கிரௌஞ்ச வதம் (நாவலின் ஒரு பகுதி)
நாலைந்து நாளைக்கு முன்னால்தான் நாமநகரத்திலிருந்து வந்தேன். பசுவந்தாராவைக் கேட்காமல்தான்! அவரிடம் என்ன சொல்வது? தந்தியை சுருதி சேர்த்து வாசித்தாலன்றி வீணையிலிருந்து இன்னிசை வெளிவருவதில்லை. மனம் இணையாதபோது குடும்பத்தில் சுகம் எங்கிருந்து வரும்?

நடந்து போனதைப் பற்றியோ, இப்போது நடப்பதைப் பற்றியோ யாரைக் குற்றம் சொல்வது?

பசுவந்தராவின் சுபாவம் சற்று வேறுவிதமாக இருந்திருந்தால் நல்லது என்று ஒரு சமயம் தோன்றுகிறது. நாக்கைப் போலவே மனதுக்கும் வெறும் தித்திப்பு விரைவில் தெவிட்டுகிறது. காரமும் கசப்பும் யாருக்குமே வேண்டியிருப்பதில்லை. புளிப்பும் இனிப்பும் கலந்த சுவைதான் அநேகமாகப் பிடிக்கிறது.

சிறுவயதில் திராட்சையை விட நெல்லிக்கனி எனக்கு அதிகமாகப் பிடிக்கும். "நம் சுலோ உலகத்துக்கே புதுமையானவள்" என்று அம்மா சொல்லுவாள்.

உண்மையில் நான் உலகத்துக்கே புதுமையானவள்தானா? பசுவந்தராவைப் போன்ற குணமும் செல்வமும் பொருந்திய கணவன் கிடைப்பதற்குப் பூர்வஜன்மத்தில் தவம் செய்திருக்க வேண்டும் என்ற பேச்சைக் கேட்டுக் கேட்டு ராமநகரத்தில் என் காது புளித்துவிட்டது.

அவரோடு சுகமாகக் குடித்தனம் நடத்த என்னால் ஏனோ முடியவில்லை. அவர் சிறிதளவாவது திலீபனைப் போல் இருக்க வேண்டும். கொஞ்சமாவது வீரம் - கொஞ்சமாவது பரகாக்கிரமம் - கொஞ்சமாவது -

என்னுடைய திலீபன் உலகத்துக்கு அவன் தினகரன்.

அவன் என்ன ஆகப் போகிறானோ? அவனுக்குத் தூக்குத் தண்டனை கிடைக்கும் என்று ராமநகரத்தில் எல்லோரும் சொன்னார்கள். நான் வந்தபோது ரெயிலிலும் அதே வார்த்தைதான் காதில் விழுந்தது.

திலீபனுக்குத் தூக்குத் தண்டனை!

குழந்தைப் பிராயத்திலே எந்த முகத்தைப் பார்த்து என்னை நானே மறந்துவிடுவது வழக்கமோ அந்த முகத்தை ஒரு கறுப்புத்துணி போட்டு மூடப் போகிறார்கள்! எந்தக் கழுத்தை இறுக அணைத்துக்கொண்டு விசித்து விசித்து அழவேண்டுமென்று நான் அடிக்கடி நினைப்பதுண்டோ அந்தக் கழுத்தைச் சுற்றித் தூக்குக் கயிற்றை வளைத்து ராமநகரத்துச் சிறையிலே -

அட கடவுளே!

நான் எவ்வளவு பயங்கொள்ளி!

இதையெல்லாம் மறப்பதற்காக ராமநகரத்திலிருந்து ஓடி வந்தேன். உயிருக்குப் பயந்து வளையை நோக்கி ஓடும் முயல்போல ஓடி வந்தேன். வளைக்குள்ளே முயலை யாரும் வேட்டையாடுவதில்லை. அதுபோல நாமும் பிறந்த வீட்டில் பாதுகாப்போடு இருக்கலாம் என்று நினைத்தேன்.

