணா உயிர் நீத்தாள். இவ்வளவு பெரிய இடியை யார் எதிர்பார்த்தார்கள்? சமாளித்துக் கொண்டு ரமணிக்குத் தெரியப்படுத்தினார்கள். ரமணியும் பதறிப்போய் வந்து சேர்ந்தான். ரமணி ஆஸ்பத்திரியில் தன் குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு ஏதேதோ சொல்லி அழுதான். மற்றவர்களுக்கு இது கஷ்டமாக இருக்கும் என்று நர்ஸுகள் குழந்தையை உள்ளே கொண்டு போய்விட்டார்கள்.

சுகுணாவின் கடைசி சடங்குகளைச் செய்து முடித்து ரமணி தன் தாயாரை சமாதானப்படுத்தத் திரும்பிவிட்டான். வீட்டில் வசதி இல்லாததால் குழந்தையை வளர்க்க மாமனார், மாமியாரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டான். இது ஒரு வேதனையான பிரிவு, கண்ணீர் சுரந்தது.

குழந்தையைக் கவனிப்பது மிகவும் பொறுப்பான வேலை. மீனாமாமிக்கு பொழுது சரியாக இருந்தது. ஆனந்தியை இதில் சேர்த்துக்கொள்ள மாமி சற்று தயங்கினாள். தன் குழந்தையை இழந்த அவள் மனம் எப்படித் தவிக்கிறதோ, அவளுக்கும் பச்சை உடம்பு தேற வேண்டும். மனதைத் துன்புறுத்தக் கூடாது.

குழந்தை கொஞ்சம் கஷ்டப்பட்டான். புதுக் கைகள் அவனைத் தாங்கின. பால் புட்டி குடிக்கக் கடினமாக இருந்தது. பாட்டிலில் பசுவின் பால் சரியாக இறங்கவில்லை. தடுமாறினான். பால் வெளியில் வழிந்துபோய் வயிறு நிறையவில்லை. பாலாடையில் புகட்டினால் விழுங்கத் தெரியாமல் இருமினான். வயிறு நிறையாமல் ஒருநால் முனகலும் சிறுகுரலில் அழுகையுமாகத் துடித்துக் கொண்டிருந்தான். மாமிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குழந்தையை மடியில் தாங்கியபடி மாமி கண்ணீர் விட்டாள்.
"எப்படிடா உன்னை வளர்க்கப் போறேன்" என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள்.


அப்பு மாமாவும் வாசுவும் வேலையிலிருந்து வீடு வந்தார்கள். ஆனந்தி அவர்களுக்கு காபி, டிஃபன் கொடுத்தாள். மாமியாரின் அவஸ்தையைப் பார்த்தாள்.

ஆனந்தி மெதுவாய் மீனாமாமியிடம் வந்தாள், "அம்மா, குழந்தை பசியில் துடிப்பதைப் பார்த்து என் மனம் குழைகிறது. மார்பில் பால் நிறைகிறது. ரவிக்கை எல்லாம் நனைந்து விட்டது. நான்... நான்... அவனுக்கு பால் ஊட்டலாமா அம்மா?" ஆனந்தி பயத்துடனும், தயக்கத்துடனும், கூச்சத்துடனும் கேட்டாள்.

மாமி ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தாள். "நீ கருணைத் தெய்வம் என் பெண்ணே! ஆனால் மனது பயப்படறதே" என்றாள் மாமி. "மாப்பிள்ளைக்குத் தெரிந்தால் கோபித்துக் கொள்வார். அவர் அம்மா என்ன சொல்வாரோ!"

"இன்றைக்கு ஒரு தடவை...." தயங்கினாள் ஆனந்தி.

இவர்கள் பேச்சைக் கேட்ட வாசு அங்கே வந்தான். "ட்ரை பண்ணட்டும் அம்மா" என்றான்.

