நாகை ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் - நீலாயதாட்சி
தஞ்சையிலிருந்து 77 கி.மீ. தொலைவில் கடற்கரை அருகே அமைந்துள்ளது நாகப்பட்டினம். காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 127 சிவத்தலங்களுள் 82வது தலம் இது. இறைவன் நாமம் காயாரோகணர். இறைவியின் நாமம் நீலாயதாட்சி. அழகிய நீலநிறக் கண்களை உடையவள் என்பதால் கருந்தடங்கண்ணி என்ற பெயருண்டு. இறைவன் புண்டரீக முனிவரை உடலுடன் ஆரோகணம் செய்த தலம். காயம் என்றால் உடம்பு; ஆரோகணம் என்றால் உடம்புடன் சேர்த்துக் கொள்ளல். நாகை காரோணம் என இது பக்தி இலக்கியங்களில் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.

புண்டரீக முனிவர் இளவயதிலேயே சிவபெருமானிடம் மனதைப் பறிகொடுத்தார். தந்தை சொல்படி, எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டால் எண்ணிய பேற்றைப் பெறலாம் என்று பல சிவத்தலங்கள் சென்று தரிசித்தார். தவம் செய்தார். இருப்பினும் பலன் கிட்டவில்லை. அச்சமயம் வாமதேவ முனிவர் அவ்விடம் வந்தார். அவர் காசி, கும்பகோணம் நீராடி தவம் செய்தால் பலன் கிட்டும் என்றார். அதன்படி செய்தும் பலன் கிட்டவில்லை. கவலையுற்று புண்டரீக முனிவர் வருத்தமாயிருந்த சமயம் கண்வ முனிவர் உடம்போடு வீடு பேற்றை அடைய வேண்டும் என்றால், ஆதிபுராணம் எனப்படும் நாகைக் காரோணம் சென்று காயாரோகணப் பெருமானை வழிபடு. நினைத்தது நடக்கும் என்றார். அதன்படி எல்லா தீர்த்தங்களிலும் நீராடி நாகையில் சிவலிங்க ப்ரதிஷ்டை செய்து வழிபட்டதும் சிவன் புண்டரீக முனிவருக்குக் காட்சி தந்தார். எமது மூன்றாவது காட்சி அருளும்போது எம்மோடு உம்மை ஏற்றுக் கொள்வோம் என்றார். அவ்வாறே புண்டரீகரின் கடும் தவத்திற்கு மெச்சி மூன்றாம் முறை காட்சி தந்து, முனிவரை இருகரம் நீட்டி அழைத்து தம் திருவுடலோடு ஆரோகணம் செய்து கொண்டதால் இறைவனுக்கு காயாரோகணர் என்று பெயர் ஏற்பட்டது.

அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய சைவசமயக் குரவர்களும் சங்கீத மும்மூர்த்திகளும், அருணகிரிநாதரும் பாடல்கள் இயற்றி வழிபட்டுள்ளனர். தசரதர், ஆதிசேடன், காரைக்கால் அம்மையார் ஆகியோர் வழிபட்டுள்ளனர். பிற்காலத்துப் புலவர்களான காளமேகம், மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியோரும் பாடல்கள் இயற்றியுள்ளனர். தீர்த்தம் தேவ தீர்த்தம், சர்வ தீர்த்தம்.

உலகம் அழியும் காலத்து இத்தலத்திற்கு வந்த சப்த ரிஷிகளும் சூரிய வெப்பம் தாங்காது ஈசனிடம் முறையிட்டனர். இறைவன் அவர்களைக் காத்து சோமாஸ்கந்த ரூபத்தில் காட்சி தந்தார். திருமாலும் பிரம்மனும் சிவபெருமானை வேண்ட, பிரம்மனை லிங்கத்தின் அடியிலும், திருமாலை நடுவிலும், 7 ரிஷிகளை புலத்திலும் அமர்த்தினார். சிவலிங்கத்தின் அடிப்பாகம் பிரம்ம பாகமாகவும், நடுப்பாகம் விஷ்ணு பாகமாகவும் இன்றும் சொல்லப்படுகிறது. கால சம்ஹார முடிவில் மாலும், பிரம்மாவும் வெளிவந்து தம் தொழிலைச் செய்தனர். ரிஷிகளும் வெளிவந்து தம் கடமைகளைச் செய்ய ஆரம்பித்தனர். காலமுடிவில் அனைத்து சிவலிங்கங்களும் நாகையில் தோன்றியதால் இதற்கு "சிவராஜதானி" என்ற பெயரும் உண்டு. அனைத்திற்கும் மிகப் பழமையான தலம் என்பதால் "ஆதிபுராணம்" என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் 12 சிவாலயங்கள் அமைந்துள்ளன. அகத்தியருக்கு மணக்கோலத்தில் காட்சி அளித்த தலங்களுள் இதுவும் ஒன்று.

அழகிய நீலநிறக் கண்களைக் கொண்டதால் அன்னை நீலாயதாட்சி. 64 சக்தி பீடங்களுள் ஒன்று. காசி, காஞ்சி, மதுரை, ஆரூர், நாகை என்ற ஐந்து ஆட்சி பீடங்களுள் ஒன்று. கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியத்திற்குத் தொன்மைச் சான்றாக தேர், கோபுரம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகியன பல்வேறு சிறப்புக்களுடன் காட்சி அளிக்கின்றன. வாலைக் குழைத்த நந்தி, பன்னிரு ராசிகள், ஒரே கல்லினால் ஆன ஆறுமுகர், கல் சங்கிலி ஆகியன பார்த்து இன்புறத்தக்கன. பதினெண் சித்தர்களுள் ஒருவரான அழுகுணிச் சித்தரின் ஜீவசமாதி ஆலயம் இங்கே அமைந்துள்ளது. பௌர்ணமிதோறும் இங்கு சிறப்புப் பூசைகள் நடக்கின்றன.

ஆதிசேஷன் வந்து தங்கித் தவம் செய்து வரம்பெற்ற திருத்தலம். ஆதிசேஷன் வழிபட்ட லிங்கம் 'நாகநாதர்' என்ற பெயரில் விளங்குகிறது. ஆதிசேஷன் காலையில் திருப்பாம்புரம் சென்றும், உச்சி வேளையில் நாகேஸ்வரம் சென்றும், அர்த்தசாமத்தில் நாகேஸ்வரம் வந்தும் வழிபட்டு அருள் பெற்றதாக ஐதீகம். ராகு, கேது பரிகாரத் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. கிரகதோஷம் போக்கும் வகையில் நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே திசையில் அமைந்துள்ளது இத்தலத்தின் தனிச்சிறப்பு. இந்திரன் வழிபட்ட சுந்தர விடங்கர், காயாரோகணர் சன்னதிக்குத் தென்புறம் தனி ஆலயத்தில் காட்சி தருகிறார். அதிபத்த நாயனாருக்கு இறைவன் தங்கமீன் தந்து அருள்புரிந்த தலம் இது. அந்தத் திருவிழா ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. இவருக்கு திருக்கோயிலில் மடப்பள்ளிக்குத் தென்புறம் தனிச் சன்னதியும் உண்டு.

வைகாசி விசாகப் பெருவிழா, ஆனிமாதம் பஞ்சகுரோச விழா, ஆடி மாதம் பரணி நட்சத்திரத்தில் நடக்கும் அம்மன் விழா ஆகியன கண்டு இன்புறத்தக்கன. வெளி மாநிலங்களிலிருந்தும்
மக்கள் திரளாக வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com