கேட்பதை நிறுத்தினால் பதில் கிடைக்கும்!
அன்புள்ள சிநேகிதியே

என் பெண்ணுக்கு வயது 34. கல்யாணம் ஆகவில்லை. நாங்கள் சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறாள். அவளாகவும் எதுவும் முடிவைச் சொல்லவில்லை. அவளுடைய தங்கை, தம்பி இருவருமே தங்களுக்கு ஏற்றவர்களை பார்த்துக்கொண்டு செட்டிலாகி விட்டார்கள். விருந்தினர்போலப் போய் பங்கேற்றுவிட்டு வந்தோம். அவர்கள் விஷயத்தில் எங்கள் கடமை முடிந்தது. இந்தப் பெண்ணுக்கும் ஒரு நல்லது நடந்தால், எங்கள் வயதான காலத்தில் எங்கே இருப்பது என்பதை முடிவுசெய்யலாம். ஆனால் இவள் வேண்டும் என்றும் சொல்லாமல், வேண்டாம் என்றும் இல்லாமல் எங்களைச் சித்திரவதை செய்கிறாள். அவரவர் பேரக் குழந்தைகளைப் பற்றிப் பெருமை பேசிக் கொள்ளும்போது எங்களுக்கும் அந்த ஆசை இருக்காதா? வேதனையாக இருக்கிறது. பெரியவீடு இருக்கிறது. இங்கேயே தங்கிக்கொண்டு வேலைக்குப் போகக்கூடாதா? 3 மாதத்திற்கு ஒருமுறை தலையைக் காட்டுகிறாள். ஃபோன் செய்தால் வாய்ஸ்மெயில் போகிறது. ஒருமுறை நல்ல ஜுரம் போலிருக்கிறது. 4 நாட்களாக அவளுடைய அபார்ட்மெண்டில் முடங்கிக் கிடந்திருக்கிறாள். எங்களுக்குச் சொல்லவில்லை. நான் அம்மா என்று எதற்கு இருக்கிறேன்! ஒரு ரசம் வைத்து எடுத்துக்கொண்டு போயிருக்க மாட்டேனா? எதையும் சொல்வதில்லை. பிறரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியொண்ணும் இந்த ஊரில் பிறந்து வளர்ந்த குழந்தைகளைப் போல மாடர்ன் ஆக வளர்க்கவில்லை. நாங்கள் இங்கே செட்டில் ஆகும்போது, அவள் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்து 13 வயதில்தான் வந்தோம். நன்றாகத்தான் எங்களுடன் எல்லா இடங்களுக்கும் வருவாள். வீட்டுப் பூஜைகளில் கலந்து கொள்வாள். இப்போது எல்லாமே மாறிப் போய்விட்டது. என் கணவர், "நீ எப்போது பார்த்தாலும் புலம்பிக் கொண்டே இருக்கிறாய். உன் அறுவை தாங்காமல் அவள் வருவதையே நிறுத்திவிட்டாள்" என்று என்னையே குறை சொல்கிறார். நீங்களே சொல்லுங்கள், ஒரு தாயால் கவலைப்படாமல் இருக்க முடியுமா? அவர்கள் நல்லதுக்குத்தானே நாம் சொல்கிறோம். தனியாக அவள் வாழ்நாளைக் கழிக்க வேண்டியிருக்குமோ என்ற பயம் என்னை அரிக்கிறது. "எனக்குச் சரியாகப் பேசத் தெரியவில்லை" என்று என் பசங்களும் சொல்கிறார்கள். 'எப்படிப் பேசுவது' என்று ஏதாவது ட்ரெய்னிங் இருக்கிறதா, இந்தப் பெண்களுக்கு எப்படி புத்தி சொல்வது என்று ஏதாவது கோர்ஸ் இருக்கிறதா என்று சொல்லுங்கள். என்னுடைய நிலைமை என்னைப் போல பெண்ணை வைத்து இருக்கும் பெற்றவர்களுக்குத்தான் புரியும்.