மீனாமாமிக்கு முழுச் சம்மதம் இல்லை. குழந்தை படும் துயரம் பார்க்கச் சகிக்காமல் ஆனந்தியைக் கீழே உட்கார வைத்து சிசுவை அவள் மடியில் படுக்க வைத்தாள்.

அந்தப் பிஞ்சுக் குழந்தை முகத்தைத் திருப்பி, பாலைத் தேடி அவள் மார்பில் புதைத்துக் கொண்டது. ஆனந்தியின் உடல் சூட்டில் முயங்கி, மிருதுவான அவள் கைகளால் அணைக்கப்பட்டு, தாய்ப்பாலைப் பருகியபடியே குழந்தை சில நிமிஷங்களில் வயிறு நிறைந்து தூங்கிவிட்டான். அவன் முகம் எல்லாம் பால். கழுத்து வழியாய் வழிந்தது. வாசு பனித்த கண்களுடன் பாப்பாவின் தலையை வாஞ்சையுடன் வருடினான். வாசு ஏன் கண்ணீர் விட்டான்? தான் இழந்த தன் குழந்தையை நினைத்தா? இந்தத் தாய் இல்லாச் சிசு, பாலுக்குத் தவித்ததாலா? இறந்த தன் தங்கையை நினைத்தா, தன்முன் கருணைக் கடலாகப் பால் ஊட்டும் ஆனந்தியின் மனப்பான்மையை வியந்தா?

தூங்கத் துவங்கிய குழந்தையின் முகம், உடம்பு எல்லாம் துடைத்து, துணி மாற்றி தொட்டிலில் படுக்க வைத்தாள் பாட்டி மீனா. ஆனந்தி தன் உடையை மாற்றிச் சரி செய்து கொண்டாள். மூவர் முகத்திலும் திருப்தியான, பெருமிதமான புன்னகை. கண்கள் நீர் சொரிந்தது.

"பார்த்தாயா, இவ்வளவுதான் வேண்டி இருந்தது இந்தச் சின்னப்பயலுக்கு" என்று சிரித்தான் வாசு.

"அது சரிதாண்டாப்பா. இது ரமணிக்குத் தெரிந்தால் கோபிப்பானே! அவன் அம்மா என்ன சொல்லப் போகிறாளோ? நாலு பேர் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது?" என்று மீனாமாமி அங்கலாய்த்தாள்.

அப்போது அப்பு மாமா அங்கே வந்தார். "மாப்பிள்ளைக்கு நான் சரியா பதில் சொல்லிக்கறேன். குழந்தையையும், வயசான அம்மாவையும் அவன் எப்படிச் சமாளிப்பான்? தவிர, அவன் குழந்தையை நம்ம பொறுப்பில் விட்டாச்சு. ஒவ்வொருத்தர் வெட் நர்ஸ் போட்டுக் குழந்தை வளர்க்கிறார்கள். நாம் ஆனந்தியை அப்படி நிர்ப்பந்தம் பண்ணி பால் ஊட்டச் சொல்லலையே. அவளாத்தானே முன்வந்து குழந்தைக்குக் காருண்யப் பால் கொடுத்தாள். அவளும் நம்ம பெண்தானே? நம்ம குடும்ப விஷயத்தில் யாரும் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே ஒருத்திக்குப் பிறந்து, இன்னொருத்திகிட்ட பால் குடித்து வளரலையா?" என்று சொல்லி விட்டுக் கதவுவரை போனவர், திரும்பி நின்று, "பயத்தினால் அழுத சம்பந்தருக்கு தேவியே இரங்கி வந்து ஞானப்பால் ஊட்டினது போல...." என்றபடி ஆனந்தியை நன்றி நிறைந்த புன்னகையுடன் பார்த்தார்.

"குழந்தைக்கு நல்ல பெயர் அப்பா. குட்டிப் பயல் சம்பந்தன்" என்று சொல்லி வாசு சிரித்தான்.

பார்வதி ராமன்,
டேடன், நியூ ஜெர்சி

© TamilOnline.com