ஆனால்

நான் வந்த காரணத்தை அப்பாவிடம் சொல்லக் கொஞ்சங்கூட துணிவு ஏற்படவில்லை; அறைக்கதவை உட்புறம் தாழிட்டுக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி வெறித்த பார்வையோடு வெளியே பார்ப்பது, இல்லாவிட்டால் தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு ஓயாமல் அழுவது இவற்றைத் தவிர வேறு ஒன்றுமே எனக்குத் தோன்றவில்லை.

வந்த அன்று எனக்கு ஒரே சோர்வாக இருந்தது. சாப்பாடு ஆனதும் படுக்கையில் போய்ச் சாய்ந்தேன். உடல் அலுத்திருந்ததனாலோ என்னவோ, உடனே கண் அயர்ந்து விட்டேன்.

நள்ளிரவு இருக்கும். திடீரென்று கண் விழித்தேன். என் உடல் முழுவதும் நடுங்கியது. ஒரேயடியாக வேர்த்துக் கொட்டியது. கண்ணைத் திறந்து சுற்றுமுற்றும் பார்த்தேன். என் அறையில்தான் நான் இருக்கிறேன் என்று நம்பவே முடியவில்லை. கண்ணெதிரே அந்தப் பயங்கரமான கனவு தெரிந்தது.

திலீபனுடைய கழுத்தைச் சுற்றிய அந்தப் பாசக்கயிறு, உள்ளுக்கு இழுத்துச் சென்ற அந்த விகாரமான கண்கள் - வெளியே நீண்டு தொங்கிய அந்த நாக்கு...

சிறுவயதில் ஏதாவது பயம் தோன்றினால் நான் அப்பாவிடம் குடுகுடுவென்று ஓடிப்போய் அவரைக் கட்டி அணைத்துக்கொண்டு அவர் மடியில் ஒளிந்துகொள்வது வழக்கம். ஆனால் இன்று...

இன்று நான் பெரியவளாகிவிட்டேன். அப்பாவைக் கட்டிக்கொண்டு அழுவது எனக்கு வெட்கமாக இருக்கிறது. பெரியவர்களாவதே ஒரு சாபந்தான் என்று இந்த மாதிரி சமயத்தில் தோன்றுகிறது. என் துன்பங்களை அப்பாவிடம்கூடச் சொல்லாமல் மறைத்து வைத்துக்கொள்ள வேண்டிய நாள் வந்துவிட்டது.

அந்தப் பயங்கரக் கனவு மறுபடி தென்படுமோ என்னவோ என்ற எண்ணத்தினால் அப்புறம் தூங்க எனக்கும் பயமாக இருந்தது. சிறுபிராயத்தில் என் பிடிவாதத்துக்கு யாரும் மசியாவிட்டால் நான் அழுது அழுது உறங்கிவிடுவேன். அப்போது ஓர் அழகிய வனதேவதை எனக்கு வேண்டிய பொருளைக் கனவில் கொண்டுவந்து கொடுப்பாள். ஆனால் இன்றைக்கு எந்த வனதேவதையும் என் கனவில் வருவதாக இல்லை. திலீபனை விடுவிப்பதாக இல்லை.

திலீபன் - திலீபன் - திலீபன்

ஜபமாலையைக் கையில் வைத்துக்கொண்டு அவன் பெயரை ஓயாமல் ஜபித்து, தனிமையில் நான் எவ்வளவு கண்ணீர் வடித்தாலும் அதனால் என்ன பயன்?

ஓவியக் காட்சியில் நான் விலைக்கு வாங்கிய ‘கிரௌஞ்ச வதம்’ என்ற படத்தைப் பார்த்து, திலீபன் என்னை எவ்வளவு பரிகாசம் செய்தான்! "எந்தப் புரட்சியும் கண்ணீரினால் நடப்பதில்லை. புரட்சிக்குப் பிடித்தமான நைவேத்தியம் ஒன்றே ஒன்றுதான்! அதாவது அன்பர்களின் ரத்தம்!" என்று அவன் சொன்னான்.