இப்படிக்கு
ஒரு பைத்தியக்கார அம்மா


அன்புள்ள சிநேகிதியே

ஒரு தாயின் பாசத்தை, பொறுப்பை, அங்கலாய்த்து வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். ஒருவகையில் பார்த்தால் பாசத்தைச் சுமக்கும் எல்லோருமே பைத்தியக்கார டைட்டிலை வைத்துக் கொள்ளலாம். சமூகக் கோட்பாடுகளின் கண்ணால் நாம் பாசத்தைப் பார்க்கும்போது, பயம், பாதுகாப்பு என்ற உணர்ச்சிகள் நம்மை கண்ட்ரோல் செய்து, அந்தப் பாச உடைமைகளை அனுபவிக்காமல் செய்துவிடுகின்றன. அது பொருளாகட்டும், மனிதராகட்டும் - ஆசை அதிகமாகும்போது, பொறுப்போடு வரும் கவலை நம்மை உறவையோ, பொருளையோ ரசிக்க முடியாமல் தவிக்கிறோம்.

உங்களால் அனுமானிக்கப்பட்ட சமூகக் கோட்பாடுகள் உலகத்தில் உங்கள் பெண் இல்லை. அவளுடைய கலாசாரச் சூழலில் திருமணம், வாழ்க்கை என்பதற்கு வேறு அர்த்தங்கள் உண்டு. அவளுடைய உலகில் சமூகக் கட்டுப்பாடுகள் இல்லை. தனிமனித சுதந்திரமும், கோட்பாடுகளும்தான் உண்டு. துரதிர்ஷ்டவசமாக, உங்கள் ஆதங்கம் அங்கே புரியாது. உங்களைப் போன்ற பெற்றோர்களுக்கு (அவர்கள் எந்த தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்) புரியும். ஆனால், அந்தப் புரிதல் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு சொல்லாது.

சில மாதங்களுக்கு முன்னால் என்னுடைய அருமையான தோழி ஒருத்தியைப் பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்தேன். (அருமையான தோழி என்கிறீர்கள். பின் எப்படி தொடர்பை விட்டுவிட்டீர்கள் என்று கேட்காதீர்கள். காலத்தின் வேகத்தில் தொடர்புகள் அறுந்திருக்கும். ஆனால் உறவு முறியாது). அவளுக்கு 2 பெண்கள். "சிறியவள் திருமணமாகி மகிழ்ச்சியாக கணவன், குழந்தைகளுடன் இருக்கிறாள்" என்றாள். பெரியவளைப் பற்றிக் கேட்டேன். என் தோழியின் பதில். "அவள் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறாள் அவளுடைய உலகத்தில். அவளுக்கு துணை வேண்டும் என்று முடிவு எப்போது செய்கிறாளோ, அப்போது செய்துகொள்ளட்டும். நமக்கு பொறுப்பு கழிந்து நிம்மதி வேண்டும் என்று அவள் நிம்மதியைக் கெடுப்பானேன்?" ஒரு அருமையான, முதிர்ச்சியான பதில். "உடனே புலம்பலை நிறுத்துங்கள். அந்த முதிர்ச்சிக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்" என்று நான் சொல்லமாட்டேன். ஒரு தாயின் கவலை அந்த தாய்க்குத்தான் புரியும். ஆனால், இந்தத் தோழி சொன்னதையும் அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் குறையை மனதிற்குள் இருத்தி, உங்கள் பெண்ணின் உலகில் அவ்வப்போது எட்டிப் பாருங்கள். அவ்வளவு சீக்கிரம் அனுமதி கிடைக்காது. முயற்சி தேவை. இதுபோன்ற உறவுகளில் எப்போது கேள்வி கேட்காமல் இருக்கிறோமோ அப்போது பதில்கள் தானாகக் கிடைக்கும்.

வாழ்த்துக்கள்.
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com