சாமி. சிதம்பரனார்
பள்ளி ஆசிரியர், பாடநூல் ஆக்கியோர், எழுத்தாளர், கட்டுரையாளர், அச்சக அதிபர், பத்திரிகையாளர், சொற்பொழிவாளர், கவிஞர் எனத் திகழ்ந்தவர் சாமி. சிதம்பரனார். டிசம்பர் 1, 1900ல், மயிலாடுதுறையை அடுத்த கடகம் கிராமத்தில் சாமிநாத மலையமான் - கமலாம்பாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை நிலக்கிழார். ஓரளவு வசதியான குடும்பம். துவக்கக் கல்வியை கிராமத்திலும், உயர்நிலைக் கல்வியை மயிலாடுதுறையிலும் நிறைவு செய்தார். பின் மதுரை தமிழ்ச் சங்கத்தில் 1923ல் "பண்டிதர்" பட்டம் பெற்றார். கரந்தை தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியர் பணி கிடைத்தது. த.வே. உமாமகேஸ்வரன் பிள்ளை, சர் ஏ.டி. பன்னீர்செல்வம், ஆர். வெங்கடாசலம் பிள்ளை போன்றோரது அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து தஞ்சை ஜில்லா போர்டு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணியாற்றி மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். ஒழுக்கம், உண்மை, நேர்மை போன்ற குணங்கள் கொண்டவர்களாக மாணவர்கள் விளங்க வேண்டுமென அறிவுறுத்தி வழிநடத்தினார்.

மாணவர்களுக்கு பகுத்தறிவுப் பாதையைக் காட்டினார். வேஷ்டி, டர்பன் அணிந்து ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த வழக்கத்திலிருந்து மாறுபட்டு, கோட், ஷூ, டை அணிந்து பள்ளிக்குச் சென்ற முதல் ஆசிரியர் சிதம்பரனார். ஏழை மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி போதித்து, அவர்களது வளர்ச்சிக்கும் உதவினார். ஓய்வு நேரத்தில் இலக்கியக் கட்டுரைகளையும், கதை, கவிதை போன்றவற்றையும் அக்கால இதழ்களில் எழுதினார். நீதிக்கட்சியின் மீது ஆர்வம் கொண்டார். பின் சுயமாரியாதை இயக்கம் அவரை ஈர்த்தது. அதன்மூலம் பெரியார் ஈ.வெ.ரா., எஸ். ராமநாதன், கைவல்லிய சாமியார் போன்றோரின் தொடர்பு கிடைத்தது. சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார். சொல் வேறு, செயல் வேறு என்றில்லாமல், சுயமரியாதை இயக்க வழிப்படி சிவகாமி என்ற விதவைப் பெண்ணைக் கலப்புத் திருமணம் செய்துகொண்டு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

பெரியாரின் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தொண்டராக, நண்பராக சாமி. சிதம்பரனார் திகழ்ந்தார். பெரியார் வெளியூர், சுற்றுப்பயணங்கள் செல்லும் காலங்களில் 'குடியரசு' இதழின் பொறுப்பாசிரியராக விளங்கினார். பெரியார் முதன்முதலாக மலேசியா சென்றபோது உடன் சென்றார். "காந்திக்கு 'மகாத்மா' வேண்டாம், 'திரு' போதுமென்றால் ஈ.வெ.ரா.வுக்கும் 'திரு' போதுமே; பெரியார் எதற்கு?" என்று சுயமாரியாதை மாநாட்டில் துணிச்சலாகக் கேள்வி எழுப்பியவர் சாமி. சிதம்பரனார்தான். முதன்முதலில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை, அவரது அனுமதியுடன் 'தமிழர் தலைவர்' என்னும் பெயரில் உள்ளது உள்ளபடி நூலாக எழுதி வெளியிட்டவரும் சாமி. சிதம்பரனாரே! இன்றளவும் அது முக்கியமானதொரு நூலாக ஆய்வாளர்களால் போற்றப்பட்டு வருகிறது. 'குடியரசு' தவிர 'திராவிடன்', 'விடுதலை', 'பகுத்தறிவு', 'புரட்சி' போன்ற இதழ்களுக்கும் சிறந்த பங்களிப்புத் தந்துள்ளார்.

சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகமாகப் பரிணமித்த காலத்தில், 1940களில் பெரியாருடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாட்டால் கழகத்திலிருந்து வெளியேறினார். திராவிடர் கழகம் முன்வைத்த ஆரிய-திராவிடப் பாகுபாட்டைச் சாமி. சிதம்பரனார் ஏற்கவில்லை. "சாதிப் பிரிவினைகள் தமிழர்கள் அறியாத ஒன்று. ஆரியர்களாலே புகுத்தப்பட்டது அது" என்ற கருத்துக்களை மக்களிடையே சிலர் பரப்பி வந்தபோது, அதுபற்றி தீவிரமாக ஆராய்ந்து, "வகுப்புப் பிரிவும் வருணாசிரம முறையும் ஆரியர்களிடம் இல்லை. இந்தியாவில் மட்டுமே வருணாசிரம முறைக்கு அடிப்படையான வகுப்புப் பிரிவுகள் நிலைத்திருந்தன! ஆதலால் ஆரியர்கள் இங்கு வந்த பின்னர்தான் இப்பிரிவினைகளை ஒப்புக்கொண்டனர் மற்றும் தங்கள் இலக்கியங்களிலும் ஏற்றுக் கொண்டனர். ஆரியர் குடியேறிய ஏனைய நாடுகளில் பிறவியிலேயே சாதி வேற்றுமை இல்லாதிருப்பதற்கும், இந்தியாவில் மட்டுமே இருப்பதற்கும் இதுவேதான் காரணமாகும்" என்ற தன் கருத்தை ஆணித்தரமாக முன்வைத்தார். இதனால் பல எதிர்ப்புகளைச் சந்தித்தார் என்றாலும் தயங்காது தம் கருத்துக்களை பல கட்டுரைகள்மூலம் எழுதி வந்தார்.

பின் தமிழாசிரியர் பணியிலிருந்து விலகி பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்து சமூகப் பணியாற்றத் துவங்கினார். கும்பகோணத்தில் 'முன்னேற்றம் பிரஸ்' என்ற அச்சகம் ஒன்றைத் தொடங்கி நடத்தினார். 'அறிவுக்கொடி' என்ற மாத இதழையும் துவங்கினார். கலை, இலக்கியம், ஆய்வு, சமூக சீர்த்திருத்தம், விஞ்ஞானம், இசை, மருத்துவம், பெண்கள் முன்னேற்றம், தமிழ் வளர்ச்சி என்பனவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு அது வெளிவந்தது. ஆனாலும் பத்திரிகை, அச்சகம் நடத்தினால் பெருமளவு நேரம் அதற்கே செலவழிக்க நேர்ந்தது. தம் ஆர்வத்துக்கும், ஆராய்ச்சிக்கும் நேரம் ஒதுக்க முடியவில்லை என்பதால் அவற்றை விற்றுவிட்டார். பின்னர் மனைவியுடன் சென்னைக்குக் குடிபுகுந்தார். ம. சிங்காரவேலு முதலியார், ப. ஜீவானந்தம், மணலி கந்தசாமி போன்ற பொதுவுடைமை இயகத்தினருடனான நட்பு தீவிரமானது. 'சரஸ்வதி', 'தாமரை' போன்ற பொதுவுடைமை இயக்க இதழ்களிலும், 'தினமணி', 'வெற்றிமுரசு', போன்ற இதழ்களிலும் கதை, கவிதை, கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார்.

"அதிகார பீடத்தில் ஏறி நிற்பார்
ஆகட்டும் பார்க்கின்றோம் பொறுங்கள் என்பார்

கதியின்றித் தினந்தோறும் செத்துப் போகும்
மக்கள் துயர் காணாத குருடர் ஆனார்

சதிகாரர் சுகமாக வாழுகின்றார்
சாதி மத இனம் என்னும் படைபலத்தால்

கொதிநீரில் அகப்பட்ட புழுவைப் போலக்
கொடுமையால் வேகின்றார் ஏழை மக்கள்"