அவனுடைய பேச்சு அப்போது எனக்கு விசித்திரமாகத் தோன்றிற்று. இப்போது என்ன நான் திலீபனுக்காக என் ரத்தத்தைச் சிந்தத் தயாராகி விட்டாலும்கூட அதனால் அவன் விடுதலை பெறுவானா?

மாட்டான்!

எனக்குத் தூக்கமே வரவில்லை. ஒளியைக் கண்டால் பயமாக இருக்கிறது. உட்கார்ந்து உடம்பு மரத்துப் போகிறது. விளக்கை அணைத்துவிட்டு இருட்டில் படுக்கையில் போய் விழுகிறேன்.

அந்த இருட்டில் எனக்கு என் வாழ்க்கைப் படம் தென்படுகிறது. அந்தப் படத்தில் மிகவும் சிக்கலான நிகழ்ச்சி இப்போது ஆரம்பித்திருக்கிறது. அதன் முடிவு என்ன ஆகுமோ?

என்ன ஆகுமோ? யாருக்குத் தெரியும்? நோயாளிக்குப் பொறுக்க முடியாத வேதனை இருந்தால் மயக்க மருந்து கொடுப்பார்கள். நானும் மனத்தை அப்படித்தான் மயக்கநிலையில் வைத்திருக்கப் போகிறேன். பழைய நினைவுகள் மாந்தருக்கு அளவற்ற மகிழ்ச்சி தருகின்றன. எலுமிச்சம்பழம் ஊறுகாய் பழகப்பழகப் புளிப்பும் இனிப்பும் கலந்து ருசியாக இருக்கும். வாழ்க்கையின் பழைய நினைவுகளும் அதைப்போலவே சுவை நிரம்பியவை.

ஆவணி மாதம் நான் பிறந்தேன். கோகுலாஷ்டமியன்று நோவெடுக்க ஆரம்பித்ததும், "இன்று அஷ்டமி. எனக்குப் பிள்ளைதான் பிறக்கும். அதற்கு நான் கிருஷ்ணன் என்று பெயரிடப் போகிறேன்" என்று அம்மா உருப் போட்டாளாம்.

மனிதன் தன் சின்னஞ்சிறிய ஆசைகளைக் கொண்டு கோட்டை கட்டுகிறான். ஆனால் விதி ஒன்று இருக்கிறதே? அது விஷமக் கொடுக்கான பையனைப் போன்றது. அந்தச் சின்னஞ்சிறு கோட்டைகளைத் தகர்த்து எறிவதில் அதற்கு விந்தையான மகிழ்ச்சி.

"என்ன?" என்று அம்மா மருத்துவச்சியைக் கேட்டாள்.

"பெண்குழந்தை" என்று அவள் பதில் சொன்னாள்.

அம்மாவின் ஆனந்தம் சிறிது தணிந்தது. அறைக்கு வெளியே அமைதியின்றி அங்கும் இங்கும் நடைபோட்ட அப்பாவுக்கு மட்டும் இதைக் கேட்டு பேரின்பம் உண்டாயிற்று.

"நான் பெண்தான் வேண்டுமென்று விரும்பினேன். இந்தக் காலத்தில் பையன்களைவிடப் பெண்கள் அதிகம் கெட்டிக்காரர்கள்" என்று அவர் அப்புறம் அம்மாவிடம் பல தடவை சொன்னதுண்டு.

ஒவ்வொரு வருஷமும் என் பிறந்த நாளன்று அம்மா எனக்கு ஆலாத்தி சுற்றிக் காட்டுவாள். அப்போது அவள் கண்ணிலே ஆனந்தஜோதி மிளிரும். ஆனால் பிறகு அவள் தனியே சாப்பிட உட்காரும்போது சோற்றை உருட்டிக் கையிலேயே வைத்துக் கொண்டிருப்பாள்.

