தென்றல் பேசுகிறது...
"அந்தச் செய்தியைக் கேட்டதும் என் காலுக்குக் கீழிருந்த நிலம் பிளந்து என்னை அப்படியே விழுங்கிவிடக் கூடாதா என்று நினைத்தேன்" என்று நாவல்களில் நாம் படித்ததுண்டு. லூசியானா மாகாணத்தின் ஓரிடத்தில் பூமி பிளந்து நிலத்தை விழுங்குகிறதாம். டென்னிஸ் லேண்ட்ரியும் அவர் மனைவியும் ஒரு படகில் செடர் மரங்கள் அணிவகுத்து நிற்கும் கரையைக் கொண்ட பேயூ கோர்ன் நதியில் ஜாலியாகப் போய்க் கொண்டிருந்தபோது நுங்கும் நுரையுமாக ஓரிடத்தில் கொப்புளித்து வருவதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டு மாதங்களில் 325 அடி அகலத்திற்கு, நூற்றுக்கணக்கான அடி ஆழத்திற்கு நிலம் பிளந்து நூறடி உயரமெல்லாம் நின்ற மரங்களை விழுங்கிவிட்டது. இன்றைக்கு அந்த அசுரப் பிளவு 25 ஏக்கர் பரப்பாகிவிட்டது. மேலும் விரிந்துகொண்டே இருக்கிற அந்தப் பெரும்பள்ளத்தில் இருந்து மீதேன் வாயு சீறிப் பாய்கிறது. "அதற்குள்ளே நான் நரகத்தைப் பார்த்தேன்" என்கிறார் அதை முதலில் பார்த்த லேண்ட்ரி.

"ஆறிடும் மேடும் மடுவும் போல" என்றார் ஔவையார். இதைக் கேளுங்கள். பாகிஸ்தானில் பலுசிஸ்தான் கடற்கரைப் பகுதியில் அண்மையில் 7.7 ரிக்டர் அளவுக்கு ஒரு நில அதிர்ச்சி ஏற்பட்டது. அதையடுத்துக் கடலில் ஒரு சிறிய தீவே தோன்றிவிட்டதாம். 2004ம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு "பூமி ஒரு கோவில் மணியைப் போல அதிர்ந்துகொண்டிருக்கிறது" என்று விஞ்ஞானிகள் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. இயற்கையை மனிதன் மதித்து நடந்தால் இயற்கை மனிதனை மதிக்கும் என்பதற்கு அப்பால் சொல்ல வேறெதுவும் இல்லை.

*****


அமெரிக்காவில் கச்சா எண்ணெய் இறக்குமதியின் அளவுக்கு அதிகமாகவோ அதற்கு அருகாகவோ அதன் உள்நாட்டு உற்பத்தி ஆகியிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சுத்திகரிப்பு நிலையங்களும் மிக உயர்ந்த திறனோடு, சுமார் 90 சதவீதத்துக்கு அருகில், செயல்பட்டு வருகின்றன. தவிரவும், கேஸலீன் நுகர்வும் அதிகரித்து வருகிறது. உற்பத்தி அதிகரிப்பும், அதற்கு இணையான பயன்பாடும் பொருளாதார மேம்பாட்டின் அறிகுறிகளில் ஒன்று என்பதால் இந்தப் புள்ளிவிவரங்கள் மகிழ்ச்சி தருகின்றன. வளர்ச்சி தொடரவேண்டும்.

*****


ஒபாமாகேர் (Patient protection and Affordable Health Care Act) மருத்துவக் காப்பீட்டுச் சட்டத்தைப் பெரிய/ சிறிய வணிக நிறுவனங்கள் செயல்படுத்தத் தொடங்கிவிட்டது மற்றொரு நல்ல அறிகுறி. சமூகத்தின் கீழ்த்தட்டுவரை மருத்துவக் காப்பீடு சென்று பாதுகாப்புத் தரவேண்டியது மிக முக்கியம் என்பது ஒருபுறம். வணிக நிறுவனங்கள் தமது முக்கியத் துறை எதுவோ அதில் தனது முழு ஆற்றலையும் செலுத்தாமல் பணியாளர் பிணி தீர்ப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதைத் தவிர்க்க இந்தக் காப்பீட்டுத் திட்டம் உதவும். இந்தியாவிலும், ஒரே மாதிரியான சிகிச்சைக்குக் காப்பீடு இல்லாதவர் செலுத்தும் தொகை, காப்பீடுள்ளவர் செலுத்தும் தொகையைவிட அதிகம் என்று ஒரு வியப்பான செய்தி வந்திருக்கிறது. மக்கட்தொகையில் வயதானோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்ற இந்தக் காலகட்டத்தில் மருத்துவக் காப்பீட்டின் முக்கியத்துவமும் அதிகரித்து வருகிறது. இதைப் பரவலாக்குவதில் அரசும், நிறுவனங்களும், சமூகமும் கைகோர்த்துச் செயல்படுவது அவசியம். காலத்தின் கட்டாயம்.

*****


இவரைப் பார்த்தால் சட்டென்று இளவயது 'வீணை' எஸ். பாலசந்தர்தானோ என்று தோன்றுகிறது. தாத்தாவின் இசைத் திறனையும் மிகுந்த உழைப்போடும் ஆர்வத்தோடும் தன்னில் வளர்த்து வருகிறார். இளம் இசைக்கலைஞர் பரத்வாஜ் ராமனின் நேர்காணல் இந்த இதழின் சிறப்பு. அமெரிக்காவில் பன்னாட்டுப் புறநானூறு மாநாடு, வள்ளியின் காதல் நாட்டிய நாடகம் என்று கலை, இலக்கிய முயற்சிகள் ஒரு புதிய உயரத்தைத் தொட்டுள்ளன. அவற்றைப் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்த இதழ். நல்ல சிறுகதைகள், அழகாகச் செதுக்கப்பட்ட கவிதைகள் என்று மற்றுமொரு விருந்து உங்கள் கையில்.

வாசகர்களுக்கு நவராத்திரி, பக்ரீத், ஹாலோவீன் வாழ்த்துக்கள். இந்த மாதத்தில் தேசப்பிதா அண்ணல் காந்தியை அன்புடனும் நன்றியுடனும் நினைவு கூர்கிறோம்.

ஆசிரியர் குழு

அக்டோபர் 2013

© TamilOnline.com