என்பது போன்ற அவரது கவிதைகள் அவரது மனதைப் படம்பிடிக்கின்றன. சமூக சிந்தனையோடு இலக்கிய ஆய்விலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார் சாமி. சிதம்பரனார். திருக்குறளையும், சிலம்பையும், கம்பராமாயணத்தையும் நுணுக்கமாக ஆய்ந்து கட்டுரைகளும் நூல்களும் எழுதியிருக்கிறார். பல்லாயிரம் பாடல்களைக் கொண்ட கம்பராமாயணத்திலிருந்து சிறந்த பாடல்களைத் தேர்தெடுத்து, கம்பராமாயணத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 'கம்பன் கண்ட தமிழகம்', 'வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்', 'சிலப்பதிகாரக் காலத்து தமிழ்நாடு' போன்ற நூல்கள் அவரது நுண்மான் நுழைபுலத்தையும், ஆய்வுத் திறனையும் வெளிக்காட்டுவன. "சாமி சிதம்பரனார் பழுத்த தமிழ்ப் புலவர். தமிழ்நாட்டு முதல்வரிசை முற்போக்கு எழுத்தாளர். தமிழால் தமக்கும், தம்மால் தமிழுக்கும் பெருமை ஏற்பட வாழ்ந்த அறிஞர்... அவர் ஒரு தமிழ்ச் சித்தர்" என்கிறார் ஜீவா.

'பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்', 'தொல்காப்பியத் தமிழர்', 'வளரும் தமிழ்', 'இலக்கியம் என்றால் என்ன?', 'பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்' போன்ற சிதம்பரனாரின் நூல்கள் முக்கியமானவை. 'தொல்காப்பியம்', 'சங்க இலக்கியம்', 'பதினெண் மேல்கணக்கு', 'பதினெண் கீழ்க்கணக்கு' போன்றவற்றுக்கு ஆய்வுரைகள் எழுதியுள்ளார். தாமரை இதழில் வெளியான 'சிறுகதை இலக்கியம்', 'தமிழும் வடமொழியும்', 'கிணற்றுத் தவளைப் புலவர்கள்', 'பின்னோக்கிச் செல்லும் பெரியோர்கள்' போன்ற கட்டுரைகள் பாராட்டுப் பெற்றவை. பள்ளிப் பாடநூல்கள் பல எழுதியுள்ளார். தம்முடைய 'இலக்கிய நிலையம்' என்ற பதிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்ட 'குறுந்தொகைப் பெருஞ்செல்வம்' என்னும் மாணவர்களுக்கான நூல் முக்கியமானது. 'லோகோபகாரி', 'ஜனசக்தி' போன்ற பத்திரிகைகளில் ஆசிரியர் பொறுபேற்றுத் திறம்பட நடத்திய சாமி. சிதம்பரனார், அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த 'ஸ்டார் பிரசுரம்', 'தமிழ்புத்தகாலயம்', 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' போன்ற பதிப்பகங்களுக்கும் சிங்கை 'தமிழ் முரசு' போன்ற நாளிதழ்களுக்கும் படைப்புகளைத் தந்துள்ளார். 'இன்பசாகரன்', 'அணைந்த விளக்கு' போன்ற அவரது நாடகங்கள் படித்து இன்புறத்தக்கன. 'சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்' என்ற நூல் சித்தர் தத்துவங்களுக்குப் புதுவிளக்கம் கூறும் நூலாகும். 'வள்ளலார் கூறும் வாழ்க்கை நெறி' என்ற நூலும் அவரது ஆய்வுத் திறனை வெளிப்படுத்துவதாகும். குறிப்பாக அதில் 'செத்தாரை எழுப்புதல்' என்ற வள்ளலாரின் கூற்றுக்குச் சாமி. சிதம்பரனார் கூறியிருக்கும் விளக்கம் மிக முக்கியமானது. 'அருட் பிரகாசர் அமுத வாசகம்', 'பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்', 'அருணகிரியார் குருபரர் அறிவுரைகள்' போன்ற நூல்கள் அவரது பரந்துபட்ட அறிவைக் காட்டுவன.