அது என் எட்டாவது பிறந்த நாளோ, ஒன்பதாவது பிறந்த நாளோ சரியாக நினைவில்லை. அன்று நான் நிறைய கூழ் வடாம் சாப்பிட்டேன். வெளியே வந்து ஒரு மணி நேரங்கூட ஆகியிருக்காது. அதற்குள் நல்ல தாகம் எடுத்தது. சமையலறைக்குப் போனேன். அம்மா தனியாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் கையில் இருந்த கவளம் அப்படியே இருந்தது. அவள் எங்கேயோ கவனமாக இருந்தாள். அவளை நான் உற்றுப் பார்த்தேன். அவளுடைய கண்ணிமைகளில் ஈரம் படிந்திருப்பதாக எனக்குத் தோன்றிற்று. நான் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு, "என்ன அம்மா நடந்தது/" என்று கேட்டேன்.

"ஒன்றும் இல்லியே!" என்று அவள் பதில் சொன்னாள்.

"சும்மாதான் ஒருத்தர் அழுவார்களாக்கும்?" என்று நான் பாட்டிக் கிழவி போலக் கேட்டேன்.

"கறிகாய் நறுக்கும்போது விரலில் பட்டது. அந்தக் காயத்தில் சாம்பார் எரிகிறது"

"எங்கே பார்க்கலாம்"

அம்மா அந்தக் காயத்தைக் காண்பிக்கவே இல்லை. அவள் என்னை ஏமாற்றுகிறாள் என்று நிச்சயமாகத் தெரிந்துவிட்டது.

நான் நீதிப்பாடலை ஒப்பிப்பது போல எடுப்பான குரலில், "ஒருபோதும் பொய் பேசாதே!" என்றேன்.

வெயிலும் மழையும் ஒன்றின அவள் கண்களில் நீர் இருந்தது; இதழில் முறுவல் இருந்தது. அவள் என்னை அருகில் இழுத்து முத்தமிட்டு, "நீ மகா பொல்லாதவள்!" என்றாள்.

அம்மா எச்சில் வாயோடு ஈந்த முத்தம் - அது என் உதட்டில் பட்டதும் என் உடலில் ஒவ்வோர் அணுவும் ஆனந்த தாண்டவம் ஆடியது. கடைசியில் அம்மா தன் கண்ணீருக்குக் காரணம் சொன்னாள், "என் சுலோ பிள்ளையாகப் பிறந்திருக்கக் கூடாதா?" என்பதுதான் அவளுடைய குறை.

சிறுகுழந்தை என்பது அந்த வீட்டுக்கு ரேடியோ. வீட்டில் இந்தக் கட்டிலுள்ள செய்தியை அந்தக் கட்டுக்கு ஒரு கணத்திலே அறிவிக்க அது பயன்படுகிறது.

அம்மா சாப்பிடும்போது அழுதாள் என்ற செய்தி உடனே அப்பாவுக்கும் எட்டியது.

அன்று அப்பா, அம்மாவிடம் உட்கார்ந்து வெகுநேரம் என்ன என்னவோ சமாதானம் சொன்னார். அதெல்லாம் இப்போது ஞாபகம் இல்லை. ஆனால்...

மழை ஒரு பாட்டம் பெய்து, சற்றுநேரம் நின்று மறுபடி ஒரு பாட்டம் ஆரம்பிப்பது போல இருந்தது அவருடைய பேச்சு. ஆண் பெண் சமத்துவத்தைப் பற்றி அவர் படித்திருந்த அத்தனை விஷயத்தையும் அம்மாவிடம் சொன்னார். எவனாவது ஒரு சுருக்கெழுத்தாளன் அன்று அவர் பேச்சைக் குறித்துக் கொண்டிருந்தால், அப்பாவின் பெயரால் ஒரு நல்ல கட்டுரை வெளியாகியிருக்கும். அப்பா இவ்வளவு அறிவாளி; இவ்வளவு பெரிய பேச்சாளர்; உன்னதமான இலக்கியத்தை இடைவிடாமல் வழிபடுபவர். அன்றாடச் சில்லறைச் செய்திகளைப் பிரசுரிக்கும் பத்திரிகைகளைக் கண்ணெடுத்துப் பார்க்கமாட்டார் - இதெல்லாம் இருந்தும் அவர் தம் வாழ்க்கையில் தம் மையால் ஒரு புத்தகங்கூட எழுதியதில்லை. ஆகையினால்தான் இந்தப் பழைய சம்பவங்கள் என் நினைவுக்கு வரும்போது, எங்கள் வீட்டில் ஒரு சுருக்கெழுத்தாளன் இல்லாமல் போனானே என்று தோன்றுகிறது.

