தவளையின் தந்திரம்
ஒரு கிணற்றில் தவளை ஒன்று குடும்பத்துடன் வசித்து வந்தது. அந்தக் கிணற்றிலிருந்த பொந்தில் மறைந்து வாழ்ந்த பாம்பு ஒன்று தவளைக் குஞ்சுகளை ரகசியமாகத் தின்று வந்தது. தனது குடும்பத்தின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவதன் காரணம் அறியாமல் திகைத்த தவளை, ஒருநாள் இதற்குப் பாம்புதான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தது. எப்படியாவது இந்தப் பாம்பிடம் இருந்து தப்பிக்க நினைத்த அது தன் மனைவியுடன் கலந்து ஆலோசித்தது.

அப்போது அங்கே வந்த பாம்பு அந்தத் தவளையைப் பிடித்துக்கொண்டது. "எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. நான் உன்னைத் தின்னப்போகிறேன்" என்றது பாம்பு.

"அவசரப்படாதீர்கள். நானும் என் மனைவியும் மட்டும்தான் இங்கே இருக்கிறோம். இன்று எங்களைத் தின்றுவிட்டால் நாளை பசிக்கும்போது என்ன செய்வீர்கள்?" என்று கேட்டது தவளை.

"வேறென்ன செய்வது, வேறு கிணற்றையோ, குட்டையையோ தேடிப் போக வேண்டியதுதான்!"

"நீங்கள் அப்படிக் கஷ்டப்பட வேண்டாம். நீங்கள் சுகமாக வாழ நான் ஒரு ஆலோசனை சொல்கிறேன். கேட்பீர்களா?"

"சொல்...சொல். எனக்கு ரொம்பப் பசிக்கிறது."

"நான் என் மனைவியை அனுப்பி வேறு கிணற்றிலிருந்தோ அல்லது அருகில் உள்ள குட்டையிலிருந்தோ அங்குள்ள தவளைகளை இங்கே அழைத்து வரச் சொல்கிறேன். அவை பல்கிப் பெருகும். நீங்களும் சுகமாக உண்டு பசியாறலாம். அங்கும் இங்கும் அலையாமல் ஓய்வாக இருக்கலாம்."

"நீ சொல்வது சரியாகத்தான் தெரிகிறது. சீக்கிரம் உன் மனைவியை அனுப்பி அந்தத் தவளைகளை அழைத்து வா!" என்றது பாம்பு.

தவளையும் தன் மனைவியை அங்கிருந்து போகச் செய்தது. சில நிமிடங்கள் கழிந்தன. பின்பு தவளை பாம்பிடம், "ஐயோ பாவம்! நீங்கள் எவ்வளவு நேரம்தான் பசியைப் பொறுத்துக் கொண்டிருப்பீர்கள்? போனவளை இன்னும் காணோம். ஒன்று செய்கிறேன். நானே போய் அந்தத் தவளைகளை விரைந்து அழைத்து வருகிறேன். சரியா?" என்றது.

பசி மயக்கத்தில் இருந்த பாம்பும் சோர்வுடன் தலையாட்டியது. தவளை அந்தக் கிணற்றை விட்டு வேகமாக வெளியேறியது. வெளியே மறைவிடத்தில் காத்திருந்த தன் மனைவியிடம், "அப்பாடா, ஒரு வழியாகத் தப்பித்தோம். இனி, அதோ தெரிகிறது பார் ஆழமான குட்டை. அங்கு சென்று நாம் நிம்மதியாக வாழலாம், வா" என்று விரைந்து அழைத்துச் சென்றது.

தவளையும் மனைவியும் மற்றத் தவளைகளுடன் திரும்பி வரும் என்று வெகுநேரம் காத்துக் கொண்டிருந்த பாம்பு சோர்ந்து மயங்கிப் போனது.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com