இலக்கியம், சமுதாயம், அரசியல், தத்துவம் எனச் சுமார் 62 நூல்கள் எழுதியுள்ள சாமி. சிதம்பரனார், "ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் தமிழரிடையே புகுத்தினர் என்பது உண்மையன்று.... தமிழ் இலக்கியங்கள் நன்றாகக் கற்றவர்களுக்கு இவ்வுண்மை தெரியும். இவ்வுண்மையை உணர்ந்த புலவர்களில் கூடச் சிலர் இதை மறைக்கின்றனர். 'தமிழர்களிடம் எவ்விதமான பொருந்தாப் பழக்கமும் இருந்ததில்லை. எந்தக் குருட்டு நம்பிக்கையும் இருந்ததில்லை. இன்றைய விஞ்ஞான அறிவுபெற்ற பகுத்தறிவாளர்களைப் போலவே அன்றும் வாழ்ந்தனர். தமிழ்நாட்டிலே புகுந்த ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும், குருட்டு நம்பிக்கைகளையும் தமிழர்களிடம் புகுத்தினர்' என்று கூறுகின்றனர். இவர்கள் கூற்று வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் வடமொழியில் கொண்டிருக்கும் வெறுப்பும் இதற்கொரு காரணம்." என்று கூறுகிறார். "இன்று நடப்பது விஞ்ஞான யுகம். விஞ்ஞான வளர்ச்சி காரணமாகப் பண்டைய பழக்கங்கள் சிலவற்றைத் தவறு என்று சொல்லுகின்றோம். பண்டைய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் சிலவற்றை மூடநம்பிக்கைகள் என்று மொழிகின்றோம். விஞ்ஞான அறிவுக்கு ஒத்துவராத சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் பண்டைக்கால மக்களிடம் இருந்தன. நாகரிகம் பெற்ற எல்லா இனத்தினரிடமும் இவைகள் இருந்தன. தமிழர்களிடமும் இத்தகைய பழக்கங்களும், நம்பிக்கைகளும் இருந்தன என்பதில் வியப்பில்லை." என்று அவர் கூறுவது சிந்திக்கத் தகுந்த ஒன்று. மேலும் அவர், "தமிழுக்கும் வடமொழிக்கும் இருந்து வந்த, இருந்து வரும் தொடர்பு தமிழுக்குத் தீமை விளைவித்து விடவில்லை; நன்மைதான் தந்தது; பல துறைகளில் தமிழ் இலக்கியத்தை வளம்பெறச் செய்தது" என்கிறார்.

தமது 'தொல்காப்பியத் தமிழர்' என்ற நூலில், "பண்டைத் தமிழகத்திலே உருவ வணக்கம் இருந்ததில்லை; அது இந்நாட்டிலே குடிபுகுந்த ஆரியரால் புகுத்தப்பட்ட வழக்கம் என்று சிலர் சொல்லுகின்றனர். இதற்கு ஆதாரம் ஒன்றுமில்லை. இது வெறுப்பைத் தூண்டும் வீணான கூற்று. உருவ வணக்கமுறை எல்லா நாடுகளிலும் இருந்தது. பழைய பைபிளைப் படிப்போர் இதைக் காணலாம். பல நாட்டு வரலாறுகளிலும் இதைக் காணலாம். தமிழ்நாட்டிலும் உருவ வணக்கமுறை இருந்தது என்பதை தொல்காப்பியத்தால் அறியலாம்" என்று கூறுவது சிந்திக்க வேண்டிய ஒன்று. தன் ஆய்வுக் கருத்தை உள்ளது உள்ளபடி விளக்கிக் கூறினாலும் இறுதிவரை நாத்திகராகவே இருந்தார் சாமி. சிதம்பரனார். பண்டை இலக்கியங்களின் வாயிலாக தமிழர்தம் வாழ்முறை, நாகரிகம், பண்பாடு, கலை போன்றவற்றை தெளிவுபடுத்துவதும், விளக்குவதும் தான் அவரது நோக்கமாக இருந்ததே தவிர, அதில் எந்தவித மதச் சார்பும், உள்நோக்கமும் இருந்ததில்லை.

தமிழ், சமூகம் என்றே சிந்தித்து, வாழ்நாள் முழுதும் அதன் முன்னேற்றத்திற்காக உழைத்த சாமி. சிதம்பரனார், ஜனவரி 10, 1961ல் 'நற்றிணைக் காட்சிகள்' என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும்போது திடீரென மயக்கமடைந்தார். பக்கவாத நோயால் தாக்குண்டார். மணலி கந்தசாமி, ராஜாஜி, கண. முத்தையா, பெ. தூரன் போன்ற பலர் உதவி, சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்தும் பலனின்றி 17ம் நாளன்று உயிர்நீத்தார். பொது சகாப்தம் 2000த்தில் அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. தமிழர்கள் மறக்கக்கூடாத முன்னோடிகளுள் சாமி. சிதம்பரனாரும் ஒருவர்.

(தகவல் உதவி : "யாதும் ஊரே" மாத இதழ் - சாமி. சிதம்பரனார் சிறப்பு மலர்")

பா.சு. ரமணன்

© TamilOnline.com