அப்பாவின் அன்றைய பேச்சிலே ஒரு வார்த்தை மட்டும் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அதுமட்டும் ஞாபகம் இருப்பதற்கு என்ன காரணம்?

மங்கிப்போன பழைய போட்டோவிலே நம் உருவத்தை மாத்திரம் நாம் சட்டென்று கண்டுபிடித்து விடுகிறோம் அல்லவா? அது போன்றதுதான் இதுவும்.

"பெண் பிறந்ததற்காக நீ இப்படி வருத்தப்பட வேண்டியதில்லை. பெண்களும் வீரச்செயல் புரிந்திருக்கிறார்கள். கண்ணன் கம்சனைக் கொன்றான் என்பது சரி. ஆனால் கண்ணனுடைய அக்காவும் கம்சனை நன்றாகத் திணற அடித்தாள். அவள் பிறந்ததும் கம்சன் அவளை உயரத் தூக்கியதுதான் தாமதம், உடனே அவள் மின்னல் வேகத்தில் அவன் கையிலிருந்து நழுவி ஆகாயத்தில் பறந்து போய்விட்டாள். நம் சுலோவும் அப்படித்தான் இருப்பாள் - மின்னலாக!" என்று அவர் அம்மாவிடம் சொன்னார்.

அம்மாவுக்குச் சமாதானமாக அவர் சில சமயம் இப்படிப் புராணக் கதைகளைச் சொல்வதுண்டு. பொதுவாகப் புராணக் கதைகள் எல்லாமே கட்டுக்கதைகள் என்பதுதான் அவருடைய கொள்கை.

"நம் சுலோவும் அப்படித்தான் இருப்பாள் - மின்னலாக!" என்று அவர் சொன்னபோது அவருடைய கண்ணிலே தென்பட்ட பெருமையை இன்னமும் நான் மறக்கவில்லை.

நான் மின்னலாக வெட்டி மின்னினேனா?

இல்லை.

ஏன் மின்னவில்லை? எனக்கு என்ன குறை இருந்தது? ஆண் பிள்ளைக்குக் கூடக் கிடைப்பதற்கு அரிய கல்விப் பயிற்சியை அப்பா எனக்கு அளித்தார்.

பின்னே? அப்படி இருந்தும் நான் ஏன் மின்னலாகவில்லை?

இனிமேலாவது நான் மின்னலாக முடியாதா?

கண்ணனுடைய அந்த மின்னல் அக்கா, தன்னை மட்டுந்தான் சிறையிலிருந்து விடுவித்துக் கொண்டாள். ஆனால் நான் திலீபனை ஒரு சமஸ்தானத்துச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டுமே! பழிவாங்கும் நோக்கத்தோடு சமஸ்தான அதிகாரிகள் அவனுடைய கழுத்தில் பாசவலை வீசியிருக்கிறார்கள்.

அடியம்மா! அந்தக் காட்சியை நினைத்துக் கொண்டாலே என் உடல் நடுங்குகிறதே!

திலீபா, அடே திலீபா... நீ எதற்காக அடா என் வாழ்க்கையில் வந்தாய்? இருட்டை நீக்க விளக்கு முன்வருகிறது. அப்போது இருட்டில் மறைந்திருக்கும் காற்று விளக்கை அணைத்து விடுகிறது. இப்படித்தானேடா ஆயிற்று உன் வாழ்வு?

மூலம் வி.எஸ்.காண்டேகர்;
தமிழில் : கா.ஸ்ரீ.ஸ்ரீ

© TamilOnline.com